கருவேல மரத்தை அகற்றுங்கள்; என்னை பார்க்க சிறைக்கு வராதீர்கள்: வைகோ வேண்டுகோள்.
தேச துரோக வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள வைகோ, தன்னை யாரும் பார்க்க வரவேண்டாம். சீமைக் கருவேல மரத்தை அகற்ற செல்லுங்கள் என தொண்டர்களை கேட்டுக் கொண்டுள்ளார்.
தேச துரோக வழக்கில் மதிமுக தலைவர் வைகோவை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க சென்னை எழும்பூர் குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் அவர் புதிய தலைமுறைக்கு அளித்துள்ள பிரத்யேக பேட்டியில், “ஈழத்தில் இனப்கொலை இதயத்தில் ரத்தம்” என்ற குறுந்தகட்டை லட்சக்கணக்கில் தயாரித்து அன்று ஒவ்வொரு கல்லூரிகளுக்கும் கொண்டு சென்று கொடுத்தேன். இப்போது ஈழத்தில் நடப்பதை மூடி மறைக்க சர்வசேத சதி நடக்கிறது. ஜெனிவாவிலும் சதி நடக்கிறது. அங்கிருக்கும் சம்பந்தன் உள்ளிட்ட ஒரு சில தமிழர்களை வைத்துக் கொண்டு இங்கே ஈழத்தமிழர்களுக்கு குரல் கொடுக்கின்றவர்களை கூட குற்றம்சாட்டுகிற அளவுக்கு நிலைமை படுமோசமாகி விட்டது.
உண்மைகள் வெளியே வர வேண்டும் என்பதற்காகத்தான் ஜாமீன் போடவில்லை. அதேநேரத்தில் மதிமுக நிர்வாகிகளுக்கு திட்டவட்டமாக தெரிவித்துக் கொள்வது என்னவென்றால் நான் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து எந்தவித சிறிய ஆர்ப்பாட்டமும், போராட்டமும் நடத்தக் கூடாது. போக்குவரத்திற்கும், பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படுத்தக் கூடாது.
இதெல்லாம் அரசியல் கட்சிகள் செய்கின்ற வேலை என்கிற பொதுமக்களின் குற்றச்சாட்டுக்கு ஆளாக கூடாது. சீமைக் கருவேல மரங்களை அகற்றும் வேலைகளில் ஈடுபடுங்கள் என்று வைகோ கூறினார். என்னை பார்வையாளர்களாக பார்க்க வேண்டாம் என்றும் தொண்டர்களை அவர் கேட்டுக் கொண்டார்.
கருத்துகள் இல்லை