Header Ads

 • BREAKING  கத்திப்பாரா மறியலில் என்ன நடந்தது? - விவரிக்கிறார் இயக்குநர் கெளதமன்.

  விவசாயக் கடன் தள்ளுபடி, நதிகள் இணைப்பு, காவிரி மேலாண்மை வாரியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் தென்னிந்திய நதிகள் இணைப்புச் சங்கத்தினர் போராட்டம் நடத்திவருகின்றனர். கடந்த ஒரு மாதகாலமாக நடைபெற்று வரும் இந்தப் போராட்டத்தில், எலிக்கறி தின்றும், பிச்சைப் பாத்திரம் ஏந்தியும், மொட்டை அடித்தும் எனப் பலவிதங்களில் விவசாயிகள் தங்களது நிலைமையை எடுத்துரைத்து வந்தனர். 

  பூட்டுப்போட்டு போராட்டம்! 

  கண்ணீர்க்கதையாகப்போன இந்தப் போராட்டத்தின் உச்சமாகக் கடந்த 10-ம் தேதி திடீரென நிர்வாணப் போராட்டத்தில் விவசாயிகள் ஈடுபட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பிரதமர் மோடி அலுவலகம் எதிரே நடந்த இந்த நிர்வாணப் போராட்டம் அனைவர் மனதிலும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. "நிர்வாணம் ஆனது விவசாயிகள் அல்ல... மத்திய அரசின் செயல்பாடு" என்று பலரும் கருத்து தெரிவித்தனர். உணர்வுபூர்வமாகப் போய்க்கொண்டிருக்கும் போராட்டத்துக்கு மத்திய அரசு செவிசாய்க்காத நிலையில், திடீரென இன்று (13-4-17) காலை 9.20 மணிக்கு சென்னை கிண்டி கத்திப்பாரா மேம்பாலத்துக்கு வந்த மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் அந்தப் பாலத்துக்குப் பூட்டுப்போட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞர் அமைப்புடன் கைகோத்த இயக்குநர் கெளதமன், இந்தப் போராட்டத்துக்குத் தலைமை தாங்கினார். மேம்பாலத்துக்குப் பூட்டுப்போட்டதால் போக்குவரத்து முற்றிலும் அந்தப் பகுதியில் முடங்கியது. சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் போராட்டக்காரர்களிடம் சமரசப் பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து மத்திய - மாநில அரசுகளுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பிக்கொண்டிருந்த நிலையில் அவர்களைப் போலீஸார் கைதுசெய்தனர்.

  நடிகையைச் சந்திப்பதற்கு நேரம்! 

  இயக்குநர் கௌதமனிடம் பேசினோம். "கடந்த 30 நாட்களாக நடைபெற்றுவந்த போராட்டத்தின் உச்சமாக விவசாயிகள் நிர்வாணப் போராட்டத்தை நடத்தினர். அப்போதும் ஆளும் வர்க்கம் திரும்பிப் பார்க்கவில்லை. பிரதமரைச் சந்திக்க அழைத்துச்செல்வதாகக் கூறி... விவசாயிகளை அழைத்துச் சென்று, அங்கிருந்த காவல் ஆய்வாளரை மட்டும் சந்திக்கவைத்துவிட்டு... பிறகு அவர்களை நிர்வாணமாகத் துரத்திவிட்டனர். விவசாயிகளின் நலனுக்காக மகாத்மா காந்தி போராட்டம் நடத்தி 100 ஆண்டுகள் எட்டப் போகின்றன. அப்போது பேசிய மகாத்மா காந்தி, 'இந்தத் தேசத்தின் முதுகெலும்பு விவசாயிகள்' என்று முழங்கினார். அவர் கூறிய அந்த முதுகெலும்பைத்தான் தற்போது முறித்து அழித்து வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி. தமிழகத்தில் 500-க்கும் மேற்பட்ட விவசாயிகள்  உயிரிழந்துள்ளனர். அவற்றையெல்லாம் அவர் கண்டுகொள்ளவில்லை. சாமியார் ஒருவர் காட்டை அழித்து, சிலைநிறுவிய நிகழ்வுக்கு மிகவும் மகிழ்ச்சியாக வந்து பங்கேற்றுவிட்டுச் செல்கிறார் பிரதமர். அதேபோன்று, எந்தக் காரணம் சொல்லாமல் ஒரு நடிகைக்கு நேரம் ஒதுக்கத் தெரிந்த பிரதமருக்கு, தலைநகரில் வந்து போராடும் விவசாயிகளைச் சந்திக்க நேரம் இல்லையா? இந்தத் தேசத்தை எதிர்த்து இனியும் போராடாமல் இருந்தால், எங்கள் இனம் அழிந்துவிடும். அதன் காரணமாகத்தான் போராட்டத்தை நடத்தியுள்ளோம்.  

  திடீர் போராட்டம் ஏன்?

  முன்னறிவிப்பின்றி இந்தப் போராட்டத்தை நடத்தக் காரணம் கையாலாகாத அரசாகத் தமிழக அரசு உள்ளது. மத்திய அரசை எதிர்த்து கேள்வி எழுப்பினால், வருமானவரித் துறை அதிகாரிகளை ரெய்டுக்கு அனுப்பிவிடுவார்கள் என்று ஆளும் கட்சிப் பிரதிநிதிகள் வேண்டுமானால் பயப்படலாம். தமிழக மக்கள் பயப்படவேண்டிய எந்த அவசியமும் இல்லை. எங்களைப் பாதுகாப்பதற்குத்தானே தமிழக அரசே தவிர, அவர்கள் செய்யும் ஊழல்களில் இருந்து அவர்களைப் பாதுகாத்துக்கொள்வதற்காக அல்ல. ஏற்கெனவே ஏப்ரல் நான்காம் தேதி விவசாயிகளுக்காக வள்ளுவர் கோட்டத்தில் போராட்டம் நடத்த அனுமதி கோரியபோது காவல் துறை அதிகாரிகள் மறுத்துவிட்டனர். அதனால்தான் தற்போது எந்த அறிவிப்பும் இல்லாமல் போராட்டத்தை நடத்தினோம். இனியும் விவசாயிகளுக்கு ஆதரவாகக் குரல் கொடுக்காமல் தமிழக அரசு ஒதுங்கிப்போனால் அது அரசு அல்ல... அதற்குப் பெயர் பிணம்.  

  உளவுப்பிரிவு தீவிர விசாரணை!

  தமிழக எம்.பி-க்கள் இந்நேரம் நாடாளுமன்றத்தை முடக்கி இருக்க வேண்டாமா... எதற்காக நாடாளுமன்றத்துக்குச் செல்கிறார்கள்? விமானத்தில் ஏறிப்போய்க் கையெழுத்துப் போட்டுவிட்டுச் சாப்பிடுவதற்காக அல்ல... இனிமேலாவது, டெல்லியில் போராடிவரும் விவசாயிகளுக்கு ஆதரவாக அவர்கள் களத்தில் இறங்கவேண்டும். ஜல்லிக்கட்டுக் போராட்டத்துக்கு நடந்ததைப்போன்று இளைஞர்கள் இந்தப் போராட்டத்துக்கும் ஒன்றிணைய வேண்டும்'' என்றபோது அவருடைய அழைப்புத் துண்டிக்கப்பட்டது. பின்னர், விசாரித்ததில் அவருடைய போனைப் போலீஸார் பிடுங்கிச்சென்றது தெரிய வந்தது. கைதுசெய்யப்பட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து15 நாள்கள் சிறையில் அடைக்க உள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.  

  இளைஞர்களின் இந்தப் போராட்டம் குறித்து போலீசாரும் உளவுப்பிரிவு அதிகாரிகளும் உன்னிப்பாகக் கவனித்து வருகின்றனர். அதுமட்டுமன்றி, இந்தப் போராட்டம் குறித்து விரிவான விசாரணையை அவர்கள் முடுக்கிவிட்டுள்ளனர். வேறு எந்த இடத்திலும் மீண்டும் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபடாதவாறு போலீஸார் தீவிரக் கண்காணிப்பில் இறங்கியுள்ளனர். போராட்டம் நடந்த இடத்தில் பலத்த பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. 

  கருத்துகள் இல்லை

  Post Bottom Ad