லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் டெல்லி போலீசாரிடம் நேரில் ஆஜரானார் டி.டி.வி.தினகரன்.
இரட்டை இலை சின்னத்தை மீண்டும் பெற தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு 50 கோடி ரூபாய் லஞ்சம் கொடுக்க முயன்றதாக கூறப்படும் வழக்கில், டெல்லி குற்றப்பிரிவு போலீசார் முன்னிலையில் டி.டி.வி.தினகரன் ஆஜரானார். இரட்டை இலை சின்னத்தை மீண்டும் பெற சுகேஷ் சந்திரசேகர ராவ் என்ற இடைத்தரகர் மூலம் தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு 50 கோடி ரூபாய் லஞ்சம் கொடுக்க முயன்றதாக டி.டி.வி.தினகரன் மீது டெல்லி குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். டெல்லியில் நட்சத்திர விடுதியில் தங்கியிருந்த சுகேஷ் சந்திரசேகர ராவை கைது செய்த போலீசார், அவரது அறையில் இருந்த ஒரு கோடியே 30 லட்சம் ரூபாயையும், அவர் பயன்படுத்திய சொகுசு காரையும் பறிமுதல் செய்தனர். இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர ராவை காவலில் எடுத்து விசாரித்த போலீசார், டெல்லிக்கு வந்து டி.டி.வி.தினகரன் நேரில் விசாரணைக்கு ஆஜராகுமாறு உத்தரவிட்டு, சம்மன் கொடுத்துச் சென்றனர். இதையடுத்து, இன்று காலை சுமார் 9 மணியளவில் சென்னையில் இருந்து விமானம் மூலம் புறப்பட்ட டி.டி.வி.தினகரன் நண்பகல் சுமார் 12 மணியளவில் டெல்லி சென்றடைந்தார். அதன்பின்னர், பிற்பகல் 3 மணியளவில் சாணக்கியபுரி காவல் நிலையத்தில் குற்றப்பிரிவு போலீசார் விசாரணைக்காக ஆஜரானார். முன்னதாக, டெல்லி விமான நிலையத்தில் செய்தியாளர்களின் பெரும்பாலான கேள்விகளுக்கு தனக்கு தெரியாது என்றே பதிலளித்தார்.
கருத்துகள் இல்லை