Header Ads

  • சற்று முன்



    நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்காகவே போராட்டம்.

    நாடு முழுவதும் உள்ள விவசாயிகளின் நலன்களைப் பாதுகாக்கவே தலைநகரில் முகாமிட்டுள்ளதாக தில்லி ஜந்தர் மந்தரில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகள் குழுவினருக்குத் தலைமை தாங்கும் பி.அய்யாக்கண்ணு தெரிவித்தார்.

    தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகள் பெற்ற கடன்களை ரத்து செய்வது, வேளாண் விளை பொருள்களுக்கான ஆதரவு விலையை உயர்த்துவது, விவசாயிகளுக்கு ஓய்வூதியம் வழங்குவது, காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது, நதிகளை இணைப்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தில்லி ஜந்தர் மந்தரில் கடந்த மார்ச் 14-ஆம் தேதி முதல் தேசிய தென்னக நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் தொடர் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இதைத் தொடர்ந்து, 33-ஆவது நாளாக சனிக்கிழமை கடன் கொடுமையால் உயிரிழக்கும் விதவைக் கோலம் பூண்டுள்ள அவர்களின் மனைவி உள்ளிட்ட குடும்பத்தினரின் நிலையை விளக்கும் வகையில், சேலை அணிந்த விவசாயிகள் கழுத்தில் கட்டிய தாலியை எடுப்பது போல சித்திரித்து தங்கள் கவலையை வெளிப்படுத்தினர்.
    இதனிடையே, ஜந்தர் மந்தர் பகுதிக்கு வந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலாளர் டி.ராஜா, முன்னாள் எம்எல்ஏ குணசேகரன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலச் செயலாளர் வே.துரைமாணிக்கம், கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி பொதுச் செயலாளர் ஈ.ஆர். ஈஸ்வரன் ஆகியோர் விவசாயிகளுடன் சாலையில் அமர்ந்து தங்களின் ஆதரவைத் தெரிவித்தனர்.
    அப்போது செய்தியாளர்களிடம் டி.ராஜா கூறுகையில், "விவசாயிகளைக் கடன் சுமையில் இருந்து பாதுகாக்கும் வகையில் விவசாயக் கடன்களை மத்திய, மாநில அரசுகள் தள்ளுபடி செய்ய வேண்டும்' என்றார்.
    இதைத் தொடர்ந்து, அய்யாக்கண்ணு கூறியதாவது: தில்லியில் பஞ்சு மெத்தையில் உறங்குவதற்காகவோ சுகமாக வசிப்பதற்காகவோ நாங்கள் வரவில்லை. 33-ஆவது நாளாக தொடர்ந்து சாலையில் அமர்ந்து, உறங்கிப் போராடி வருகிறோம். ஐந்து நாளைக்கு ஒரு முறைதான் குளிக்கக் கூட முடிகிறது. எங்கள் நிலையை அரசியல் கட்சிகள் எப்படி வேண்டுமானாலும் விமர்சிக்கலாம். தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் உள்ள விவசாயிகளின் நலன்களுக்காகவே போராடுகிறோம். ஆகவேதான் எங்களுக்கு ஆதரவாக பஞ்சாப், ஹரியாணா போன்ற மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான விவசாயிகள் நேரில் வந்து ஆதரவு தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் இதுவரை சுமார் 400 விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர். மீதமுள்ள விவசாயிகளின் உயிரைப் பாதுகாக்க வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம் என்றார்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad