Header Ads

  • BREAKING



    தூங்கா நகரமானது சென்னை -6 மணி நேரமாக மின்சாரம் துண்டிப்பு.




    மின் உற்பத்தி பாதிப்பு காரணமாக நள்ளிரவு தாண்டியும் பலமணி நேரம் சென்னை நகரம் இருளில் மூழ்கியது. காற்றில்லாத கோடைக்கால இரவில் மக்கள் உறங்க முடியாமல் அவதிப்பட்டனர்.
    சென்னையில் ஏற்பட்ட பழுது காரணமாக மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. இதனால் இரவு 9 மணி முதல் சென்னையின் பல்வேறு பகுதிகளில் மின்சாரம் முற்றிலுமாக துண்டிக்கப்பட்டது. ஆர்.கே.நகர், வேப்பேரி,புரசைவாக்கம், எழும்பூர், பெரம்பூர், வில்லிவாக்கம், தியாகராய நகர், சைதாப்பேட்டை .சேப்பாக்கம், அமைந்தகரை உட்பட பல பகுதிகள் இருளில் மூழ்கின. பல மணி நேரம் மின்சாரம் கிடைக்காமல் இருளில் மூழ்கி தூங்கா நகமானது சென்னை. கடும் கோடை காலத்தின் இரவு என்பதால் காற்று கிடைக்காமல் உறக்கம் சிதறிய நிலையில் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகினர். குழந்தைகளும் முதியோரும் இமை மூடாமல் தவித்தனர்.
    வியாசர்பாடி மயிலாப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் மின்வாரிய அலுவலகங்களை நூற்றுக்கணக்கானோர் முற்றுகையிட்டு மின்சாரம் வருமா என விசாரித்தனர். சில அலுவலகங்களில் ஊழியர்களே இல்லை. தொலைபேசி எடுத்து பதிலளிக்கவும் ஆளில்லை, இதனால் ஆத்திரமுற்று திடீரென சில இடங்களில் பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
    மணலி-மயிலாப்பூர் உயர் மின் அழுத்தப் பாதையில் பாதிப்பு ஏற்பட்டதால் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டிருப்பதாக அமைச்சர் தங்கமணி விளக்கம் அளித்தார். மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக அமைச்சர் தங்கமணி செய்தியாளர்களிடம் தெரிவித்தார். சுமார் 200 மின் ஊழியர்கள் மின்பழுதை சரிசெய்யும் பணியில் விடிய விடிய ஈடுபட்டனர்.இதையடுத்து மயிலாப்பூர், ராயப்பேட்டை, தண்டையார்ப்பேட்டை, எழும்பூர், வியாசர்பாடி காசி மேடு உள்ளிட்ட பகுதிகளில் 80 சதவீத தெருக்களுக்கு மின்சாரம் திரும்பியது. விடிவதற்குள் அனைத்து பகுதிகளுக்கும் மின்சாரம் திரும்பிவிடும் என்று தங்கமணி நம்பிக்கை தெரிவித்தார்.
    உரிய நேரங்களில் மின் சாதனங்களின் பராமரிப்பும் போர்க்கால அடிப்படையில் இடர் நீக்கும் செயல்பாடும் இல்லாத போது அவதிப்படக்கூடியவர்கள் சாதாரண ஏழை எளிய மக்கள்தான்.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad