Header Ads

  • BREAKING



    கொடநாடு காவலாளி கொலை வழக்கில் நான்கு பேரை கைது செய்தது போலீஸ்.



    மறைந்த முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் கொடநாடு பங்களாவில் புகுந்து காவலாளியை கொலை செய்துவிட்டு, விலைமதிப்பு மிக்க 5 கைக்கடிகாரங்களை கொள்ளையடித்துச்சென்ற 4 கொலையாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஜெயலலிதா அணிந்த கைக்கடிகாரங்களை திருடிச்சென்றவர்கள் சிக்கிய பின்னணி.


    மறைந்த முதல் அமைச்சர் ஜெயலலிதாவுக்கு தங்கும் கொடநாடு பங்களாவில் கடந்த 24 ந்தேதி காவலாளி ராம் பகதூர் கொலை செய்யப்பட்டார். பங்களாவில் கொள்ளை முயற்சி நடந்திருப்பதாக மட்டும் தெரிவித்த காவல்துறையினர், மற்ற விவரங்கள் எதையும் வெளியிடவில்லை. இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக, கேரளாவைச் சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகார பூர்வமாக அறிவித்துள்ளார் நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முரளிரம்பா. இந்த கொலை சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வெளியிட்டுள்ள அறிக்கையில் திடுக்கிடும் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஜெயலலிதாவிடம் கடந்த 2009 ஆம் ஆண்டுமுதல் 2012 ஆம் ஆண்டுவரை, கார் ஓட்டுனராக பணியில் இருந்த, சேலம் மாவட்டம் ஆத்தூரை சேர்ந்த கனகராஜ் என்பவர் தான், இந்த கொலை சம்பவத்துக்கு மூளையாக இருந்துள்ளார் என்கிறது காவல்துறை. கொடநாடு பங்களாவில் கோடிக்கணக்கில் பணம் இருக்கும் என்றும், அங்கு பாதுகாப்புக்கு சிசிடிவி காமிராக்களோ, நாய்களோ இல்லை என்றும் தனது நண்பரான சயான் என்பவரிடம் தெரிவித்துள்ளார் கனகராஜ்.

    அதன்படி கேரளாவைச் சேர்ந்த சயானின் நண்பர்கள் 9 பேருடன் இணைந்து, மொத்தம் 11 பேர், கடந்த 23 ந்தேதி இரவு கோவையில் இருந்து 3 கார்களில் கொடநாடு சென்றுள்ளனர். அனைத்து கார்களிலும் போலியான நம்பர் பிளேட்டுகளை பொருத்தி உள்ளனர். கொட நாடு எஸ்டேட்டின் 8 வது நுழைவாயிலில் இருந்த, கிருஷ்ணா தம்பா என்ற காவலாளியை தாக்கி ஒரு கும்பல் உள்ளே நுழைந்துள்ளது. 10 வது கேட்டில் இருந்த காவலாளி ஓம் பகதூரை தாக்கிய போது அவர் எதிர்த்து போராடியதால் கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு மற்றோரு கும்பலும் உள்ளே புகுந்துள்ளது.

    ஜன்னல் வழியாக பங்களாவுக்குள் புகுந்த 11 பேரும், மறைந்த முதல் அமைச்சர் ஜெயலலிதா, அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா ஆகியோர் பயன்படுத்தும் 3 அறைகளின் கதவை உடைத்து உள்ளே சென்றுள்ளனர். அங்குள்ள பீரோக்களில் பணம் ஏதும் இல்லை என்பதால், அங்கிருந்த படிகக் கல் ஒன்றையும், ஜெயலலிதா அணியும் விலைமதிப்புமிக்க 5 கைக்கடிகாரங்களையும் திருடிக்கொண்டு தப்பி உள்ளது கொள்ளைக் கும்பல்.
    நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 2 மணிவரை இருந்த கொள்ளைக் கும்பலுக்கு பெரிய அளவில் பணமோ, சொத்துப் பத்திரங்களோ கிடைக்கவில்லை என்று சுட்டிக்காட்டுகிறது காவல்துறை. அங்கிருந்து தப்பிய 11பேரில் கனகராஜும், சயானும் சாண்ட்ரோ காரில் கோவை திரும்பி, அங்கிருந்து பேருந்து மூலம் அவரவர் ஊர்களுக்கு சென்றுள்ளனர். மீதம் உள்ள 9 பேரும் இன்னோவா மற்றும் எண்டவர் கார்களில் கேரளாவுக்கு புறப்பட்டுள்ளனர். 24 ந்தேதி அதிகாலை, கூடலூர் காவல்துறையினர் வாகனச்சோதனையின் போது, இரு கார்களில் வந்தவர்களும் போலி ஆவணங்களைக் காட்டி தப்பிச்சென்றுள்ளனர்.

    காவல்துறையினர் சேகரித்த சிசிடிவி காட்சிகள் மூலம் கொலையாளிகள் அடையாளம் காணப்பட்டு, அவர்களை பிடிக்க 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. கேரளாவைச் சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான கனகராஜ் ஆத்தூர் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்ததாகவும், இதனை அங்குள்ள காவல்துறை உறுதிபடுத்தி இருப்பதாகவும் தெரிவித்துள்ளார் காவல்கண்காணிப்பாளர் முரளி ரம்பா. கனகராஜின் கூட்டாளி சயான் பாலக்காடு அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் சிக்கி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருவதாகவும், அவரது மனைவியும் குழந்தையும் பலியான வழக்கு கேரள காவல்துறையினரின் விசாரணையில் உள்ளதாகவும், இதில் தொடர்புடைய மேலும் 5 பேரை தேடி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
    கைது செய்யப்பட்ட 4 பேர் கொடுத்த தகவலின்படி, ஜெயலலிதா வீட்டில் இருந்து திருடிச்சென்ற 5 கைக்கடிகாரங்களையும் கேரளாவில் உள்ள ஆற்றில் தூக்கி வீசியது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த கைகடிகாரங்களையும், படிகத் துண்டையும் கைப்பற்றியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad