Header Ads

 • BREAKING  2017-18 புதுச்சேரி பட்ஜெட் துளிகள்.


  வணிகவரி
  ஜிஎஸ்டி வரி விதிப்பு முறையை சுமூகமாக செயல்படுத்த அரசு முனைந்துள்ளது. தற்போதுள்ள வணிகர்களில் 80 சதவீதத்துக்கு மேல் ஜிஎஸ்டி வரிக்கு மாற பதிவு செய்துள்ளனர். இதற்கான தகவல் தொழில்நுட்ப உள்கட்டமைப்புகள் செய்யப்பட்டுள்ளன.
  கூட்டுறவு
  கூட்டுறவு துறையில் நவீன அரிசி ஆலையில் 3 மெட்ரிக்டன் அளவு அரைக்கும் திறன் கொண்டதாக மாற்றப்பட்டுள்ளது. தொடக்க கூட்டுறவு வீட்டுவசதி சங்கங்களில் அட்டவணை இனத்தவருக்கு வட்டி மானியம் 4-இல் இருந்து 5 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. பிற உறுப்பினர்களுக்கு 3-இல் இருந்து 4 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.
  புதுச்சேரி கூட்டுறவு ஒன்றியத்தில் தொழிலாளர் துறை சார்பில் திறன்மேம்பாட்டு செயல்திட்டம் செயல்படுத்தப்படும். நஷ்டத்தில் இயங்கும் கூட்டுறவு அமைப்புகள் குறித்து குழு அமைத்து ஆய்வு செய்து தீர்வு காணப்படும். கறவைப் பசுக்களின் தீவனத் தேவைகளை ஈடு செய்ய அசோலா தாவரம் பயிரிட இடுபொருள்கள் கொள்முதல் செய்வதற்காக தொடக்கநிலை கூட்டுறவு பால் உற்த்தியாளர்கள் சங்கங்களின் உறுப்பினர்களுக்கு நிதியுதவி வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. கூட்டுறவு நூற்பாலை மற்றும் சர்க்கரை ஆலைகள் புனரமைப்புத் திட்டம் விரைவில் நிறைவேற்றப்படும்.
  பள்ளிக்கல்வி
  அரசுப் பள்ளி மாணவர்கள் வறுமையில் வாடும் நிலையில் உயர்கல்விக் கட்டணத்தை செலுத்த சிரமப்பட்டு வருகின்றனர். இத்துன்பத்தைப் போக்கும் வகையில் அரசுப் பள்ளிகளில் 75 சதவீத மதிப்பெண்களுக்கு மேல் பெற்று சென்டாக் மூலம் மருத்துவம், பொறியியல் பாடப்பிரிவுகளில் சேர்க்கை பெறும் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள மாணவர்களுக்கான கல்விக்கட்டணம் முழுவதையும் அரசே செலுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.
  பாரம்பரிய கட்டிடங்கள் கொண்ட கலவைக்கல்லூரி, வஉசி மேல்நிலைப் பள்ளிகள் புரனமைக்கப்படும். திருக்கனூர் அரசு உயர்நிலைப்பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்டப்பட்டு மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்படும். ஏனாம் கிரேம்பேட்டாவில் ஜூனியர் காலேஜ் கட்ட ஆவன செய்யப்படும்.
  நீட் மற்றும் பிற போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ள ஏதுவாக 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு நடத்துவது போல் சிறப்பு வகுப்புகள் 11-ம் வகுப்பு மாணவர்களுக்கும் நீட்டிக்கப்படும். ஆசிரியர்கள் மற்றும் பள்ளிகளின் செயல்திறனை மேம்படுத்த ஆய்வுப்பிரிவு உருவாக்கப்படும். இதன் கீழ் 7 குழுக்கள் அமைக்கப்படும். அதில் புதுச்சேரி வட்டாரத்தில் 4 குழுக்கள், காரைக்கால் வட்டாரத்தில் 3 குழுக்கள் அனைத்து பள்ளிகளையும் கண்காணிக்கும். கல்வித் தரத்தை மேம்படுத்த மின்பாடப்பொருள் பதிவேற்றப்பட்ட கைக்கணினி (டேப்லெட்) 60 பள்ளிகளுக்கு முதலில் வழங்கப்படும்.
  தொடக்கப் பள்ளிகளில் மாணவர்களிடம் வாசிக்கும் பழக்கத்தை உருவாக்க வாசிக்கும் தனியிடம் ஏற்படுத்தப்படும். ஆங்கில மொழியில் புலமைப் பெற 4 பிராந்தியங்களிலும் மொழி ஆய்வுக்கூடம் ஏற்படுத்தப்படும். தனித்தகுதியை ஊக்குவிக்க மாதிரி பள்ளிகள் அமைக்கப்படும். தனியார் பங்களிப்போடு 4 பிராந்தியங்களிலும் உள்ள பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்கப்படும்.
  விளையாட்டு ஊக்குவிப்பு
  கதிர்காமம் இந்திராகாந்தி அரசு மருத்துவக் கல்லூரியில் பல்நோக்கு உள் விளையாட்டரங்கம், உப்பளம் விளையாட்டரங்கில் செயற்கை தடகளப் பாதை அமைக்கப்படும். நிகழாண்டில் ரூ. 5 கோடி செலவில் தந்தை பெரியார் நகரில் நீச்சல் குளம் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது.
  பாகூர், வில்லியனூர், சேலியமேடு பகுதிகளில் புதிய உள்விளையாட்டரங்கம் அமைக்கப்படும். காலாப்பட்டில் ரூ.50 கோடியில் மாவட்ட விளையாட்டு வளாகம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். டிஆர் பட்டினத்தில் சிறிய உள்பூப்பந்தாட்ட அரங்கம் அமைக்க உத்தேசித்துள்ளது.
  1669 ஆசிரியர்களுக்கு திறன் மேம்பாடு பயிற்சி, 246 தலைமை ஆசிரியர்களுக்கு தலைமைப் பண்புகள் மேம்பாட்டுப் பயிற்சி தரப்படும். என்சிசி அதிகாரிகளுக்கு தகுதிநிலை ஊதியம் மதிப்பூதியம் உயர்த்தி தரப்படும்.
  உயர் மற்றும் தொழில்நுட்பக் கல்வி
  அனைத்து அரசு கல்லூரி வளாகங்களிலும் வைஃபை வசதி செய்யப்படும். அனைத்து அரசுக் கல்லூரிகளுக்கும் ஐஎஸ்ஓ தரச்சான்று பெற திட்டமிடப்பட்டுள்ளது. கலை மற்றும் அறிவியல் பாடப்பிரிவுகளில் 1140 இடங்களை அதிகரிக்க புதுச்சேரி பல்கலைக்கழகத்துக்கு செயற்குறிப்பு தரப்பட்டுள்ளது.
  உயர்கல்விக் குழுவை பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். சமுதாய மேம்பாட்டு திட்டத்தில் 1,700 பேருக்கு குறுகிய கால முறைசாரா திறன் பயிற்சி தரப்படும்.
  செய்தி மற்றும் விளம்பரம்
  பத்திரிக்கை துறையில் பணிபுரிபவர்களுக்கு மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் இந்த ஆண்டு முதல் அறிமுகப்படுத்தப்படுகிறது. அங்கீகரிக்கப்பட்ட ஒவ்வொரு பத்திரிக்கையாளரின் குடுபத்திற்கும் ரூ. 3 லட்சம் அளவிற்கு மருத்துவக் காப்பீடு அளிக்கப்படும். அங்கீகரிக்கப்பட்ட பத்திரிக்கையாளர்கள், ஊடக பணியாளர்களுக்கு ஆயுள் காப்பீட்டுத் திட்டம் அளிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. அக்காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் அவர்களின் குழந்தைகளுக்கு படிப்பு உதவித்தொகை வழங்கப்படும். இதுவரை வீட்டுமனை பெறாத அங்கீகரிக்கப்பட்ட பத்திரிக்கையாளர்களுக்கு மனை வழங்கும் திட்டத்தை நிறைவேற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.
  தகவல் தொழில் நுட்பம்
  அரசின் டிஜிட்டல் வலைப்பின்னலுக்கு முதுகெலும்பாக விளங்கும் மாநில விவர மையம் மேம்படுத்தப்படும். பிரதம மந்திரி கிராம டிஜிட்டல் திட்டத்தின் கீழ் கணினிகளை இயக்கவும், டிஜிட்டல் கருவிகளை கையாளவும் 28,000 ஊரக இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்க 11 துறைகளைச் சேர்ந்த 72 பணிகளுக்கு தற்போது அளிக்கப்படும் மின்னணு சேவைகள் விரிவுபடுத்தப்படும். தொழில்நுட்ப தொழிற்கூடங்கள் அமைக்கும் வகையில் புதிய தகவல் தொழில்நுட்ப கொள்கை விரைவில் கொண்டு வரப்படும்.
  துறைமுகம்
  ஆற்றுமுகத்துவாரம் ஆழப்படுத்தும் திட்டத்தின் ஒரு பகுதியாக ரூ.22 கோடி செலவில் கடற்கரை மேம்படுத்தப்படும். ஜூன் முதல் வணிக அளவில் சரக்குகளை கையாள சென்னை துறைமுக கழகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. சென்னை துறைமுகம் புதுச்சேரி துறைமுகத்தை அதன் துணை துறைமுகமாக அறிவித்துள்ளது. சரக்கு ஏற்றுமதி, இறக்குமதி இந்த ஆண்டு 4 லட்சம் டன் கையாலப்படும். இது அடுத்த ஆண்டில் 10 லட்சம் டன்னாகவும் உயர்த்தப்படும்.
  மனைப்பட்டாவில் மாற்றம்
  புதுச்சேரியில் மத்திய அரசிடமிருந்து நிதி பெற்று ஆன்மிக சுற்றுலா பணிகள் நடப்பாண்டே தொடங்கப்படும். பேரிடர் மேலாண்மைக்காக 14 செயற்கைகோள் தொலைபேசிகளையும், துணை கருவிகளையும் இயற்கை பேரிடர் காலங்களில் அளிக்க அரசு உத்தேசித்துள்ளது.
  இலவச மனைப்பட்டா வழங்கும் முறையை நடைமுறைப்படுத்த நிலமானிய சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்படும். கிராம நத்தம் புறம்போக்குகளில் தற்போது வீடு கட்டி வசித்துவரும் மக்களுக்கு நத்தம் சர்வே செய்யப்படும்.
  பரிசோதனை முறையில் ஒதியம்பட்டு வருவாய் கிராமத்திலுள்ள உத்திரவாகினிபேட் பகுதியில் நத்தம் புறம்போக்கினை நெறிமுறைப்படுத்தி நவீன சர்வே முறையில் சர்வே செய்து பட்டா அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
  மத்திய சுற்றுலா அமைச்சகத்தின் சுதேசிதர்ஷன் திட்டத்தின் கீழ் ரூ. 27 கோடி மதிப்பீட்டில் காலாப்பட்டு, நரம்பை, நல்லவாடு மற்றும் மணப்பட்டு கடற்கரைகளை அழகுப்படுத்தும் மேம்பாட்டுப் பணிகள் இந்த ஆண்டில் மேற்கொள்ளப்படும்.
  பாரம்பரிய கட்டிடங்கள், நினைவிடங்கள் ரூ. 92 லட்சத்தில் ஒளிர்வூட்டப்படும். ஊசுட்டேரி ரூ. 3.37 கோடி மதிப்பீட்டில் அழகுப்படுத்தப்படும். ஏனாம் கோபுரத்தை சுற்றியுள்ள பகுதியில் பொழுதுபோக்கு பூங்கா ரூ. 4.98 கோடியில் அமைக்கும் பணி மேற்கொள்ளப்படும்.
  புனரமைப்பு பணிகள்
  திருநள்ளாறு கோயில் நகர மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் தர்பாரண்யேஸ்வரர் சுவாமி தேவஸ்தானத்துக்கு அருகாமையிலுள்ள எமதீர்த்தம், பொய்யாக்குளம், அகத்தீஸ்வரர் தீர்த்தங்கள், திருக்குளத்தின் புனரமைப்பு பணிகள் நடப்பாண்டில் மேற்கொள்ளப்பட்டு பக்தர்கள் பயன்பாட்டுக்கு அர்ப்பணிக்கப்படும்.
  யோகா, ஆயுர்வேதம் மற்றும் பிற சிகிச்சை முறைகளை வலுப்படுத்துவதன் மூலம் புதுச்சேரியை மக்கள் நல்வாழ்வுக்கான மையமாக உருவாக்கம் செய்ய ஒரு சுற்றுலா திட்டம் தயாரிக்கப்படும்.
  பிரெஞ்சு தூதரக ஒத்துழைப்புடன் போன்சூர் இந்தியா திருவிழாவும், உலகளாவிய பாய்மரபடகு போட்டியும் புதுச்சேரியில் நடத்தப்படும். கூடுதலாக சுற்றுலா பயணிகளை கவர உணவு திருவிழா, கடற்கரை திருவிழா, புத்தாண்டு கொண்டாட்டம், பாரம்பரிய நடன மற்றும் இசை திருவிழா நடைபெறும். ஜுலை மாதம் முதலம் புதுச்சேரி விமான நிலையத்திலிருந்து விமான போக்குவரத்து தொடங்கப்படும்.
  108 ஆம்புலன்ஸ் வாகன சேவையை அவுட்சோர்சிங் முறையில் செயல்படுத்துவது குறித்து ஆராயப்படும். நலவழித்துறையில் தீவிர சிகிச்சை பிரிவுகளை அவுட்சோர்சிங் முறையில் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

  கருத்துகள் இல்லை

  Post Bottom Ad