Header Ads

  • BREAKING



    தமிழகம் முழுவதும் 40 விழுக்காடு அளவிற்கே அரசுப் பேருந்துகள் இயக்கம் – பயணிகள் கடும் அவதி.


    காஞ்சிபுரம் மாவட்டம்செங்கல்பட்டில் ஒன்றிரண்டு அரசு பேருந்துகள் மட்டுமே இயங்கி வருவதால் பயணிகள் அவதியடைந்தனர். பொதுமக்கள் ரயில்களில் அதிகளவில் பயணித்ததால், ரயில் நிலையங்களில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. மேலும், தனியார் பேருந்துகளிலும் பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
    கோவையில் 25 சதவீத அரசு பேருந்துகள் மட்டுமே இயங்கியது. இதனால், சிங்காநல்லூர், காந்திபுரம் உள்ளிட்ட பேருந்து நிலையங்களில், அதிகளவில் காத்திருந்த பொதுமக்கள் தனியார் ஆம்னி பேருந்துகள், சிறப்பு தனியார் பேருந்துகள் ஆட்டோக்கள், கால் டாக்ஸி ஆகிய வாகனங்களில் பயணம் செய்ய வேண்டிய நிலைமை ஏற்பட்டது.
    தூத்துக்குடி பணிமனையில் இருந்து 30 சதவீத பேருந்துகள் மட்டுமே இயங்கின. மதுரை, திருச்சி கோவை, கும்பகோணம் உள்ளிட்ட முக்கியப் பகுதிகளுக்கு பேருந்துகள் இல்லாததால் பயணிகள் குடும்பத்துடன் பேருந்து நிலையத்தில் தவித்து வருகின்றனர்.
    ஈரோட்டில் அரசுப் பேருந்துகள் மிகவும் குறைந்த அளவிலேயே இயக்கப்படும் நிலையில், தனியார் பேருந்துகள் வழக்கத்தை விட கூடுதலாக இயக்கப்பட்டு வருகின்றன. பெரும்பாலான அரசுப் பேருந்துகள் பணிமனைகளில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளதால், பயணிகள் தனியார் பேருந்துகளிலேயே பயணிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
    நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் பெரும்பாலான அரசுப் பேருந்துகள் இயக்கப்படாததால், காய்கறி உள்ளிட்ட விளைபொருட்களை உழவர் சந்தைக்கு கொண்டு செல்ல முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர். மெட்டாலா, முள்ளுக்குறிச்சி, மங்களபுரம், ஆயில்பட்டி உள்ளிட்ட இடங்களில் இருந்து பேருந்துகள் இயக்கப்படாததால், உழவர் சந்தையிலும் கடைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன. இதனால், வெளிச்சந்தையில் அதிக விலை கொடுத்து காய்கறி உள்ளிட்ட பொருட்களை வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
    கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் இருந்து பேருந்துகள் இயக்கப்படாததால் அண்ணா மற்றும் வடசேரி பேருந்து நிலையங்கள் வெறிச்சோடிக் காணப்பட்டன. புறநகர் பேருந்து சேவை முடங்கிய நிலையில் கேரள அரசு பேருந்துகளும் குமரி மாவட்டத்துக்கு வரவில்லை வெளியூர் பயணிகள், வேலைக்கு செல்வோர் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இதனை சாதகமாக்கிக் கொண்டு ஆட்டோ மற்றும் மினி பேருந்துகள் பல மடங்கு கூடுதல் கட்டணம் வசூலிப்பதாகவும் புகார் எழுந்துள்ளது.
    ராமநாதபுரத்தில் 95 சதவீத அரசுப் பேருந்துகள் இயக்கப்படாததால், பொதுமக்கள் கடும் அவதியடைந்துள்ளனர். தனியார் பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுவதால், பயணிகள் பல மணி நேரம் பேருந்து நிலையத்திலேயே காத்திருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad