Header Ads

  • BREAKING



    நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி கர்ணனுக்கு ஆறு மாதம் சிறை தண்டனை.


    நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி கர்ணனுக்கு உச்சநீதிமன்றம் ஆறு மாதம் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.நாடு முழுவதும் பணியில் உள்ள மற்றும் ஓய்வு பெற்ற நீதிபதிகள் 20 பேருக்கு எதிராக ஊழல் மற்றும் முறைகேடு புகார்கள் கூறிய நீதிபதி கர்ணன், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கும் கடிதம் எழுதியிருந்தார். இதனை தொடர்ந்து உச்சநீதிமன்றத்தில் நீதிபதி கர்ணனுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கின் விசாரணைக்கு ஆஜரான நீதிபதி கர்ணன், தான் நீதித்துறைக்கு எதிராக போராடவில்லை என்றும், நீதித்துறையில் இருக்கும் முறைகேடுகளுக்கு எதிராக மட்டுமே போராடுவதாகவும் விளக்கம் அளித்திருந்தார். ஆனால் இதனை ஏற்க மறுத்த தலைமை நீதிபதி ஜே.எஸ்.கெஹர் தலைமையிலான அமர்வு, நீதிபதிகளுக்கு எதிராக ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறியதற்காக நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டால் வழக்கு முடித்துக் கொள்ளப்படும் என்று கூறியது. ஆனால் நீதிபதிக்கு உரிய பணிகளை ஆற்ற தன்னை மீண்டும் அனுமதித்தால் மட்டுமே தான் மன்னிப்பு கோர முடியும் என்று நீதிபதி கர்ணன் கூறினார். இதனை ஏற்க மறுத்த கெஹர் தலைமையிலான நீதிபதிகள் கடந்த ஒன்றாம் தேதி மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜராக நீதிபதி கர்ணனுக்கு உத்தரவிட்டனர். ஆனால் நீதிபதி கர்ணன் உச்சநீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. மாறாக நீதிபதி கர்ணன், தலைமை நீதிபதி கெஹர் மற்றும் ஆறு நீதிபதிகளுக்கு வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் ஐந்து ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிப்பதாக உத்தரவிட்டார். இந்த நிலையில் நீதிபதிகளுக்கு எதிராக ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறிய வழக்கில் நீதிமன்றத்தை அவமதித்ததாக நீதிபதி கர்ணனுக்கு உச்சநீதிமன்றம் ஆறு மாதம் சிறை தண்டனை விதித்துள்ளது. நீதிபதி என்பதால் சிறை தண்டனையில் இருந்து தப்பிக்க முடியாது என்றும் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. அத்துடன் நீதிபதி கர்ணனின் பேட்டிகள் மற்றும் உத்தரவுகளை வெளியிட பத்திரிகைகள் மற்றும் ஊடகங்களுக்கும் உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad