Header Ads

  • BREAKING



    நடிகர் சங்க கட்டிட பணிகளை தொடரக்கூடாது – உயர்நீதிமன்றம்.


    சாலையை ஆக்கிரமித்துள்ளதாக புகார் எழுந்துள்ள நிலையில் நடிகர் சங்க கட்டிட பணிகளை தொடரக்கூடாது என உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

    சென்னை தியாகராயநகர், அபிபுல்லா சாலை மற்றும் பிரகாசம் தெருவை இணைக்கும் 33 அடி அகல பொது சாலையை நடிகர் சங்கத்தினர் ஆக்கிரமித்து, திருமண மடண்டபம், நீச்சல் குளம் அடங்கிய பிரமாண்ட கட்டிடம் கட்டுவதாக, தியாகராயநகர் வித்யோதயா காலனியை சேர்ந்தவர்கள் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, உயர்நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டிருந்ததன் அடிப்படையில், மாநகராட்சி மற்றும் சிஎம்டிஏ அதிகாரிகளும், நடிகர் சங்கத்தின் சார்பிலும் கட்டிட அனுமதி தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்யப்பட்டன. இதைத் தொடர்ந்து நடிகர் சங்கத்தின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சோமையாஜி, ஆக்கிரமித்து கட்டிடம் கட்டப்படவில்லை என்றும், பட்டா உள்ளிட்ட அனைத்து வருவாய் ஆவணங்களும் தங்களிடம் உள்ளதாகத் தெரிவித்தார். கட்டிடம் கட்டுவதற்கு தேவையான அனைத்து அனுமதிகளும் பெறப்பட்டுள்ளதாகவும் அவர் வாதிட்டார். மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், பொது சாலையை ஆக்கிரமித்து கட்டிடம் கட்டப்படுவதால் அதுபற்றி முறையாக ஆய்வு நடத்தப்பட வேண்டும் என வாதிட்டனர். இதையடுத்து வரைபடங்கள் உள்ளிட்ட ஆவணங்களை பார்வையிட்டு, பாதை ஆக்கிரமிப்பு உள்ளதா என மாநகராட்சி மற்றும் சிஎம்டிஏ அதிகாரிகளிடம் நீதிபதிகள் கேள்விகளை எழுப்பினர்.
    இதையடுத்து ஒருநபர் வழக்கறிஞர் ஆணையம் நியமித்து ஆக்கிரமித்து குறித்து ஆய்வு செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள் அந்த பொறுப்பிற்கு இளங்கோ என்ற வழக்கறிஞரை நியமித்தனர். மே 29ஆம் தேதிக்குள் ஆய்வறிக்கையை சமர்ப்பிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், அதுவரை நடிகர் சங்க கட்டுமானப் பணிகளை தொடரக்கூடாது எனவும் ஆணையிட்டனர். வழக்கு விசாரணை ஜூன் 2ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad