Header Ads

  • BREAKING



    ஆம் ஆத்மி கட்சிக்கு நன்கொடை பெற்றதாக கூறி பெரும் முறைகேடு – கபில் மிஸ்ரா ஆதாரத்துடன் குற்றசாட்டு.


    ஆம் ஆத்மி கட்சிக்கு நன்கொடை வசூலிப்பதாக கூறி லஞ்சம் பெறப்பட்டதாக டெல்லி அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்ட கபில் மிஸ்ரா ஆதாரத்துடன் குற்றம் சாட்டியுள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய கபில் மிஸ்ரா, 45 கோடி ரூபாய் நன்கொடையாக ஆம் ஆத்மி கட்சி பெற்ற நிலையில் 19 கோடி ரூபாய் தொடர்புடைய விவரங்கள் மட்டுமே கடசியின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார். நன்கொடை பெற்றது தொடர்பாக தேர்தல் ஆணையத்திடமும் ஆம் ஆத்மி கட்சி தவறான தகவல்களை வழங்கியிருப்பதாகவும் அவர் கூறினார்.
    நான்காயிரம் ரூபாய் மட்டுமே ஆண்டு வருமானம் என்று வருமான வரித்துறையில் கணக்கு தாக்கல் செய்துள்ள பிரியா பன்சால் என்பவர் ஆம் ஆத்மி கட்சிக்கு 90 லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கியது எப்படி என்று மிஸ்ரா கேள்வி எழுப்பினார். பெங்களூரைச் சேர்ந்த நபர் ஒருவர் ஆம் ஆத்மி கட்சிக்கு ஒரே நாளில் ஒரு கோடி ரூபாய் நன்கொடை கொடுத்தது எதற்கு என்று கெஜ்ரிவாலால் விளக்க முடியுமா என்றும் அவர் வினவினார். ஆம் ஆத்மி கட்சிக்கு நன்கொடை கொடுத்துள்ள 187 நிறுவனங்களும் ஒரே முகவரியில் இருந்து இயங்குவதாக ஆவணங்களில் கூறப்பட்டுள்ளதை கபில் மிஸ்ரா சுட்டிக்காட்டியுள்ளார்.
    அந்த 187 நிறுவனங்களுமே செயல்பாட்டில் இல்லாதவை என்றும், ஆம் ஆத்மி கட்சிக்கு முறைகேடாக வரும் பணத்தை சட்டப்பூர்வமாக்க அந்த 187 நிறுவனங்களின் பெயர்கள் பயன்படுத்தப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார். செயல்பாட்டில் இல்லாத 187 நிறுவனங்களையும் ஆம் ஆத்மியின் எம்.எல்ஏ சிவ் சரண் நிர்வகித்து வருவதாகவும் கபில் மிஸ்ரா தெரிவித்துள்ளார். ஆம் ஆத்மி எம்.எல்.ஏ சிவ் சரணின் சட்டவிரோத தொழில்கள் மூலமாக கிடைக்கும் வருமானத்திற்கு லஞ்சமாகவே அவரால் நிர்வகிக்கப்படும் நிறுவனங்கள் ஆம் ஆத்மி கட்சிக்கு நன்கொடை வழங்கியதாகவும் கபில் மிஸ்ரா கூறியுள்ளார்.
    ஆம் ஆத்மி கட்சிக்கு நன்கொடை வழங்குவது போல் கறுப்பு பணம் வெள்ளையாக மாற்றப்பட்டதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார். மேலும் பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது பழைய ரூபாய் நோட்டுகளுக்கு புதிய ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொடுத்ததாக கூறப்பட்ட டெல்லி ஆக்சிஸ் வங்கி கிளையில் தான் ஆம் ஆத்மி கட்சிக்கான நன்கொடை செலுத்தப்பட்டதாகவும் கபில் மிஸ்ரா தெரிவித்தார். தனது குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரமாக பல்வேறு ஆவணங்கள் மற்றும் செக்குகளின் நகல்களையும் அவர் வெளியிட்டார்.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad