ஆழியாறில் மணலை தொடர்ந்து பாறைக்கற்கள் வெட்டிக் கடத்தல்: தொடரும் கனிமவளக் கொள்ளை.
கோவைமாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த ஆழியாறு ஆற்றில், கடந்த சில வாரங்களாக பல இடங்களில் பாறைகள் உடைத்து கடத்தப்பட்டு வருகின்றன.
கோட்டூர் பேரூராட்சிக்கு உட்பட்டது ஆழியாறு கிராமம். இங்குள்ள ஆழியாறு அணையில் இருந்து சில நூறு மீட்டர் தொலைவில் ஆற்றின் நடுவில் நீரோட்டத்தை தடுத்து பள்ளி விளங்கால் அணைக்கட்டு கட்டப்பட்டு உள்ளது. இது பழைய ஆயக்கட்டு பாசனத்தின் அணைக்கட்டு ஆகும். இதன் அருகில் ஆற்றில் உறுதித்தன்மை வாய்ந்த பாறைக்கற்கள் ஏராளமான அளவில் உள்ளன. கடந்த சில வாரங்களாக ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்படவில்லை. இதனை பயன்படுத்தி மர்ம நபர்கள், ஆற்றில் பல மீட்டர் அளவுக்கு பாறைகளை உடைத்து கடத்தி வருகின்றனர்.
பாறைகளை உடைத்து எடுக்கப்படும் கற்கள் ஆற்றின் கரையில் குவித்து வைக்கப்பட்டு, பின்னர் டிராக்டர்கள் மூலமாக கடத்தப்படுகின்றன. இந்த கற்கள் வீடுகளுக்கு அடித்தளம் அமைக்கவும், சுற்றுச்சுவர் அமைக்கவும் கொண்டுச் செல்லப்படுகின்றன.
ஆழியாறு ஆற்றில் மணல் அள்ள பொதுப்பணித்துறையினர் தடை விதித்துள்ளனர். ஆனால், ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்படாத காலங்களில், கரைப்பகுதியில் 3 அடி ஆழத்துக்கு மேல் பள்ளம் தோண்டி மணல் எடுக்கப்பட்டு பைகளில் அடைத்து, மாட்டுவண்டியில் கடத்தப்பட்டு வருகின்றன. பகல் நேரங்களில் ஆற்றில் இருந்து மணல் எடுக்கப்பட்டு பைகளில் கட்டி வைக்கப்படுகின்றன. பின்னர் இரவு நேரங்களில் டிராக்டர்கள், மற்றும் மாட்டு வண்டிகளில் எடுத்து செல்லப்படுகின்றன.
இது குறித்து இப்பகுதி மக்கள் கூறியதாவது:
மணல் கடத்தல் குறித்து பலமுறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தற்போது மணலுடன் சேர்த்து பாறைகளையும் வெட்டி எடுத்து கடத்துகின்றனர் என்றனர்.
இது குறித்து வருவாய் துறை வட்டாட்சியர் செல்வி கூறும்போது, ‘பாறைகள் உடைக்கப்பட்ட இடத்தில் ஆய்வு செய்யப்படும். விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.
கருத்துகள் இல்லை