Header Ads

  • BREAKING



    தயிர் ஒரு கப் ரூ.972. மத்திய ரயில்வே கேட்டரிங் விலை மோசடியும் விளக்கமும்.


    மும்பை: மத்திய ரயில்வேயின் கேட்டரிங் துறையின் உணவுக் கிடங்கில் வைக்கப்படும் தயிர் உட்பட பல தரப்பட்ட உணவுகள் பல மடங்கு அதிக விலைக்கு வாங்கப்பட்டிருப்பதாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தெரிய வந்துள்ளது.

    மத்திய ரயில்வேக்கு, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் இரண்டாவது முறை அனுப்பப்பட்ட மனுவுக்கு அளிக்கப்பட்டுள்ள பதிலில் இந்த தகவல் வெளியாகியுள்ளது.
    சமூக ஆர்வலர் அஜய் போஸ் என்பவர், மத்திய ரயில்வேயின் கேட்டரிங் துறைக்கு, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் அனுப்பிய முதல் மனுவுக்கு பதில் அளிக்க உயர் அதிகாரிகள் தவறிவிட்டனர்.
    மத்திய ரயில்வேயின் கேட்டரிங் துறை நட்டத்தில் இயங்குவதாகக் கிடைத்த தகவலை அடுத்து போஸ் மீண்டும் தனது மனுவை தாக்கல் செய்தார்.
    அந்த மனுவுக்குக் கிடைத்த பதிலின் அடிப்படையில், ஒரு கிலோ அமுல் தயிர் ரூ.9,720க்கு வாங்கப்படுவதாக கேட்டரில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
    இது குறித்து ஆங்கில நாளிதழுக்கு போஸ் கூறியிருப்பதாவது, 2016ம் ஆண்டு நான் மனு செய்தேன். இதற்கு பதில் இல்லை. அப்போதே, எதையோ மூடி மறைக்க அதிகாரிகள் முயற்சிக்கிறார்கள் என்று புரிந்தது. இது குறித்து மேல் முறையீடு செய்து உத்தரவுக்குப் பிறகும் கூட பல மாதங்கள் ஆன நிலையில்தான் பதில் கிடைத்தது என்கிறார்.
    அதாவது, கேட்டரிங் துறையின் உணவுக் கிடங்கில் இருக்கும் பொருட்கள் எந்தெந்த விலைகளில் வாங்கப்படுகிறது என்பதே அந்த விவரம்.
    அந்த பட்டியலில்
    அமுல் தயிர் (100 கிராம்) - 15,336 கப் - ரூ.1,49,19,934.32 (ஆக 100 கிராம் தயிரின் விலை ரூ.972)
    சமையல் எண்ணெய் - 53 லிட்டர் - ரூ.66,410 (அப்படி என்றால் ஒரு லிட்டர் எண்ணெய் ரூ.1,253)
    பயத்தம் பருப்பு - 148.5 கிலோ கிராம் - ரூ.89,610 (எனவே, ஒரு கிலோ பருப்பின் விலை 157) என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    எனவே, பல முக்கிய சமையல் பொருட்கள் அதன் உண்மையான விலையை விட பல மடங்கு அதிக விலையில் வாங்கப்படுவதாகக் கணக்கு காட்டுகிறது.
    இவை சமைக்கப்பட்டு ஐஆர்சிடிசியின் கேன்டீனில் விற்கப்படுகிறது. இதுபோன்ற மோசடியால்தான் ரயில்வே கேன்டீன்கள் நட்டத்தில் இயங்குகின்றன என்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
    மேலும் இது குறித்து பேசிய போஸ், ஒரு சில மாதங்களுக்கான விவரங்களே அளிக்கப்பட்டுள்ளது. நான் கேட்டதோ ஓர் ஆண்டுக்கான விவரம். தயிர், எண்ணெய் தவிர, சிக்கன், உளுத்தம் பருப்பு, துவரம் பருப்பு மட்டும் அல்ல டிஷ்யூ பேப்பர் கூட அதன் உண்மையா விலையை விட அதிக விலைக்குத்தான் வாங்கப்படுகிறது.
    இதற்கே நீங்கள் அசந்துவிட்டால் எப்படி? இன்னும் நீள்கிறதே மோசடிப் பட்டியல். ஆம், கிடங்கில் இருப்பு நிலவரத்திலும் மிகப்பெரிய பொருத்தமின்மை காணப்படுகிறது.
    அதாவது, ரயில்வே உணவுக் கிடங்குக்கு 250 கிலோ கோதுமை மாவு வாங்கப்பட்டிருக்கிறது என்றால், கிடங்கில் இருந்து ரயில்வே கிச்சன்களுக்கும், கேன்டீனுக்கும் 450 கிலோ கோதுமை மாவு வழங்கப்பட்டிருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. 35 கிலோ மைதா வழங்கப்பட்டிருக்கிறது. ஆனால், 20 கிலோ மட்டுமே வாங்கப்பட்டுள்ளது. பாஸ்மதி அரிசியைப் பார்த்தால் வெறும் 255 கிலோ வாங்கப்பட்டு, 745 கிலோ வழங்கப்பட்டிருப்பதாக கணக்கு எழுதப்பட்டுள்ளது.
    ரயில்வே நிர்வாகத்தின் அறிக்கையின்படி, ஜன் அஹார் கேன்டீன்கள் மற்றும் ரயில் நிலையங்களில் இயங்கும் உணவகங்கள் நட்டத்தில் இயங்குவதாகக் கூறப்படுகிறது. ஆனால், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் அதன் சுய(விஸ்வ)ரூபம் வெளிவந்துள்ளது என்றும் போஸ் கூறியுள்ளார்.
    ஆங்கில ஊடகம் ஒன்றில் வெளியான இந்த செய்திக்கு, மத்திய ரயில்வே விளக்கம் அளித்துள்ளது. அது குறித்த டிவிட்டர் பக்கத்தில், செய்தியில் கூறப்பட்டிருப்பது போல 100 கிராம் தயிர் கப் ரூ.972 அல்ல. 108 தயிர் கப்கள் கொண்ட ஒரு பெட்டி தான் ரூ.972. அந்த பெட்டியின் எடை 10.8 கிலோ. அப்படியானால் ஒரு கிலோ தயிர் ரூ.97.2 தான். எண்ணெயும் ஒரு லிட்டர் அல்ல, 15 லிட்டர் டின்கள் என்பதுதான் சரி என தெளிவாகக் கூறியுள்ளது.
    இந்த விளக்கத்துக்கு ஆதரவாகவும், எதிராகவும், கேள்விகளையும் டிவிட்டரில் தங்கள் கருத்தாக பொதுமக்கள் முன் வைத்துள்ளனர்.
    மேலும், புகார்கள் தொடர்பாக விசாரணை நடத்தவும், அனைத்து நடவடிக்கைகளிலும் வெளிப்படைத் தன்மையை உருவாக்கவும் ரயில்வே துறை அமைச்சர் சுரேஷ் பிரபு உறுதி அளித்துள்ளார்.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad