தனியார் பாலில் ரசாயனம் கலந்திருந்தால் கிரிமினல் நடவடிக்கை: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி.
தனியார் பாலில் ரசாயனம் கலந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் தவறு செய்யும் பால் நிறுவனங்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார்.
இது தொடர்பாக இன்று சென்னையில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி செய்தியாளர்களிடம் கூறுகையில், ''தனியார் பாலில் ரசாயனம் கலந்திருப்பது குறித்து பல்வேறு புகார்கள் தொலைபேசி, கடிதங்கள் வாயிலாக வந்தன. அந்தப் புகார்கள் மீது ஆய்வு செய்யப்பட்டு உண்மை என கண்டறியப்பட்ட பின்னரே தற்போது மாநிலம் முழுவதும் அதிகாரிகள் ஆய்வு செய்வதை தொடங்கியுள்ளனர்.
பால்வளத் துறையின் அனைத்து பிரிவினரும் களமிறக்கப்பட்டுள்ளனர். தமிழக அரசு சார்பில் 4 கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. பால் நிறுவனத்தினர் தங்களின் தவறுகளை நிறுத்திக்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் அரசு கடும் நடவடிக்கை எடுக்கும்.
பால் என்றால் கெட்டுத்தான் போகும். வாழைப்பழம், மாம்பழம் கெடாமல் இருந்தால் ரசாயனம் பயன்படுத்தப்பட்டதாகத்தானே அர்த்தம். மரத்தில் பழுத்த பழத்தைதான் சாப்பிட வேண்டும். அதைத்தான் அரசும் சொல்கிறது. அனைத்து தனியார் பால் உற்பத்தி நிறுவனங்களையும் நான் குறை கூறவில்லை. பெரும்பாலான தனியார் நிறுவனங்கள் தவறுசெய்து வருகின்றன.
தனியார் பாலில் ரசாயனம் கலந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் தவறு செய்யும் பால் நிறுவனங்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார் ராஜேந்திர பாலாஜி.
கருத்துகள் இல்லை