மருத்துவர்கள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர எஸ்மா சட்டத்தை பயன்படுத்தலாம்: உயர்நீதிமன்றம்.
அரசு மருத்துவர்கள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர எஸ்மா சட்டத்தை பயன்படுத்தலாமே என சென்னை உயர்நீதிமன்றம் கருத்துத் தெரிவித்துள்ளது. அரசு மருத்துவர்கள் போராட்டம் 15 நாட்களுக்கும் மேலாக நீடிப்பதால், நோயாளிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டி, உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது. அறுவை சிகிச்சைகள் தள்ளிவைக்கப்படும் சூழல் ஏற்பட்டிருப்பதாகவும், ஊரகப் பகுதிகளில் ஆரம்ப சுகாதார நிலையங்களில் நோயாளிகளுக்கு சிகிச்சை கிடைக்காமல் நோய்கள் தீவிரமடையும் சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் மனுதாரர் சுட்டிக்காட்டியிருந்தார். எனவே உரிய நடவடிக்கை எடுத்து, மருத்துவர்கள் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கேட்டுக்கொள்ளப்பட்டிருந்தது. இதை விசாரித்த நீதிபதி கிருபாகரன் தலைமையிலான அமர்வு, மருத்துவர்கள் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து சுகாதாரத்துறை செயலர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உத்தரவிட்டார்.
இதை ஏற்று, சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தார். அரசு மருத்துவர்கள் போராட்டத்தால், ஏழைகள் பயன்படுத்தும் அரசு மருத்துவமனைகளில் நோயாளிகள் பாதிக்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டி நீதிபதிகள் சரமாரியாக கேள்வி எழுப்பினர். இதை மறுத்த சுகாதாரத்துறை செயலர், அரசு மருத்துவமனைகளில் உரிய முறையில் சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருவதாகவும், அறுவை சிகிச்சைகள் தள்ளிவைக்கப்படவில்லை என்றும் குறிப்பிட்டார். நோயாளிகள் உரிய நேரத்தில் சிகிச்சை பெறுவது என்பது முக்கியமானது என்றும், அரசு மருத்துவர்கள் போராட்டத்தால் ஏற்படும் பின்விளைவுகள் மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தும் என்பது அரசுக்குத் தெரியாதா என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதா என கேள்வி எழுப்பினர். அரசு மருத்துவர்களுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது என சுகாதாரச் செயலர் குறிப்பிட்டபோது, அப்படி என்றால் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு எஸ்மா போன்ற சட்டங்களை பயன்படுத்தலாமே என நீதிபதிகள் கருத்துத் தெரிவித்தனர். அரசு மருத்துவர்களுடன் மீண்டும் பேச்சு நடத்துமாறு உத்தரவிட்ட நீதிபதிகள், அதன் மூலம் பயன் ஏற்படாவிட்டால் சட்ட நடவடிக்கைகளை எடுக்கலாம் என்றும் குறிப்பிட்டனர். வழக்கு விசாரணை நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை