இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து உடலை சிதைத்த கொடூரம்.
ஹரியானா மாநிலம் ரோஹ்டக்கில் இளம்பெண்ணை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து உடல் உறுப்புகளை சிதைத்து கொலை செய்த கொடூர கும்பலில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சோனிபட் நகரைச் சேர்ந்த 23 வயது இளம்பெண், கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்று தமது பெற்றோருடன் வசித்து வந்தார். அந்த இளம்பெண்ணிடம் பக்கத்து வீட்டு இளைஞர் சுமித், தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தியுள்ளார். இதற்கு அந்தப் பெண் ஒப்புக் கொள்ளாததால் ஆத்திரமடைந்த சுமித், தமது நண்பர்களுடன் சேர்ந்து பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்துள்ளார்.
வழக்கமாக அந்த பெண் அலுவலகம் சென்று வரும் வழியில் காத்திருந்த சுமித், தமது நண்பர்கள் 6 பேருடன் சேர்ந்து பெண்ணைக் கடத்தி ரோஹ்டக் அருகே உள்ள காட்டுப்பகுதிக்கு தூக்கிச் சென்று பலாத்காரம் செய்துள்ளனர். பின்னர் செங்கல் போன்ற பொருட்களால் முகம், தலை உள்ளிட்டவற்றை சிதைத்து அப்பெண்ணின் அடையாளத்தை மறைத்துள்ளனர். இந்தக் கொடூரம் 9ஆம் தேதி நடைபெற்ற நிலையில், நேற்று தான் பெண்ணின் உடல் கண்டெடுக்கப்பட்டது. இந்த வழக்கில் சுமித் மற்றும் அவரது நண்பர் விகாஸ் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதனிடையே இளம்பெண்ணின் வீட்டிற்கு சென்ற அம்மாநில மகளிர் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டுத்துறை அமைச்சர் கவிதா ஜெயின், உறவினர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது பெற்றோர் கதறி அழுதனர்.
அமைச்சர் உடன் சென்ற காவல்துறை ஐ.ஜி., நவ்தீப் சிங் விர்க், கைது செய்யப்பட்டுள்ள இருவர் மீதும் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறினார். எஞ்சிய ஐந்து பேரை தேடி வருவதாகவும் கூறினார்.
கருத்துகள் இல்லை