Header Ads

  • BREAKING



    வெப்பத்தைத் தணிக்கும் நுங்கு விற்பனை அமோகம்.


    சென்னையில் கோடைகால உடல் வெப்பத்தைத் தணிக்கும் வகையிலான பனை நுங்கு விற்பனை தொடங்கியுள்ளதால் பொதுமக்கள் ஆர்வத்துடன் அதை வாங்கிச் செல்கின்றனர்.
    தற்போதைய நிலையில் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் வெளியில் எங்கும் செல்ல முடியாமல் வீட்டிற்குள்ளேயே முடங்கியுள்ளனர். வெயில் குறைந்த மாலை நேரங்களில் மட்டுமே வெளியில் நடமாடுகின்றனர். அந்தளவிற்கு வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இந்த வெப்பத்திலிருந்து தப்பிக்க பொதுமக்கள் குளிர்பானங்களையும், இயற்கையான பழங்களையும் ஆர்வத்துடன் வாங்கி சாப்பிட்டு வருகின்றனர்.
    இயற்கை அளித்த கொடை: கோடை வெப்பத்திலிருந்து உடலைப் பாதுகாக்கவும், சூட்டை தணிக்கவும் இயற்கை வழங்கிய கொடையாக பனையில் இருந்து கிடைக்கும் நுங்கு முக்கியப் பங்கு வகிக்கிறது. இந்த நுங்கு உடல் சூட்டைத் தணிப்பதோடு, வியர்வைக் குரு போன்றவற்றிலிருந்து பாதுகாக்கும். தற்போது, இத்தகைய மருத்துவ குணம் கொண்ட நுங்கு சீசன் சென்னையில் தொடங்கியுள்ளது. சென்னையில் தாம்பரம், பல்லாரவரம், கிண்டி, கோயம்பேடு, அண்ணாநகர், கடற்கரை சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நுங்கு விற்பனையும் சூடுபிடித்துள்ளது. இந்த நுங்குகள் நாள்தோறும் மேல்மருவத்தூர், கூவத்தூர், கும்மிடிப்பூண்டி, மதுராந்தகம், திருவள்ளூர், கல்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து கொண்டு வரப்பட்டு சாலையோரங்களில் குவித்து விற்பனை செய்யப்படுகிறது. 
    இது குறித்து மேல்மருவத்தூரைச் சேர்ந்த நுங்கு வியாபாரி தன்ராஜ் கூறியதாவது: எங்கள் பகுதியில் ஒரு பனை மரத்துக்கு ரூ.100 வீதம் குத்தகை பெற்று, 100 பனைகள் கொண்ட தோப்பை குத்தகைக்கு எடுத்துள்ளேன். இந்த நுங்குகளை அதிகாலையில் பனைமரத்தில் ஏறி வெட்டி வாகனங்களில் சென்னைக்கு கொண்டு வருகிறேன். அதை சாலையோரத்தில் இடம் பிடித்து நுங்குகளை வெட்டி பொதுமக்களுக்கு வழங்குகிறோம். இந்த மருத்துவ குணம் கொண்ட நுங்குகளை பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர். கடந்தாண்டு நுங்குகள் வரத்து அதிகமாக இருந்ததால் ஒரு டஜன் ரூ.50-க்கு விற்பனை செய்யப்பட்டது. தற்போது கடும் வறட்சியால் நுங்குகள் திரட்சியின்றி இருப்பதால் தரத்திற்குகேற்ப ஒரு டஜன் நுங்கு ரூ.60 முதல் ரூ.70-க்கு விற்பனை செய்கிறோம். இதன் மூலம் ஒரு நாளைக்கு போக்குவரத்து செலவு போக கூலியாக ரூ.500 முதல் ரூ.600 வரையில் கிடைக்கிறது என்றார் அவர்.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad