Header Ads

  • BREAKING



    பிரான்ஸ் நாட்டின் புதிய அதிபராக இமானுவேல் மெக்ரான் தேர்வு – பிரதமர் மோடி வாழ்த்து.


    பிரான்ஸ் நாட்டின் புதிய அதிபராக இமானுவேல் மெக்ரான் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் டிரம்ப் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.
    பிரான்ஸ் அதிபரைத் தேர்வு செய்வதற்கான தேர்தல் கடந்த மாதம் 23ஆம் தேதி நடைபெற்றது. 11 பேர் போட்டியிட்ட இந்த தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காததால், முதல் இரண்டு இடங்களைப் பிடித்த வேட்பாளர்களுக்கு இடையே ரன்ஆஃப் எனப்படும் இரண்டாவது சுற்றுத் தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டது. முதல் இரண்டு இடங்களைப் பெற்ற இமானுவேல் மெக்ரான் மற்றும் மரீன் லீபென் ஆகியோரில் யார் அதிபர் என்பதைத் தேர்வு செய்ய நேற்று மீண்டும் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டதில் மெக்ரானுக்கு 65.8 சதவீத வாக்குகளும், லீபென்னுக்கு 34.2 சதவீத வாக்குகளும் கிடைத்துள்ளன. இதையடுத்து மெக்ரான் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டார். 39 வயதான முன்னாள் வங்கி அதிகாரியான மெக்ரான், இரண்டு ஆண்டுகள் நிதியமைச்சராக பணியாற்றியவர். அந்நாட்டில் மிகக் குறைந்த வயதில் அதிபர் பதவியேற்பவர் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார். தமக்கு வாழ்த்து தெரிவிக்க கொடிகளுடன் திரண்ட பொதுமக்களிடம் உரை நிகழ்த்திய மெக்ரான், தீவிரவாதத்திற்கு எதிரான யுத்தத்தில் பிரான்ஸ் முன்னிலை வகிக்கும் என்று குறிப்பிட்டார்.பிரான்சின் புதிய அதிபராகப் பதவியேற்கவிருக்கும் மெக்ரானுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இங்கிலாந்து பிரதமர் தெரசா மே, ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்க்கல் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர். மெக்ரானுக்கு வாழ்த்து தெரிவித்து, பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள ட்விட்டர் செய்தியில், இரு நாடுகளுக்கு இடையிலான உறவு நெருக்கமாகும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad