நீதிபதி கர்ணனை கைது செய்வதற்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு.
நீதிபதி கர்ணனை கைது செய்வதற்கு தடை விதிக்க மறுத்துவிட்ட உச்சநீதிமன்றம், கைது ஆணையை திரும்ப பெறுமாறு விடுத்த கோரிக்கையும் நிராகரித்துள்ளது. உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி உள்ளிட்ட நீதிபதிகள் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறிய நீதிபதி கர்ணன் அவர்களுக்கு எதிராக பல்வேறு உத்தரவுகளையும் பிறப்பித்தார்.
இதையடுத்து நீதித்துறைக்கு எதிராக செயல்பட்டதாகக் கூறி அவருக்கு 6 மாத சிறைத் தண்டனை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து நீதிபதி கர்ணனை கைது செய்வதற்காக போலீசார் தேடி வருகின்றனர். இந்நிலையில் 6 மாத சிறைத் தண்டனை உத்தரவை ரத்து செய்யக் கோருவதை அவசர வழக்காக விசாரணைக்கு ஏற்குமாறு நீதிபதி கர்ணனின் வழக்கறிஞர் மனு தாக்கல் செய்தார்.
இதற்கு கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், நீதிமன்றத்தின் நேரம் விரையம் செய்யப்படுவதாகக் குறிப்பிட்டனர். மனுவை அவசர வழக்காக ஏற்க மறுத்துவிட்ட நீதிபதிகள், வழக்கு அதற்குரிய காலத்தில் விசாரணைக்கு வரும் என்று தெரிவித்தனர்.
கருத்துகள் இல்லை