Header Ads

  • BREAKING



    சீமை கருவேல மரங்களை வெட்ட விதிக்கப்பட்ட தடை தொடரும் – சென்னை உயர்நீதிமன்றம்


    சீமைக்கருவேல மரங்களை வெட்டுவதற்கு விதிக்கப்பட்டுள்ள இடைக்கால தடையை நீட்டித்துள்ள உயர்நீதிமன்றம், ஆய்வு செய்வதற்கான குழுவை 12 பேரைக் கொண்டதாக மாற்றியமைக்க உத்தரவிட்டுள்ளது.சீமைக் கருவேல மரங்களால் நிலம் மற்றும் நீர் வளம் பாதிக்கப்பட்டு கடும் வறட்சி ஏற்படும் என்று கூறி சீமைக் கருவேல மரங்கள் வெட்டப்படுவதாகவும், இதற்கு அறிவியல்பூர்வமான ஆதாரங்கள் ஏதும் இல்லை என்றும் மேகநாதன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதில், சீமைக்கருவேல மரங்கள் வெட்டப்படும் இடங்களில் வேறு மரங்கள் வைக்கப்படுவதில்லை என்றும், இதனால் அந்த இடங்களில் உயிரினச் சூழல் பாதிக்கப்படுகிறது என்றும் முறையிடப்பட்டிருந்தது. இதேபோல கிராமப்புறங்களில் சீமைக்கருவலே மரங்களை எரித்து கரி தயாரிப்பதன் மூலம் அதற்கு பொருளாதாரச் சார்பு இருப்பதாகவும் மனுதாரர் கூறியிருந்தார். இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி சுந்தர் அமர்வு, வழக்கை 3 நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றுவதாக அறிவித்தது. மே 11ஆம் தேதி விசாரணை நடைபெறும் என்றும், அதுவரை சீமைக்கருவேல மரங்களை வெட்ட இடைக்கால தடை விதிப்பதாகவும் அறிவித்தது. இந்நிலையில் இந்த வழக்கு, தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் சுந்தர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை சார்பில், நேற்று பிறப்பிக்கப்பட்ட அரசாணை ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. இதன்படி, சீமைக்கருவேலத்தின் தீமைகள் குறித்து ஆய்வு செய்ய முதன்மை தலைமை வனச்சரகர் தலைமையில், வேளாண் பல்கலைக்கழக பேராசிரியர், கால்நடை பல்கலைக்கழக பேராசிரியர், பொதுப்பணித்துறை நீரியல் தலைமைப் பொறியாளர் மற்றும் சட்டத்துறை, வேளாண்துறை பிரதிநிதிகள் உள்ளிட்ட 8 பேர் அடங்கிய குழு அமைக்கப்பட்டிருப்பது சுட்டிக்காட்டப்பட்டது. இந்த குழு 3 மாதத்திற்குள் அறிக்கை அளிக்க உத்தரவிடப்பட்டிருப்பதும் உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து 8 பேர் குழுவை 12 பேர் குழுவாக மாற்றியமைக்கவும், அதில், சென்னை ஐஐடி கெமிக்கல் எஞ்சினியரிங் பேராசிரியர், சென்னை கிறித்தவக் கல்லூரி தாவரவியல் துறை பேராசிரியர், கேரள மாநிலம் கோழிக்கோடு விண்வெளி ஆய்வுக் கல்வி நிறுவன பேராசிரியர், திருப்பெரும்புதூர் வெங்கடேஸ்வரா பொறியியல் கல்லூரியின் சமூக அறிவியல் துறை பேராசிரியர் என 4 பேரை குழுவில் இணைத்துக் கொள்ளுமாறும் உயர்நீதிமன்றம் பரிந்துரை செய்தது. ஆய்வுக் குழு அரசிடம் அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், அதுவரை சீமைக்கருவேல மரங்களை வெட்ட விதிக்கப்பட்ட இடைக்கால தடை நீட்டிக்கப்படுவதாக அறிவித்தனர். வழக்கு விசாரணை ஜூலை 5ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad