கோவை ஆசிரியை கொலையில் திருப்பம்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சியை சேர்ந்த நிவேதா அங்குள்ள எஸ்.ஆர்.ஐ.எம் அரசுப் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். திருமண வயதில் ஒரு பெண்ணும், மகனும் உள்ள ஆசிரியை கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்னர் தனது கணவரிடம் இருந்து விவகாரத்து பெற்றுள்ளார். விவகாரத்திற்கு பிறகு பொள்ளாச்சியில் உள்ள அரசு ஊழியர் குடியிருப்பில் வசித்து வந்த ஆசிரியை நிவேதாவுக்கு கடந்த 2011ம் ஆண்டு பக்கத்து வீட்டில் குடியேறிய இளையராஜா என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் கணவன் மனைவி போல் குடும்பம் நடத்தி வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் நிவேதாவுக்கு பேஸ்புக் மூலம் கணபதி என்கிற நபர் கடந்த ஆண்டு அறிமுகமாகியுள்ளார். இருவரும் பேஸ்புக் சாட்டிங் மூலம் நட்பை வளர்த்து பின்னர் செல்போனில் தொடர்பு கொண்டு பேசத் தொடங்கியுள்ளனர். தானும் விவகாரத்து பெற்றவன் என்பதால் இருவரும் திருமணம் செய்து கொள்ளலாம் என்று கூறியதை நம்பி ஆசிரியை நிவேதா அவ்வப்போது கணபதிக்கு பண உதவியும் செய்து வந்ததாக சொல்லப்படுகிறது. உடனடியாக கணபதியுடன் பழக்கத்தை கைவிடும்படியும், கொடுத்த பணத்தை திரும்ப பெற்று வரலாம் என்று கூறி நிவேதாவை சென்னைக்கு இளையராஜா அழைத்து வந்ததாகவும் சொல்லப்படுகிறது. சென்னை அண்ணா நகரில் கணபதியை சந்தித்து பணத்தை வாங்கி வருவதாக கூறிவிட்டு நிவேதா சென்றுள்ளார். அவரை பின்தொடர்ந்து சென்ற இளையராஜா, அங்கு நிவேதாவும், கணபதியும் மிகவும் நெருக்கமாக சிரித்து பேசியதை பார்த்து ஆத்திரம் அடைந்ததாக கூறப்படுகிறது. உடனடியாக தான் இருந்த காரின் மூலம் அதிவேகமாக சென்று நிவேதா மற்றும் கணபதியை குறி வைத்து இளையராஜா மோதியுள்ளார். ஆனால் கணபதி சாதுர்யமாக உயிர் தப்பிவிட, நிவேதா காரால் மோதப்பட்டு உயிருக்கு போராடியுள்ளார். உடனடியாக நிவேதாவை ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால் நிவேதா வழியிலேயே உயிரிழந்துள்ளார். முதலில் இதனை விபத்து என்று கருதி வழக்குப் பதிவு செய்த போலீசாருக்கு கணபதியை விசாரித்த போது தான், இளையராஜா கொலை செய்தது தெரிய வந்தது. இதனை அடுத்து இளையராஜாவை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆத்திரத்தில் கொலை செய்துவிட்டதாகவும், நிவேதாவை காப்பாற்ற போராடியது பலன் இன்றி சென்றுவிட்டதாகவும் போலீசாரிடம் இளையராஜா கூறியுள்ளார். மேலும் ஆம்புலன்ஸ் வேகமாக செல்லவில்லை என்பதால் அதனை தாக்கியதில் தனது கைகளில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும் இளையராஜா தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை