Header Ads

  • BREAKING



    சென்னையில் காரை ஏற்றி ஆசிரியை படுகொலை – தீயணைப்பு வீரர் கைது.


    சென்னை அண்ணாநகர் பகுதியில் காரை ஏற்றி ஆசிரியை ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவையைச் சேர்ந்த நிவேதிதா என்பவர், அங்குள்ள பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தனியாக வசித்து வந்த அவர், சென்னையில் பணியாற்றி வரும் மகளைப் பார்ப்பதற்காக வந்துள்ளார். கணவரைப் பிரிந்த பின்னர், கோவையைச் சேர்ந்த தீயணைப்புத்துறை ஓட்டுநரான இளையராஜாவுடன் தொடர்பு இருந்ததால், அவரையும் நிவேதிதா தன்னுடன் சென்னைக்கு அழைத்து வந்துள்ளார். முகநூல் மூலம் சென்னையைச் சேர்ந்த கணபதி என்பவருடன் நட்பு ஏற்பட்டு, நிவேதிதா அவருக்கு பணம் கொடுத்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், கொடுத்த பணத்தை வாங்குவதற்காக, இளையராஜாவை தன்னுடன் காரில் அழைத்து வந்த நிவேதிதா, அண்ணாநகரில் உள்ள ஒரு இடத்திற்கு கணபதியை வரச்சொல்லி அவருடன் பேச்சு நடத்தியுள்ளார். பேசி முடித்ததும், கணபதியின் இருசக்கர வாகனத்தில் ஏறிப் புறப்பட்டதால் ஆத்திரமடைந்த இளையராஜா, நிவேதிதா மீது அசுர வேகத்தில் காரை ஏற்றியதாக கூறப்படுகிறது. இதில் ரத்த வெள்ளத்தில் மிதந்த நிவேதிதா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். முதலில் இந்த வழக்கை விபத்து என பதிவு செய்த போலீசார், கணபதி, இளையராஜா ஆகியோரை காவல்நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். அப்போது, இளையராஜாதான் திட்டமிட்டு நிவேதாவை காரை ஏற்றிக் கொன்றதாக கணபதி வாக்குமூலம் அளித்ததைத் தொடர்ந்து, போலீசார் இளையராஜாவைக் கைது செய்தனர். ஆயினும், கொலைக்கான உண்மைக் காரணம் என்ன என்பது குறித்து கணபதி மற்றும் நிவேதிதா மகள் ஆகியோரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad