Header Ads

  • BREAKING



    தரமற்ற முறையில் விற்பனைக்கு கொண்டுசெல்லப்பட்ட தண்ணீர் கேன்கள் பறிமுதல்.


    சென்னை கோயம்பேடு பகுதியில் சோதனையில் ஈடுபட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தரமற்ற முறையில் தயாரிக்கப்பட்டு, விற்பனைக்கு கொண்டு செல்லப்பட்ட குடிநீர் கேன்களை பறிமுதல் செய்தனர். மனிதன் உயிர் வாழ மிக முக்கியமானது பாதுகாப்பான தண்ணீர். மனிதர்களுக்கு உருவாகும் பெரும்பாலான நோய்கள் தண்ணீர் மூலமாகவே ஏற்படுவதால், சுத்தமான குடிநீரை பருக வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகின்றனர். இதனால், குடிநீர் தட்டுப்பாடு காணப்படும் சென்னை போன்ற பெருநகரங்கள் மட்டுமின்றி, கிராமங்களில் கூட, தண்ணீர் கேன்களை வாங்கி பொதுமக்கள் பயன்படுத்தத் தொடங்கி விட்டனர். இதை பயன்படுத்தி, சில நிறுவனங்கள் தரமற்ற முறையில் குடிநீரை கேன்களில் அடைத்து விற்பனை செய்து கொள்ளை லாபம் சம்பாதித்து வருவதாக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு தொடர்ந்து புகார்கள் வந்துள்ளன. இதையடுத்து, சென்னை கோயம்பேட்டில் உள்ள மெட்ரோ ரயில் நிலையம் அருகே சோதனையில் ஈடுபட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள், அந்த வழியாக தண்ணீர் கேன்களை கொண்டு சென்ற வாகனங்களை நிறுத்தி சோதனை நடத்தினர். வாகனங்களில் விற்பனைக்காக கொண்டு செல்லப்படும் குடிநீர் கேன்களில் இந்திய தரக்கட்டுப்பாடு சான்று எண் பொறிக்கப்பட்டுள்ளதா? அதில் பொறிக்கப்பட்டுள்ள தரக்கட்டுப்பாடு எண்கள் உண்மையானதா என்பதை சோதனை செய்த அதிகாரிகள், உரிய அனுமதியின்றி விற்பனை கொண்டு செல்லப்பட்ட சுமார் 500 தண்ணீர் கேன்களை பறிமுதல் செய்தனர். இந்திய அளவில் விற்பனை செய்யப்படும் தண்ணீர் கேன்களுக்கு ஐ.எஸ்.14543 என்ற எண் வழங்கப்படுவதாக கூறிய அதிகாரிகள், இந்த தரக்கட்டுப்பாடு எண் வாங்காமலே சிலர் தண்ணீர் கேன் விற்பனையில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்துள்ளனர். பறிமுதல் செய்யப்பட்ட தண்ணீர் கேன்கள் பரிசோதனைக் கூடங்களுக்கு அனுப்பப்படும் என்று கூறியுள்ள உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள், தரமற்ற முறையில் தண்ணீர் கேன்களை தயாரித்து விற்பனை செய்த நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளித்துள்ளனர்.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad