ஆடல், பாடல் நிகழ்ச்சிக்கு புதிய நிபந்தனைகள்: உயர் நீதிமன்றம் உத்தரவு.
தமிழகத்தில் கோயில் விழாக்களில் ஆடல், பாடல் நிகழ்ச்சி நடத்த மேலும் 2 நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் பல்வேறு கோயில் திருவிழாக்களில் ஆடல், பாடல் நிகழ்ச்சி நடத்த அனுமதி கோரி போலீஸாரிடம் விழாக்குழு சார்பில் மனு அளிக்கப்படுகிறது. போலீஸார் பல்வேறு காரணங்களைக் கூறி அனுமதி மறுக்கின்றனர். இதனால் உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்து ஆடல், பாடலுக்கு அனுமதி பெறப்படுகிறது.
உயர் நீதிமன்ற மதுரை கிளையில் இந்த வாரம் நடைபெற்ற விடுமுறை கால நீதிமன்றத்தில் மட்டும் 200-க்கும் மேற்பட்ட கோயில் விழாக்களில் ஆடல், பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்கப்பட்டது.
ஆபாச நடனம், ஆபாச பாடல்கள், ஆபாச வசனங்களை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். ஆபாச, இரட்டை அர்த்தம் தரக்கூடிய பாடல்கள் இடம்பெறக் கூடாது. அரசியல் கட்சி, ஜாதி, மதம் சார்ந்த பாடல்கள், நடனங்கள் இடம்பெறக் கூடாது. அரசியல் கட்சித் தலைவர்கள், மதத் தலைவர்களை ஆதரித்து பிளக்ஸ் போர்டுகள் அமைக்கக் கூடாது.
சமூக நல்லிணக்க மேம்பாட்டை உறுதி செய்வதுடன், ஜாதி, மத பாகுபாடின்றி நிகழ்ச்சியை நடத்த வேண்டும். பங்கேற்பாளர்கள் மதுபானம் உள்ளிட்ட போதைப் பொருட்களை உட்கொண்டிருக்கக் கூடாது. அசம்பாவித சம்பவம் ஏதாவது நடைபெற்றால் விழா அமைப்பாளர்களே பொறுப்பேற்க வேண்டும். இந்த நிபந்தனைகள் மீறப்பட்டால் போலீஸார் சட்டப்படி நடவடிக்கை எடுப்பதுடன் நிகழ்ச்சியை நிறுத்தவும் நடவடிக்கை எடுக்கலாம் ஆகிய நிபந்தனைகள் இதுவரை விதிக்கப்பட்டன.
இந்நிலையில் ஆடல், பாடல் நிகழ்ச்சியில் பங்கேற்கும் கலைஞர்கள் கட்டாயம் ஒழுங்கான ஆடைகள் அணிய வேண்டும்.
கலைஞர்களின் பெயர்கள் உள்ளிட்ட அவர்கள் தொடர்பான பிற விபரங்களையும் விழா ஒருங்கிணைப்பாளர்கள் பெறவேண்டும் என 2 நிபந்தனைகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன.
கருத்துகள் இல்லை