இன்று முதல் சுரங்கப் பாதையில் பயணிக்கிறது சென்னை மெட்ரோ ரயில்.
சென்னை திருமங்கலம்- நேரு பூங்கா இடையே, சுரங்கப் பாதையில் மெட்ரோ ரயில் சேவையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மத்திய அமைச்சர் வெங்கைய நாயுடு ஆகியோர் இன்று தொடங்கி வைக்கின்றனர்.
சென்னையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டது. இத்திட்டத்தின் மூன்றாவது கட்டமாக, திருமங்கலத்தில் இன்று நேரு பூங்கா வரையிலான 7 புள்ளி 4 கிலோ மீட்டர் சுரங்கப் பாதைப் பணி நிறைவு பெற்றுள்ளது. இதையடுத்து, இன்று காலை 10 மணியளவில் திருமங்கலம் ரயில் நிலையத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் வெங்கைய நாயுடு ஆகியோர் கலந்துகொண்டு சுரங்கப்பாதையில் மெட்ரோ ரயில் சேவையைத் தொடங்கி வைக்கின்றனர். மேலும், சுரங்கப்பாதையில் அமைந்துள்ள திருமங்கலம், அண்ணாநகர் கோபுரம், அண்ணாநகர் கிழக்கு, ஷெனாய் நகர், பச்சையப்பன் கல்லூரி, கீழ்ப்பாக்கம், நேரு பூங்கா ஆகிய 7 சுரங்க மெட்ரோ ரயில் நிலையங்களையும் அவர்கள் திறந்து வைக்கின்றனர். ரயில் பயணிகளின் பாதுகாப்புக்காக பல்வேறு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. சுரங்க மெட்ரோ ரயில் நிலையம் ஒவ்வொன்றிலும் 60 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. ரயில் நிலையங்களில் 4 நுழைவு மற்றும் வெளியேறும் வாயில்களும், அவசர காலங்களில் வெளியேற 2 வழிகளும் அமைக்கப்பட்டுள்ளன.
கருத்துகள் இல்லை