விசைத்தறி தொழிலாளியையும்,அவரது மகளையும் எரித்துக் கொன்ற சம்பவத்தில் இருவருக்கு மரண தண்டணை.
பல்லடம் அம்மா பாளையத்தை சேர்ந்த தங்கவேல் என்பவர் விசைத்தரி தொழிலாளி. இவரது 11 வயது மகள் மகாலட்சுமி அங்குள்ள பள்ளிக்கூடத்தில் 6 ஆம் வகுப்பு படித்துவந்தார்.
கடந்த 2015 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 5 ந்தேதி நோட்டு புத்தகம் வாங்குவதற்காக தனது மகள் மகாலட்சுமியுடன் மொபட்டில் பல்லடத்திற்கு சென்றுள்ளார் தங்கவேல். அப்போது காரில் வந்த மர்மகும்பல் ஒன்று அவர்கள் இருவரையும் காரில் ஏற்றி கடத்திச்சென்றுவிட்டது. மொபட்டையும் தூக்கிச்சென்றுவிட்டது.
பல்லடம் காவல் துறையினர் கடத்தல் கும்பலை தேடிவந்த நிலையில் வேலாம்பாளையம் சாலையில் தங்கவேல் சடலம் எரிக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டது. கோவை வீரகேரளம் அருகே சிறுமி மகாலட்சுமியின் சடலம் கருகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது. இதில் கொலையாளிகள் மகாலட்சிமியை சிறுமி என்றும் பாராமல் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்தசம்பவத்தில் கொலையாளிகளை தகுந்த சாட்சியங்களுடன் கைது செய்வதில் காவல்துறையினர் தீவிரம் காட்டினர். அதன்படி இந்த கொலைகளுக்கு மூளையாக செயல்பட்ட ராசாக்காகவுண்டன் பாளையத்தை சேர்ந்த விசைத்தறி உரிமையாளர் செல்வராஜ் என்பவரை சுற்றிவளைத்த காவல்துறையினர் ரங்கராஜ், தெய்வசிகாமணி ,நாகராஜ், ஆனந்தன் மற்றும் செல்வராஜின் மனைவி ஈஸ்வரி ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர். செல்வராஜின் விசைத்தறிகூடத்தில் வேலை பார்த்தபோது தங்கவேல் வங்கிய 50 ஆயிரம் ரூபாயை கொடுக்க மறுத்ததால் கூலிப்படை துணையுடன் தங்கவேலையும் அவரது மகளையும் கடத்திச்சென்று செல்வராஜ் கும்பல் கொன்றது கண்டுபிடிக்கப்பட்டது.
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த இந்த இரட்டை கொலை தொடர்பான வழக்கின் விசாரணை திருப்பூர் மகிளா நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
திங்கட்கிழமை இவ் வழக்கில் நீதிபதி முகமது ஜியாவுதீன் அதிரடி தீர்ப்பு வழங்கினார். அதில் முக்கிய குற்றவாளியான செல்வராஜ் அவரது நண்பர் ரங்கராஜிற்கு தூக்கு தண்டனையும் கூலிப்படையை சேர்ந்த தெய்வசிகாமணி ,நாகராஜ், ஆனந்தன் ஆகியோருக்கு சாகும் வரை சிறையில் இருக்கும்படி ஆயுள்தண்டனையும் வழங்கி தீர்ப்பு வழங்கினார். போதிய சாட்சிகள் இல்லாததால் செல்வராஜின் மனைவி ஈஸ்வரி விடுதலை செய்யப்பட்டார்.
திருபூர் மகிளா நீதிமன்றத்தில் இருவருக்கு மரணதண்டனை வழங்கப்பட்ட முதல் வழக்கு இதுவாகும். தந்தையுடன் கடத்தப்பட்ட சிறுமி, தந்தையின் கொலைக்கு சாட்சியாகி விடகூடாது என்பதற்காக சிறுமி என்றும் பாராமல் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். பின்னர் அவரையும் கொலை செய்து அடையாளம் தெரியாமல் இருக்க சிறுமியின் சடலத்தை எரித்த இந்த கொடூர சம்பவம் அரிதிலும் அரிதான வழக்காக கருதி இந்த தண்டனை வழங்கப்பட்டிருப்பதாக நீதிபதி தனது தீர்ப்பில் சுட்டிக்காட்டி உள்ளார் .
இந்தவழக்கில் சிறப்பாக துப்புதுலக்கி போதிய சாட்சிகளுடன் நீதிமன்றத்தில் வழக்கை நடத்தி குற்றவாளிகளுக்கு விரைவாக தண்டனை பெற்றுக்கொடுத்த பல்லடம் காவல்துறையினர் பாராட்டுக்குறியவர்கள்.
கருத்துகள் இல்லை