Header Ads

  • BREAKING



    அங்கீகாரம் இல்லாத வீட்டு மனைகளை பதிவு செய்வதற்கான புதிய விதிகள் நாளை வெளியிடப்படும் – தமிழக அரசு தகவல்.


    அங்கீகாரமில்லாத நிலங்கள் மற்றும் வீட்டுமனைகளை பத்திரப்பதிவு செய்வது தொடர்பான வரைவு விதிகள், நீதிமன்றத்தில் நாளை தாக்கல் செய்யப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.விளைநிலங்களை வீட்டுமனைகளாக மாற்ற எதிர்ப்பு தெரிவித்து வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் என்பவர் பொதுநல வழக்கு தொடர்ந்தார். இதை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், விளைநிலங்களை அங்கீகாரமில்லாமல் வீட்டுமனைகளாக பத்திரப் பதிவு செய்வதற்கு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 9-ம் தேதி தடை விதித்தது. மேலும் நிலங்களை வகைப்படுத்தி, பட்டியலை தாக்கல் செய்யவும் தமிழக அரசுக்கு உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு கடந்த மார்ச் 27ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, ஏற்கெனவே பதிவு செய்யப்பட்ட நிலங்களை மறு பத்திரப்பதிவு செய்ய அனுமதிக்க வேண்டும் என்று தமிழக அரசு கோரிக்கை விடுத்தது. இதையடுத்து, 2016ஆம் ஆண்டு அக்டோபர் 20ஆம் தேதிக்கு முன்னர் பதிவு செய்யப்பட்ட நிலங்களை, மறு பத்திரப்பதிவு செய்ய அனுமதி வழங்கிய உயர்நீதிமன்றம், நிலங்களை வகைப்படுத்தி, விரைவில் அறிக்கை தாக்கல் செய்யவும் தமிழக அரசுக்கு உத்தரவிட்டது. இதன் பிறகு இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது நிலங்களை மறுபத்திரப்பதிவு செய்ய வழங்கப்பட்ட அனுமதியை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. இந்நிலையில், இந்த வழக்கு, இன்று தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி டீக்கா ராமன் ஆகியோர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், அங்கீகாரமில்லாத நிலங்களை பத்திரப்பதிவு செய்யவும், விளை நிலங்களை வீட்டுமனைகளாக மாற்றுவதற்கு அனுமதிப்பது தொடர்பாகவும், பத்திரப்பதிவு விதியில் திருத்தம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். அமைச்சரவையில் ஒப்புதல் அளிக்கப்பட்ட இந்த புதிய வரைவு விதிகள் அரசாணையாக வெளியிடப்பட்டு, நாளை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்றும் கூறினார். இதையடுத்து, யானை ராஜேந்திரன் மற்றும் ரியல் எஸ்டேட் தரப்பினரின் வாதங்கள் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு நாளையும் நடைபெறும் என்பதால், விரைவில் தீர்ப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad