ஃபாஸ்ட்ஃபுட் விளம்பரங்களுக்கு தடை விதிக்க வேண்டும்-உணவு பாதுகாப்பு ஆணையம்.
இந்தியாவில் ஆரோக்கியமான உணவுகளை தவிர்த்துவிட்டு, ஃபாஸ்ட் ஃபுட் சாப்பிடுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஃபாஸ்ட் ஃபுட் உணவுகளை சாப்பிடுவதால், உடல் பருமன், நீரிழிவு உள்ளிட்ட பல பிரச்சனைகள் ஏற்படுவதாக மருத்துவர்கள் தொடர்ந்து எச்சரித்து வந்தாலும், யாரும் அதை பொருட்படுத்துவதில்லை. ஒரு சில பெற்றோர் தங்களின் குழந்தைகளுக்கு ஃபாஸ்ட் ஃபுட் உணவுகளைத் தவிர்த்து, ஆரோக்கியமான உணவுகள் மற்றும் பழங்களை வாங்கித் தருகின்றனர். ஆனால், விளம்பரங்களால் ஈர்க்கப்பட்ட சிறுவர்கள், பாக்கெட்டுகளில் அடைத்து விற்கப்படும் ஃபாஸ்ட் ஃபுட் உணவுகளே வேண்டும் என்று அடம்பிடித்து, அதை வாங்கிக் சாப்பிடுகின்றனர். இதனால், நகரங்கள் மட்டுமின்றி, கிராமங்களிலும் சிறுவர்கள் உடலுக்கு கேடு விளைவிக்கும் ஃபாஸ்ட் ஃபுட் உணவுகளை சாப்பிடுவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், சிறுவர்களை ஈர்க்கும் வகையில் வெளியிடப்படும் ஃபாஸ்ட் ஃபுட் தொடர்பான விளம்பரங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் பரிந்துரைத்துள்ளது. கொழுப்பு, சர்க்கரை மற்றும் உப்பு ஆகியவை அதிக அளவில் கலக்கப்பட்ட உணவுகளை சிறுவர்கள் சாப்பிடுவதால், அதிக உடல் எடை, உடல் பருமன் போன்ற பிரச்சனைகள் ஏற்படுவதாக அந்த ஆணையம் தெரிவித்துள்ளது. ஃபாஸ்ட் ஃபுட் விளம்பரங்களில் பிரபலங்கள் நடிப்பதை ஊக்குவிக்கக்கூடாது என்றும், பாக்கெட்டுகளில் அடைத்து விற்கப்படும் ஃபாஸ்ட் ஃபுட் உணவுகளுக்கு கூடுதல் வரி விதிக்க வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு, உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. மேலும், ஆரோக்கியமான உணவுகளை குழந்தைகள் சாப்பிடுவதை ஊக்குவிக்க, ஊட்டச்சத்து தொடர்பான விழிப்புணர்வை விளம்பரங்கள் மூலம் ஏற்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.
கருத்துகள் இல்லை