முதியோர் இல்லம் அருகே டாஸ்மாக் கடைகளை அமைக்கக்கூடாது - உயர்நீதிமன்றம்.
முதியோர் இல்லம் அருகே டாஸ்மாக் கடைகளை அமைக்கக்கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டம் அய்யம்பாளையம் கிராம பஞ்சாயத்து பகுதியில், முதியோர் இல்லம் அருகே டாஸ்மாக் கடை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதனை எதிர்த்து அய்யம்பாளையம் கிராம பஞ்சாயத்து முன்னாள் தலைவர் ராஜூ என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் அடங்கிய அமர்வின் முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது, வழிபாட்டுத் தலங்கள், கல்வி நிறுவனங்கள் அருகே அமைக்கக்கூடாது என்று உச்சநீதிமன்ற உத்தரவை குறிப்பிட்ட நீதிபதிகள், இதுபோன்ற வழிமுறைகளை டாஸ்மாக் கடைகள் அமைக்கும்போது பின்பற்ற வேண்டும் என்றனர். வழிபாட்டுத்தலங்கள் கல்வி நிறுவனங்கள் அருகே அமைக்கக்கூடாது என்ற உத்தரவு, முதியோர் இல்லங்களுக்கும் பொருந்தும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர். முதியோர் இல்லங்கள் அருகே டாஸ்மாக் மதுபானக்கடைகள் அமைத்தால், அவர்களின் அமைதியான வாழ்க்கை பாதிக்கப்படும் என்றும் கூறிய நீதிபதிகள், முதியோர் இல்லங்கள் அருகே அரசு மதுபான கடைகள் அமைக்கக்கூடாது என்று உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.
கருத்துகள் இல்லை