Header Ads

 • BREAKING  ஏழைகளெல்லாம் பிணமாக நடத்தப்படும் நாட்டில், நிஜ பிணத்துக்கு ஆம்புலன்ஸ் எப்படி கிடைக்கும்?.


  ஒடிசாவில் மனைவியின் பிணத்தை 10 கிலோ மீட்டர் தூரம் தோளில் சுமந்து சென்ற நபரின் காட்சிப்பதிவுகள் சமூக வலைதளங்களை சிலமாதங்களுக்கு முன்னால் ஆக்கிரமித்துக் கொண்டிருந்தது. சமூக வலைதளங்களில் இருந்து தங்கள் செய்திகளை வடிவமைக்கும் தொலைக்காட்சிகளும் இச்செய்தியை ஒளிபரப்பின. பாமரர்கள் இச்செய்தியைப் பார்த்து பதறுவது புரிந்துகொள்ளக்கூடியது. மரியாதையான மரணமும் இறுதிச்சடங்கும் ஏராளமான மனிதர்களின் வேண்டுதலில் உள்ள எதிர்பார்ப்பு. ஆனால் ஊடகங்களின் குரலும் அதே பாமரத்தனத்தோடு இருப்பது நயவஞ்சகமான எதிர்வினை.


  "நாய் மனிதனை கடிப்பது செய்தியல்ல, மனிதன் நாயைக் கடித்தால்தான் அது செய்தி" என பாரதி கிருஷ்ணகுமார் சொல்லக் கேட்டிருக்கிறோம். அப்படியே பெருந்தொகையான ஏழைகள் வாழும் உரிமை மறுக்கப்பட்டு மரணத்தை நோக்கி தள்ளப்படும் நிகழ்வுகள் கணக்கு வழக்கின்றி நடக்கிறது. அவை சுவாரஸ்யமற்றவை, நாட்டில் நடக்கும் பெரும் படுகொலையின் ஒரு சிறு நீட்சி இது. ஆனால் இங்கே அதன் அடிப்படை காரணி புறந்தள்ளப்பட்டு இறந்த பெண்ணின் கௌரவமான கருமாதியை மட்டும் கவனிக்க வைக்கும் செய்திக்கண்ணோட்டம் கையாளப்படுகிறது.

  தஞ்சாவூர் மருத்துவக்கலூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அம்மாவைப் பார்க்க 20 கிலோமீட்டர் நடந்து வந்த மகனை நான் இளம் வயதில் பார்த்திருக்கிறேன். இப்போது போய் அரசு மருத்துவமனையைப் பாருங்கள் அன்றைய நிலையில் இருந்து எந்த மாற்றமும் இருக்காது. பிறந்த பிள்ளைக்கு புதுத்துணி எடுத்துதர இயலாத தகப்பன்களும், எல்லா வியாதிக்கும் பாரசிட்டமால் மாத்திரை வாங்கிச்செல்லும் மனிதர்களும், ஸ்கேனுக்கு 500 ரூபாய் கொடுக்க முடியாமல் தலைக்காயத்தோடு விதியின்மீது பாரத்தைப்போட்டு காத்திருக்கும் மனிதர்களும் தினசரி தட்டுப்படுவார்கள்.
  அரசு மருத்துவமனைகளுக்கு நிதியில் பெருமளவு பணம் நோயாளிகளுக்கு பலன் தராத செயல்பாடுகளில் முடக்கப்படுகிறது. ஸ்கேன் எந்திரங்கள் பல வாங்கப்படும், ஆனால் அவற்றை கையாள ஆட்கள் நியமிக்கப்பட மாட்டார்கள். தனியார் கண் மருத்துவமனைகளின் முகாம்களுக்கு மட்டும் மாவட்ட வாரியாக கோடிகளில் பணம் ஒதுக்கப்படுகிறது. ஆனால் அரசு கண் மருத்துவமனைகள் அடிப்படை தேவைகள்கூட இன்றி அல்லாடுகின்றன. இதற்கான காரணம், எந்திரங்களிலும் கட்டிடங்களிலும் கமிஷன் பார்ப்பது எளிது.

  அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில் ஒரு புற்றுநோய் கண்டறியப்பட்ட நோயாளி உடனடியாக உயர் சிகிச்சை பெற இயலாது. சமயத்தில் மாதக்கணக்கில் காத்திருக்க நேரலாம், காரணம் கட்டுக்கடங்காத நோயாளிகளின் எண்ணிக்கை. தேறாத நோயாளிகள் என வகைப்படுத்தப்படுபவர்களை வீட்டுக்கு அனுப்பும் செயலும் சாதாரணமாக நடக்கும், காரணம் அந்த படுக்கையில் சிகிச்சை பெற இன்னும் பலர் வெளியே காத்திருப்பார்கள். நம்மிடம் உள்ள புற்று நோயாளிகள் எண்ணிக்கைக்கு நமக்கு மாவட்டத்துக்கு ஒரு புற்றுநோய் மருத்துவமனை தேவை, நாமக்கோ அடையாறு புற்றுநோய் மருத்துவமனை எனும் தனியார் மருத்துவமனைதான் ஏழைகளின் இறுதி வாய்ப்பு (எல்லோருக்கும் இலவச சிகிச்சை தரப்படாது, அங்கே பல அடுக்கு சிகிச்சை உண்டு அதில் இலவச சிகிச்சையும் உண்டு).
  இந்தியாவில் சாதாரண வயிற்றுப்போக்கிற்கு சிகிச்சைபெற முடியாமல் இறந்துபோகும் மக்கள் லட்சக்கணக்கில் இருக்கிறார்கள். ஆகவே புற்றுநோய்க்கெல்லாம் ஏழைகள் சிகிச்சை எதிர்பார்ப்பது தகுதிக்கு மீறிய ஆசை. ஆகவே அதை விட்டுவிட்டு தினசரி வாழ்வுக்கான வழியாவது இருக்கிறதா என பார்க்கலாம்.

  பிணங்கள் பயணிக்கத்தான் வழியில்லை. உயிரோடு இருக்கும் ஏழைகள் பயணிக்கும் அரசுப் பேருந்துகள் எப்படி இருக்கிறது?

  நீண்டதூரம் பயணிக்கும் வசதியற்ற மக்கள் அரசுப்பேருந்துகளைத்தான் நம்பியிருக்கிறார்கள். இப்போது இயங்கிக்கொண்டிருக்கும் நீண்டதூர பேருந்துகளில் பாதி ஓடத் தகுதியற்றவை. வார இறுதி நாட்களில் பெருநகர பேருந்து நிலையங்களைப் போய்ப்பாருங்கள். மக்களின் நரக வேதனையை கண்கூடாக காணலாம். முன்பதிவு செய்யப்பட்ட அரசுப்பேருந்துகளையே இயக்க முடியாமல் அல்லாடுகிறது அரசு. பல சமயங்களில் எங்கிருந்தோ வரும் பேருந்துகளை மாற்றிவிட அதிகாரிகள் அல்லாடுவதை நேரில் பார்த்திருக்கிறேன். தொலைதூர சாதாரண பேருந்துகளில் தலைசாய்க்க தோதாக இருக்கைகள் இல்லை, அதன் உயரம் குறைக்கப்பட்டிருக்கிறது. இதில் பலமணிநேரம் பயணித்து மறுநாள் பணிக்கு செல்வோரது துயரம் இதுவரை யாராலும் பதிவு செய்யப்படவில்லை. புதிய பேருந்துகளின் இருக்கை வடிவமைப்பை ஒரு சைக்கோதான் செய்திருக்க வேண்டும். இவற்றில் சராசரி உயரம் உள்ளவர்களே முடக்கித்தான் உட்கார முடியும். நகரப்பேருந்துகள் இன்னும் லட்சணம், உடலில் கீறல் விழாமல் தப்பிக்கவே நீங்கள் பூர்வ ஜென்மத்தில் புண்ணியம் செய்திருக்க வேண்டும்.

  இதே கதைதான் ரயில் வசதிகளுக்கும். திருச்சி காரைக்கால் இடையேயான பாசஞ்சர் ரயில்கள் பெரும் நெரிசலுடனேயே இயங்குகின்றன. காரணம் அவற்றின் கட்டணம் பேருந்தைவிட பாதிக்கும் குறைவு. இதற்காக தங்கள் பயணத்திட்டத்தையே மாற்றுகிறார்கள் சாமனிய மக்கள். லாபம் தரும் வழித்தடங்களிலும் கூடுதல் ரயில்கள் இயக்கப்படுவதில்லை. தஞ்சாவூர் சென்னைக்கான அகல ரயில் பாதைப்பணிகள் 10 ஆண்டுகள் இழுத்தடிக்கப்பட்டது, காரணம் தனியார் ஆம்னி பேருந்து உரிமையாளர்களின் செல்வாக்கு. வசதியற்ற முதியவர்களின் பயணத்துக்கு ஓரளவு உகந்தது ரயில்கள்தான். அங்கு அவர்களுக்கு தரப்பட்டு வந்த சலுகைக் கட்டணத்துக்கு சங்கு ஊத ஏற்பாடுகள் நடக்கின்றன. ஆண்டுக்கு 75 கோடிகளை உடுத்தும் ஆடைக்காக செலவளிக்கும் டெல்லி கிழவர் மோடி கூச்சநாச்சமே இல்லாமல் முதியோர் கட்டண சலுகையை விட்டுத்தாருங்கள் என வேண்டுகோள் விடுக்கிறார். ரயில்வே சீர்திருத்த கமிட்டிகள் ஊனமுற்றோர் பயணச்சலுகைகளையும் தண்டச்செலவுகள் என வரையறுத்து அதனை நிறுத்தச்சொல்கின்றன.

  காவல் நிலையம், நீதிமன்றம், சிறை, தாலுக்கா அலுவலகம் என எல்லா அரசு அலுவலகங்களிலும் ஏழைகள் நாயினும் கீழாக நடத்தப்படுவதை கண்கூடாக பார்க்கலாம். ஜாமீன் மனு போட வசதியில்லாத காரணத்தால் அதிகபட்ச தண்டனை காலத்தை கடந்தும் விசாரணைக் கைதிகளாகவே இருப்பவர்கள் இந்தியாவில் லட்சக்கணக்கில் இருக்கிறார்கள். அதிகார வர்க்கம் மட்டும்தான் இப்படி என நினைப்பதற்கில்லை. அரசின் சேவைத்துறைகளிலும் இதுதான் நிலை. அரசின் உதவித்தொகையைப் பெறுவதற்காக வங்கிக் கணக்கு ஆரம்பிக்கும் ஏழைகளின் நிலையை போய் பாருங்கள், கோரிக்கைகளை தட்டிக்கழிக்க முனைவது மட்டுமல்ல குறைந்தபட்ச மரியாதைக்குக்கூட தகுதியற்றவர்கள் எனும் கண்ணோட்டத்துடனேயே அவர்கள் அனுகப்படுவார்கள். காரணம், ஏழைகளை இப்படி நடத்தினால் போதும் எனும் நம்பிக்கை அரசாங்கத்தின் எல்லா மட்டத்திலும் இருக்கிறது.

  இந்த வம்பே வேண்டாம் என்று நடந்து போகும் ஆட்களுக்கும் இங்கு மரியாதை கிடையாது. பெருமளவில் கட்டணச்சாலைகளுக்காக கையகப்படுத்தப்பட்டிருக்கும் சாலைகளில் பாதசாரிகள் மீது கரிசனமே கிடையாது. உதாரணத்துக்கு கிருஷ்ணகிரி – பெங்களூர் சாலையை எடுத்துக்கொள்ளுங்கள், ஓசூர் தர்கா முதல் மூக்கொண்டபள்ளி பேருந்து நிறுத்தம்வரையான தூரம் 3 கிலோமீட்டர் இருக்கலாம். ஆனால் பாதசாரிகள் இவற்றுக்கிடையே சாலையை கடக்க எந்த வசதியும் கிடையாது. ஆயிரக்கணக்கான மக்கள் இடுப்பளவு உள்ள தடுப்பை தாண்டி உயிரைப் பணயம் வைத்தே சாலையின் மறுபக்கத்தை அடைகிறார்கள். பல கிராமங்களையும் சிறு நகரங்களையும் பிளந்துகொண்டு செல்லும் கட்டணச்சாலைகளின் நிலை இதுதான்.

  இப்படியான வாழ்வியல் சிரமங்களை சொல்லும்போதெல்லாம் நமது நடுத்தரவர்க்க நற்செய்தியாளர்கள் “கடுமையாக உழைத்து” பணம் சேர்த்தால் இந்த துயரங்களை எளிதில் சமாளிக்கலாம் இல்லையா என ஆலோசனை சொல்வார்கள். இந்த வாய்கள் எல்லாம் பெருமுதலாளிகளுக்கான சலுகைகளைப் பற்றி பேச மறுத்து வறியவர்களுக்கு கிடைக்கும் புளுத்துப்போன இலவச அரிசியால் நாடு குட்டிச்சுவராய் போவதாக புலம்புபவை. ஆனால் இவர்களுக்கு எது உழைப்பு என்பதில் எந்த கருத்தும் கிடையாது. ஒரு சிறப்பு மருத்துவரின் 3 நிமிட உழைப்புக்கு 400 ரூபாய் கொடுக்க தயங்காத என் உறவினர் ஒருவர் தன் வீட்டில் நடந்த 3 மணிநேர வயரிங் வேலைக்கு 500 ரூபாய் கேட்பது அநியாயம் என்கிறார். இதன் அடிப்படை காரணம் ஏழைகள் அதிகம் சம்பாதிக்க தகுதியற்றவர்கள் எனும் எண்ணம் பரவலாக இருப்பதுதான். விவசாய வேலைகள் ஏறத்தாழ ஒழிந்தாயிற்று, கட்டிட வேலை முதல் உணவகப் பணிவரை எல்லாவற்றும் மலிவுக்கூலிகள் இறக்குமதி செய்யப்படுகிறார்கள். இதையெல்லாம் தாண்டித்தான் ஒருவன் இங்கே சம்பாதித்தாக வேண்டும், கடுமையான விலைவாசியைத் தாண்டி அதில் சேமிக்கவும் வேண்டும்.

  கடுமையான உடலுழைப்பு பணிகளில் இருப்போர் நீண்டகாலம் அதே வேலையில் இருக்க முடியாது. வயதான பின் அவர்களுக்கு வேலைதர இங்கே எந்த ஏற்பாடும் இல்லை. அதிருஷ்டவசமாக உழைத்து பணம் சேமிக்க வழியிருந்தாலும் பெரிய பிரயோஜனம் இல்லை. காரணம் வங்கி சேமிப்புக்கான தற்போதைய வட்டிவிகிதங்கள் பணவீக்க விகிதத்துக்கு மிக அருகில் இருக்கின்றன. போதுமான எண்ணிக்கையில் முதியோர் காப்பகங்கள் இங்கில்லை, உருப்படியான முதியோர் பாதுகாப்பு திட்டங்கள் இங்கே கிடையாது (பல வளர்ந்த நாடுகள் தங்கள் வருவாயில் பெருந்தொகையை முதியோர் நலனுக்காக செலவிடுகின்றன, சீனாவில் பெரும்பான்மையான முதியோர் இல்லங்களில் நீச்சல் குளம்கூட இருக்கும்). இங்கே பணமில்லாத முதியவர்களுக்கு மரணத்தை எதிர்பார்த்து காத்திருப்பதைத்தவிர வேறு வழியில்லை.

  இதற்கும் மிடில் கிளாஸ் பிரசங்கிகளிடம் தீர்வு உண்டு. எப்படியாவது பிள்ளைகளை “நன்றாக படிக்க” வைத்துவிட்டால் அதன் மூலம் வாழ்வில் முன்னேறலாம் என்பது அவர்களது அசைக்க முடியாத நம்பிக்கை. அந்த வாய்ப்பை பரீட்சித்துப் பார்க்க ஏழைகளுக்கு உள்ள ஒரே வாய்ப்பு அரசாங்கப்பள்ளிகள்தான். ஆனால் அவை மரணப்படுக்கையில் வைக்கப்பட்டு கால் நூற்றாண்டுகளாகிறது. இந்தியா முழுக்க 5 லட்சத்துக்கும் மேற்பட்ட ஆரம்பப்பள்ளி ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன (நிஜமான பற்றாக்குறை இன்னும் கணிசமாக இருக்கும்). மிச்சமிருக்கும் பள்ளிகளை இழுத்து சாத்த டெல்லியில் இருந்து மேக்கப் மாடலும் சென்னையில் ரெஸ்ட் ராணியின் வழிவந்த அரசும் முழுமூச்சுடன் செயல்படுகிறார்கள். புதிய கல்விக்கொள்கை, வீடியோ வழி கல்வி மூலம் அரசாங்க ஆசிரியர் வர்க்கத்தை ஒழிக்க முனைகையில் மாநில அரசு ஆசிரியர் நியமனத்தையே நிறுத்தி வைத்திருக்கிறது.

  இவ்வளவுக்குப் பிறகும் தவறிப்போய்கூட யாரும் மேல்படிப்புக்கு போகக்கூடாது என்று ஆறாம் வகுப்பிலேயே மாணவனை தரம் பிரித்து அவர்களை அடிமட்ட வேலைகளிலேயே நிரந்தரமாக்க திட்டம் வகுக்கப்பட்டிருக்கிறது. கல்லூரிக் கட்டண உயர்வு, கல்வி நிலையங்கள் தனியார் மயம் என ஏராளமான யோசனைகள் ஏழைகளின் கல்விக்கனவுக்கு எள்ளும் தண்ணீரும் தெளிக்க காத்திருக்கின்றன.

  நிகழ்காலமும் எதிர்காலமும் நம்பிக்கையளிக்கும்படி இல்லாமல் தவிக்கும் ஏழைகளிடம் உள்ள கொஞ்சநஞ்ச பணம் மற்றும் நேரத்தை சாமியும் சாராயமும் அபகரிக்கின்றன. பங்காரு சாமியாரின் ஒரே இலக்கு ஏழைகள்தான். சீரியல்கள் மூலம் ஜோதிடமும் பரிகாரங்களும் ஏழை மக்களிடம் இப்போது தீவிரமாக நிலைகொடிருக்கின்றன.

  இந்திய ஏழைகள் இப்போது முற்றாக மரண விளிம்பில் நிறுத்தப்பட்டிருக்கிறார்கள். அதனை அவர்கள் அறிந்துகொள்வதை தடுக்கவே இனவெறியும் மதவெறியும் கூடுதலாக பக்தியும் ஜோதிடமும் ஊட்டி வளர்க்கப்படுகின்றன. நம் நாட்டில் எண்ணிக்கையில் அடங்காத அளவுக்கு பிணங்கள் அதிகாரவர்க்கத்தை உற்பத்தி செய்யப்படுகிறது. அதனை கவனமாக தவிர்க்கும் ஊடகங்கள், அந்த பலியாடுகளில் சிலவற்றுக்கு கிடைக்காமல் போகும் கடைசி மரியாதை பற்றிய ஆதாரங்கள் கிடைத்தால் அவற்றை வெளியிட்டு தங்கள் பாவத்தை கழுவ முற்படுகின்றன.

                                                                                                             BY: வில்லவன் ராமதாஸ்.

  கருத்துகள் இல்லை

  Post Bottom Ad