Header Ads

  • BREAKING



    மருத்துவ கலந்தாய்வை ரத்து செய்யக்கோரி, அரசு மருத்துவர் சங்கத்தினர் போராட்டம்.



    மருத்துவ பட்ட மேற்படிப்புக்கான கலந்தாய்வை ரத்து செய்யக்கோரி, கலந்தாய்வு நடைபெறும் கூடத்திலேயே மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால், கலந்தாய்வு தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. மருத்துவப் பட்ட மேற்படிப்புக்கான கலந்தாய்வு, சென்னை ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனையில் இன்று தொடங்குகிறது. மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான கலந்தாய்வு இன்று நண்பகல் 12 மணியளவில் தொடங்கும் அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால், ஏற்கெனவே அழைக்கப்பட்டிருந்த 11 மாணவ, மாணவிகள் ஓமாந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனை வளாகத்திற்கு வந்திருந்தனர். இந்நிலையில், மருத்துவப் பட்ட மேற்படிப்புக்கான கலந்தாய்வை ரத்து செய்யக்கோரி, அரசு பல்நோக்கு மருத்துவமனை வளாகத்தில், தமிழ்நாடு அரசு மருத்துவ அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, அரசு மருத்துவர்களுக்கான 50 சதவீத இட ஒதுக்கீட்டை உறுதி செய்ய வேண்டும் எனவும், சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக, தமிழக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் எனவும் முழக்கமிட்டனர். அனுமதியின்றி திடீரென போராட்டம் நடத்திய அரசு மருத்துவர்களை போலீசார் கைது செய்தனர்.
    இதையடுத்து, திட்டமிட்டபடி, கலந்தாய்வு தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீரென கலந்தாய்வு கூடத்துக்குள்ளும் நுழைந்த சில மருத்துவர்கள், கலந்தாய்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து, போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, அவர்களை வெளியேற்றிய போலீசார், தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், முதுநிலை மருத்துவப் பட்ட மேற்படிப்புக்கான கலந்தாய்வு தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad