இரட்டைக் கொலையில் தொடர்புடைய கைதி புழல் சிறையில் தற்கொலை.
இரட்டை கொலை வழக்கில் தொடர்புடைய கைதி ஒருவர், புழல் சிறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சென்னையை அடுத்த போரூரைச் சேர்ந்த அதிமுக பிரமுகர் ராஜ்குமார், அவரது மகன் சாந்தகுமார் ஆகியோர் கடந்த பிப்ரவரி மாதம் படுகொலை செய்யப்பட்டனர்.
இந்த வழக்கில் கைதான தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிர்வாகி செந்தில்குமார் புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் நேற்று மாலை கைதி செந்தில்குமார், கழிவறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. செந்தில்குமாரின் உடலை கைப்பற்றிய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். புழல் சிறையில் கடந்த ஓராண்டில் மட்டும், சுவாதி கொலை வழக்கில் ராம்குமார், கடந்த 10 ஆம் தேதி ஆசிரியை கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட இளையராஜா, தற்போது இரட்டை கொலை வழக்கில் செந்தில்குமார் என தற்கொலை செய்துகொள்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. புழல் சிறையில் அடிக்கடி தற்கொலை சம்பவங்கள் நிகழ்வதால், அங்கு பாதுகாப்பு குறைபாடு உள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
கருத்துகள் இல்லை