Header Ads

 • BREAKING  டாக்ஸி ஓட்டுனரின் பிடியில் சிக்கி சீரழிந்த சிறுமி.  நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம் அடுத்த விக்கிரமசிங்க புரத்தை சேர்ந்த சிறுமி ஒருவர், பாளையங்கோட்டை என்.ஜி.ஓ. காலனியில் செயிண்ட் ஜோசப் கான்வென்ட் பள்ளியின் விடுதியில் தங்கி 9ஆம் வகுப்பு படித்து வந்தார். கடந்த மாதம் இறுதி தேர்வுக்கு முன்பாக ஒரு நாள் திடீரென மாயமானார். மாணவி மாயமானது குறித்து பெருமாள் புரம் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது.
  காணாமல் போவதற்கு முந்தைய நாள் அந்த மாணவி, அவரது சித்தப்பா முருகன் என்பவருடன் பேசிக்கொண்டிருந்தது தெரியவந்தது, முருகனையும் காணவில்லை என்பதால் அவர் மாணவியை கடத்திச்சென்றிருக்கலாம் என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணையை முன்னெடுத்தனர்.
  ஒரு மாதமாக தலைமறைவாக இருந்த டாக்சி ஓட்டுனர் முருகன் கடந்த 4 ந்தேதி தனது மனைவியை செல்போனில் தொடர்பு கொண்ட முருகன், தான் நெல்லை புதிய பேருந்து நிலையத்தில் இருப்பதாகவும் அங்கு வந்தால் பல உண்மைகள் தெரியும் என்றும் அழைப்பு விடுத்தார். உஷாரான முருகனின் மனைவியோ தனது கணவர் பேருந்து நிலையத்தில் பதுங்கி இருக்கும் தகவலை காவல்துறையினரிடம் தெரிவித்தார்.
  இதையடுத்து அங்கு விரைந்து சென்ற காவல்துறையினர் முருகனை சுற்றிவளைத்து பிடித்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் உண்மை வெளிச்சத்திற்கு வந்தது. நெல்லையில் டாக்சி ஓட்டிவந்த முருகன் உறவினர் என்ற முறையில் , 9 ஆம் மாணவியை வாரம் தோறும் விடுதியில் சந்திப்பதை வழக்கமாக கொண்டிருந்ததாக கூறப்படுகின்றது. அழகாக இருப்பதாக கூறி அந்த மாணவிக்கு காதல் வலை வீசிய முருகன் தான் தந்தை உறவு முறை என்பதையும் மீறி வசதியாக வாழவைப்பதாக ஆசைக்காட்டி மகள் உறவு முறை கொண்ட அந்த சிறுமியை தனது வலையில் விழவைத்தான். ஒரு மாதத்துக்கு முன்பு ஆண்டு இறுதி தேர்வுக்கு தயாராகிக்கொண்டிருந்த மாணவியின் மனதில் சஞ்சலத்தை ஏற்படுத்தி, விடுதியில் இருந்து ஏமாற்றி காரில் கோவைக்கு அழைத்துச்சென்றுள்ளான் முருகன்.
  தனக்கு ஏற்கனவே திருமணமாகி இரு குழந்தைகள் இருக்கும் நிலையில் மனைவி மற்றும் குழந்தைகளின் எதிர்காலத்தை மறந்து, 9 ஆம் வகுப்பு மாணவியை 2 வதாக திருமணம் செய்து அந்த சிறுமியின் வாழ்க்கையையும் சேர்த்து சீரழித்துள்ளான் முருகன், முடிவில் மனைவியை சமாதானப்படுத்தி புகாரை வாபஸ் வாங்க வைக்கும் திட்டத்துடன் நெல்லைக்கு வந்த போது டாக்சி ஓட்டுனர் முருகன் சிக்கிக் கொண்டான் என்கிறது காவல்துறை.
  அவன் கொடுத்த தகவலின்படி பெருமாள் புரம் உதவிஆய்வாளர் நல்லமணி தலைமையிலான சிறப்புபடையினர் கோவைக்கு சென்று அங்கு ஒரு அறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த அந்த 9 ஆம் வகுப்பு மாணவியை மீட்டு நெல்லைக்கு அழைத்து வந்தனர்.
  அவர் 18 வயது பூர்த்தி அடையாதவர் என்பதால் அவரே விருப்பிச்சென்றாலும் இந்த சம்பவம் கடத்தல் என்றே சட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. எனவே டாக்சி ஓட்டுனர் முருகன் மீது ஏமாற்றுதல், நம்பிக்கை மோசடி,கடத்தல், குழந்தைகளுக்குக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சட்டம், பலாத்காரம், அடைத்துவைத்தல், உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ள பெருமாள் புரம் காவல்துறையினர் முருகன் இதுபோல் வேறு யாரையாவது ஏமாற்றி பலாத்காரம் செய்துள்ளாரா என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.
  உறவினராக இருந்தாலும் பெண் பிள்ளைகளை பழக அனுமதிப்பதில் பெற்றோர் கவனமாக இருக்க வேண்டும், அதே நேரத்தில் மாணவிகள் படிக்கின்ற வயதில் படிப்பில் கவனத்தை செலுத்தாமல் காதலில் விழுந்தால் என்ன விதமான விபரீதங்கள் நிகழும் என்பதற்கு மற்றோர் சான்றாக மாறி இருக்கிறது இந்த சம்பவம்.

  கருத்துகள் இல்லை

  Post Bottom Ad