Header Ads

  • BREAKING



    செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் மருத்துவர்களாக மாறிய துப்புறவு தொழிலாளர்கள்.



    காஞ்சிபுரம் மாவட்டம் செங்கற்பட்டு அரசு மருத்துவமனையில் அரசு மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பற்றாக்குறை காரணமாக, அங்குள்ள நோயாளிகளுக்கு துப்புறவு தொழிலாளர்கள் மருத்துவம் பார்க்கும் விபரீதம் அரங்கேறி வருகிறது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் செயல்படும் மிகப்பெரிய அரசு மருத்துவமனைகளில், செங்கற்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையும் ஒன்று. இதுதான் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையும்கூட. இங்கு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை மாவட்டங்களில் இருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் சிகிச்சை பெற்று செல்கின்றனர். செங்கற்பட்டு அரசு மருத்துவமனை, சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இருப்பதால், விபத்தில் சிக்கி படுகாயமடைவோரும் இந்த மருத்துவமனையில் அதிகளவில் சேர்க்கப்படுகின்றனர். தற்போதைய நிலவரப்படி, செங்கற்பட்டு அரசு மருத்துவமனையில் 75-க்கும் மேற்பட்ட மருத்துவர்களும், 80-க்கும் மேற்பட்ட செவிலியர்களும், 125-க்கும் மேற்பட்ட பயிற்சி மருத்துவர்களும் இருப்பதாக கூறப்படுகிறது. எனினும், 24 மணி நேர பணிகளுக்கு, இந்த எண்ணிக்கை போதுமானதாக இல்லை என்பதால், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் பணிகளை இங்குள்ள ஒப்பந்த துப்புறவு தொழிலாளர்கள் மேற்கொண்டு வரும் விபரீதம் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. பெரும்பாலும், விபத்தில் சிக்கி அவசர சிகிச்சைக்கு வரும் நோயாளிகளுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் அங்கு இருப்பதில்லை என்று கூறப்படுகிறது. இதனால்

    துப்புரவு பணியாளர்கள் உயிர் காக்கும் பணியில் ஈடுபடும் பகீர் தகவல் அம்பலமாகியுள்ளது. துப்புரவு பணியாளர்கள் மருத்துவர்கள், செவிலியர்கள் என யாருடைய உதவியும் இல்லாமல் சிகிச்கை அளிப்பது நோயாளிகள் மட்டுமல்லாமல் பொதுமக்களையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
    ஊசி போடுவது பார்ப்பதற்கு எளிதாக தோன்றினாலும் அது அவ்வளவு சுலபமானதல்ல. சரியான இடத்தில் செலுத்தாமல் போனாலோ, தசைகளை தளர்ச்சியாக வைத்துக்கொள்ளாமல் இருந்தாலோ நோயாளிகளுக்கு பக்க விளைவுகளை ஏற்படுத்திவிடும். ஊசி போடுவதற்கே இதுதான் நிலைமை எனும்போது, மருந்துகள் மாற்றி செலுத்தப்பட்டாலோ, குளுக்கோஸ் உள்ளிட்டவற்றில் காலாவதி தேதிகளை கவனிக்காமல் செலுத்தினாலோ ஏற்படும் பின் விளைவுகளை பற்றி கேட்கவே வேண்டாம். அப்படியிருக்க, மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் இன்றி வலியில் துடிக்கும் நோயாளிகளுக்கு, மனிதாபிமான அடிப்படையில் துப்புறவு தொழிலாளர்கள் மருத்துவம் பார்த்து வருவதாக நியாயம் சொல்லப்படுகிறது. ஆனால் மனிதாபிமான அடிப்படையிலான உதவி கூட அந்த நோயாளிகளுக்கும், விபத்தில் சிக்கியவர்களுக்கும் ஆபத்தில் முடியும் நிலை இருப்பதை யாரும் மறுக்க முடியாது. எனவே தொடர்புடைய அதிகாரிகள் உடனடியாக தலையிட்டு, துப்புரவு பணியாளர்கள் துப்புரவு பணியை மட்டும் செய்வதை உறுதிப்படுத்த வேண்டும். முதலுதவி சிகிச்சை அளிக்கவும், விபத்தில் சிக்கியவர்களுக்கு அவசர கால சிகிச்சை அளிக்கவும் போதிய செவிலியர்கள் மற்றும் மருத்துவர்களை செங்கல்பட்டு மருத்துவமனைக்கு நியமிக்க வேண்டும் என்கிற கோரிக்கை வலுத்துள்ளது.
    மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் இன்றி துப்புரவு பணியாளர்கள் சிகிச்சை அளிப்பது குறித்து விளக்கம் கேட்க செங்கற்பட்டு மருத்துமனை முதல்வர் குணசேகரனை சந்திக்க முயன்ற போதும் முடியவில்லை. செல்போன் மூலம் தொடர்பு கொண்ட போதும் அவர் அழைப்பை ஏற்கவில்லை.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad