Header Ads

  • BREAKING



    நீச்சல் பயிற்சியின்போது, தண்ணீரில் மூழ்கி சிறுமி பலி.


    சென்னை மேற்கு அண்ணாநகரை அடுத்த பாடி புதுநகரைச் சேர்ந்த சினிமா உதவி இயக்குனர் பிஜு. இவர் 3 ஆம் வகுப்பு படித்து வந்த தனது 8 வயது மகள் ஆண்ட்ரியாவை கோடை விடுமுறையை பயனுள்ள வகையில் கழிக்க வேண்டும் என்பதற்காக நீச்சல் பயிற்சி வகுப்பில் சேர்த்துவிட்டுள்ளார்.
    ஜெ.ஜெ. நகர் காவல் நிலையத்துக்கு எதிரில் உள்ள வி.வி. அகாடமி எனப்படும் தனியார் நீச்சல் பயிற்சி மையத்தில் 12 நாட்கள் முகாமில் சேர்த்து விடப்பட்ட சிறுமி ஆண்ட்ரியாவுக்கு சனிக்கிழமை காலை சீதாராமன் என்பவர் பயிற்சி அளித்துள்ளார். ஐந்தரை அடி ஆழ குளத்தில் நீச்சல் பயிற்சி முடிந்து பயிற்சியாளர் புறப்பட்ட பின்னர் ஆண்ட்ரியாவின் தந்தை பிஜு தனது மகளை தொடர்ந்து நீச்சல் அடிக்க சொல்லி வற்புறுத்தி உள்ளார். அருகில் நீச்சல் அடித்துக்கொண்டிருந்த சிறுவனை போல நீச்சல் அடிக்க சொல்லி வற்புறுத்தி உள்ளார்.
    அப்போது எதிர்பாராதவிதமாக சோர்வடைந்த சிறுமி ஆண்ட்ரியா நீரில் மூழ்கியுள்ளார். இதனை கவனிக்க தவறிய பிஜு சற்று நேரம் கழித்து பார்த்தபோது சிறுமி தண்ணீர் குடித்து உயிருக்கு போராடியதை கண்டு மீட்டுள்ளார். அருகில் இருந்த மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட சிறுமி ஆண்ட்ரியா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக பலியானார்.
    இதையடுத்து, நீச்சல் பயிற்சி மையத்தில் இருந்த சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை ஆய்வு செய்த போலீசார்,குழந்தையின் அருகில் நின்று அவரது தந்தை நீச்சல் அடிக்க வற்புறுத்தும் காட்சிகளை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். வி.வி. நீச்சல் பயிற்சி மைய உரிமையாளர் இளங்கோ, பயிற்சியாளர் சீதாராமன் ஆகியோரிடம் விசாரணை நடத்தினர். சிறுமி ஆண்ட்ரியா உயிரிழப்புக்கு அவரது தந்தையின் அவசர புத்தியே காரணம் என்று நீச்சல் பயிற்சி யாளர் குற்றம்சாட்டினாலும் சிறுமிக்கு ஐந்தரை அடி ஆழ தண்ணீரில் பயிற்சி அளித்தது தவறு என்பதை சுட்டிக்காட்டிய காவல்துறையினர் அவரை காவல் நிலையத்தில் வைத்து விசாரித்து வருகின்றனர்.
    கட்டிடத்திற்குள் அமைக்கப்பட்டுள்ள நீச்சல் பயிற்சி மையத்திற்கு முறையான அனுமதி பெறப்பட்டுள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில் குழந்தைகளுக்கு நீச்சல் பயிற்சி அளிக்கும் போது மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்கிறார் குழந்தைகளுக்கான நீச்சல் பயிற்றுனர் பிரீத்தி
    முன் எச்சரிக்கையை மறந்த நீச்சல் பயிற்சியாளர், தன்னால் முடியாததை தனது பிள்ளைகள் உடனே செய்ய வேண்டும் என்ற அவசர புத்தி கொண்ட தந்தை ஆகியோரால் 8 வயது சிறுமி ஆண்ட்ரியாவின் விபரீத மரணம் நிகழ்ந்திருப்பதாக சுட்டிக்காட்டுகின்றது காவல்துறை..!

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad