Header Ads

  • BREAKING



    கிராம சபைகளில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பகுதிகளில் டாஸ்மாக் கடைகளை திறக்க தடை.



    டாஸ்மாக் கடைகளுக்கு எதிராக கிராம சபைகளில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பகுதிகளில் டாஸ்மாக் கடைகளை திறக்க சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
    தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் செயல்பட்டு வந்த டாஸ்மாக் கடைகளை ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் மூட உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து, நெடுஞ்சாலைகளில் செயல் பட்டு வந்த கடைகளை வேறு இடங்களுக்கு மாற்றும் நடவடிக்கையில் டாஸ்மாக் நிர்வாகம் ஈடுபட்டு வருகிறது. தமிழகத்தில் திருவண்ணாமலை, சேலம், கரூர், அரியலூர் உள்ளிட்ட ஊர்களில் டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து 10க்கும் மேற்பட்ட வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. அதில், புதிய மதுக்கடைகளால் பொதுமக்கள் மற்றும் பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு பாதிப்பு உள்ளதாக கூறப்பட்டிருந்தது. இந்த வழக்குகள் நீதிபதிகள் கிருபாகரன், பார்த்திபன் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, புதிதாக திறக்கப்பட்ட கடைகளை மூட வேண்டும் என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், டாஸ்மாக் கடைகளுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபடும் பொதுமக்கள் மீது போலீசார் எவ்வித தாக்குதலும் நடத்தக்கூடாது என உத்தரவிட்டனர். மேலும் நெடுஞ்சாலைகளில் இருந்து மாற்றப்படும் கடைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம சபை கூட்டங்களில் தீர்மானம் நிறைவேற்றினால், அந்த பகுதிகளில் டாஸ்மாக் கடைகளை திறக்கக்கூடாது என உத்தரவிட்டனர். குடியிருப்பு பகுதிகளில் டாஸ்மாக் கடைகள் திறக்க எதிர்ப்பு தெரிவித்தால் அங்கு திறக்க கூடாது என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். வழக்கு விசாரணை ஜூன் முதல் வாரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad