Header Ads

  • BREAKING



    டாஸ்மாக் விவகாரத்தில் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும்- உயர்நீதிமன்றம்.


    புதிய டாஸ்மாக் மதுபானக் கடைகள் திறப்பதில் விதிகளைப் பின்பற்றினாலும் மக்களின் உணர்வுகளையும் அரசு புரிந்து செயல்படவேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
    கோவை, சேலம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில், 9 மதுக்கடைகளை மூடக் கோரி, பிரபாகர், ஜெயகுமார் உள்ளிட்ட 9 பேர் வழக்கு தொடர்ந்தனர். இதை ஒன்றாக எடுத்து விசாரித்து வரும் வழக்கு, விடுமுறைகால சிறப்பு அமர்வு நீதிபதிகள் மகாதேவன், கோவிந்தராஜ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் மூடப்பட்ட மதுக்கடைகளை வேறு இடங்களில் அமைக்கும் போது மக்கள் எதிர்ப்பு தெரிவித்தும், டாஸ்மாக் கடை அமைப்பதால், பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுவதாகக் கூறியிருந்தனர். தங்கள் பகுதிகளில் மதுக்கடைகள் அமைக்கக் கூடாது எனவும் வாதிட்டனர். அப்போது அரசு வழக்கறிஞர், உச்சநீதிமன்ற உத்தரவுக்குப் பிறகு நெடுஞ்சாலைகளில் இருந்து மாற்றியமைக்கப்பட்ட 41 மதுக்கடைகள் மக்களின் எதிர்ப்பு காரணமாக மூடப்பட்டுவிட்டதாகவும், உச்சநீதிமன்றம் வகுத்துள்ள விதிகளின்படியே டாஸ்மாக் மதுக்கடைகள் அமைப்பதாகவும் தெரிவித்தார்.
    அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், விதிகளைப் பின்பற்றும் அதே நேரத்தில் மக்களின் உணர்வுகளையும் கருத்தில் கொண்டு அரசு புரிந்து செயல்படவேண்டும் என வலியுறுத்தினர். மக்களிடம் இருந்து வரும் கோரிக்கைகளை அரசு பரிசீலிப்பதாக அரசு தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.
    பின்னர் உத்தரவிட்ட நீதிபதிகள், சேலம் மாவட்டம் புதுசாம்பல்பள்ளி பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்துக்கு அருகே அமைக்கப்பட்ட மதுக்கடையை மறுஉத்தரவு வரும்வரை திறக்கக் கூடாது என்றனர். மக்கள் ஆட்சேபணை தெரிவிக்கும் இடங்களில் மதுக்கடைகளை திறக்கக் கூடாது என அரசுக்கு கோரிக்கை விடுத்தால், அதை ஒரு வாரத்தில் பரிசீலித்து முடிவெடுக்கும்படி தெரிவித்து ஜூன் முதல் வாரத்துக்கு வழக்கை ஒத்தி வைத்தனர்.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad