Header Ads

  • BREAKING



    போக்குவரத்து ஊழியர்களின் போராட்டம் இரண்டாவது நாளாக நீடிப்பு.


    போக்குவரத்துக் கழக ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் காரணமாக, தமிழகத்தில் பேருந்து சேவை பெருமளவு பாதிக்கப்பட்ட நிலையில், அவர்களின் போராட்டம் இன்று இரண்டாவது நாளாக நீடித்து வருகிறது.
    13வது ஊதிய ஒப்பந்தத்தை உருவாக்க வேண்டும், ஓய்வூதிய நிலுவைத் தொகையை கணக்கிட்டு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட ஏழு அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியர்கள் நேற்று வேலைநிறுத்தப் போராட்டத்தைத் தொடங்கினர். பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். சென்னையில் மின்சார ரயில்களிலும், எக்ஸ்பிரஸ் ரயில்களிலும் கூட்டம் அலைமோதியது. தனியார் பேருந்துகள், ஷேர் ஆட்டோக்கள் மற்றும் ஆட்டோக்களில் பெரும்பாலோர் பயணம் செய்தனர். 2 ஆயிரத்து 600 மாநகரப் பேருந்துகளில் 400 பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்ட நிலையில், தனியார் பேருந்துகளும் அதிக அளவில் போக்குவரத்துக்கு ஈடுபடுத்தப்பட்டன. திருச்சி மற்றும் மதுரையில் 90 சதவீதம் அளவுக்கு பேருந்துகள் இயக்கப்படவில்லை. சேலம் மற்றும் நாமக்கல்லில் பெரும்பாலான அரசுப் பேருந்துகள் இயக்கப்பட்டன.

    தமிழகம் முழுவதும் ஆங்காங்கே நடைபெற்ற கல்வீச்சு சம்பவங்களில் 55 அரசுப் பேருந்துகளின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன. போக்குவரத்துத் தொழிலாளர் வேலைநிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவர நேற்று முத்தரப்புப் பேச்சுவார்த்தை நடைபெறுவதாக இருந்தது. அதிகாரிகள் பலர் பணிகளில் ஈடுபட வேண்டியிருந்ததால் பேச்சுவார்த்தை ஒத்திவைக்கப்பட்டது. தொழிற்சங்க நிர்வாகிகளுடன் இன்று மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளதாக தெரிவித்த போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், தொழிலாளர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்பதால், வேலைநிறுத்தத்தைக் கைவிட்டு உடனடியாகப் பணிக்குத் திரும்ப வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார். அதே நேரத்தில், அரசு போக்குவரத்துக் கழகங்களில் ஏற்பட்டுவரும் நஷ்டத்தை ஈடுகட்ட தமிழக அரசு கொள்கை முடிவு எடுத்து, எழுத்துப்பூர்வமாக உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்று தொழிற்சங்கத்தினர் வலியுறுத்தி வருகின்றனர். தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் இரண்டாவது நாளாக நீடிப்பதால், தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad