Header Ads

  • BREAKING



    தமிழக மாணவர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்: தொழில் நிறுவனங்களுக்கு உயர்கல்வித்துறை அமைச்சர் வேண்டுகோள்.


    தமிழகத்தில் தொழில் தொடங்கும் நிறுவனங்கள் தமிழக மாணவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்க வேண்டும் என உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
    தமிழ்நாடு சுயநிதி பொறியியல், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளின் கூட்டமைப்பின் சார்பில் திறமையான பொறியாளர்களை உருவாக்குவது தொடர்பான கருத்தரங்கம் சென்னையில் நேற்று நடைபெற்றது. இந்த கருத்தரங்கை தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், அகில இந்திய தொழில்நுட்பக் கவுன்சில் தலைவர் அனில் சகஸ்ரபுதே ஆகியோர் தொடங்கிவைத்தனர்.
    பின்னர், அமைச்சர் கே.பி.அன்பழகன் பேசியதாவது: இந்திய அளவில் ஒரு லட்சம் மக்கள் தொகைக்கு சராசரியாக 27 கல்லூரிகள் உள்ளன. ஆனால், தமிழகத்தில் 37 கல்லூரிகள் உள்ளன. உயர்கல்வியை உயர்த்தும் நோக்கில், கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் 67 அரசு கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன.
    கல்வி நிறுவனங்கள் கால சூழலுக்கு ஏற்ப மாற்றமடைய வேண்டும். காலத்தால் ஏற்படும் மாற்றங்களை மாணவர்களும் உள்வாங்கிக்கொள்ள வேண்டும். உயர்கல்வி பயில்வோரின் எண்ணிக்கையை உயர்த்துவது மட்டுமல்லாமல் அவர்களுக்கு ஏற்ற வேலைவாய்ப்புகளையும் உருவாக்கித் தர வேண்டும். தமிழ்நாட்டில் தொழில் தொடங்கும் நிறுவனங்கள் தமிழக மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு அளிப்பதில் முன்னுரிமை அளிக்க வேண்டும்.
    துணைவேந்தர் இல்லாமல் அண்ணா பல்கலைக்கழக மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டது குறித்து சிலர் மாறுபட்ட கருத்துகளை கூறி வருகின்றனர். அண்ணா பல்கலைக்கழகத்துக்கு துணைவேந்தரை நியமிப்பதற்கான அனைத்து பணிகளையும் அரசு செய்து முடித்துவிட்டது. துணை வேந்தரை தேர்வு செய்ய தேடுதல் குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களின் பட்டியல் ஆளுநரிடம் சமர்ப்பிக்கப்படும். அந்த பட்டியலில் இருந்து துணைவேந்தரை தேர்வு செய்வது ஆளுநரின் கடமை.
    கல்லூரிகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவது குறித்து அரசின் கவனத்துக்கு கொண்டுவந்தால், அந்த கல்லூரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
    இந்த கருத்தரங்கில், இந்திய தொழில்நுட்பக்கல்வி கூட்டமைப்பின் தலைவர் பிரதாப்சிங் தேசாய், உயர்கல்வித் துறை முதன்மைச் செயலர் சுனில் பாலிவால், தமிழ்நாடு சுயநிதி பொறியியல், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளின் கூட்டமைப்பின் தலைவர் ஆர்.எஸ்.முனிரத்தினம் மற்றும் பல்வேறு முன்னணி தொழில் நிறுவனங்களின் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.
    22 கல்லூரிகளை மூடுவதற்கு..
    அகில இந்திய தொழில்நுட்பக் கவுன்சில் (ஏஐசிடிஇ) தலைவர் அனில் சகஸ்ரபுதே கூறுகையில், “நடப்பு கல்வியாண்டில் அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சிலின் கீழ் செயல்படும் கல்லூரிகளில் 311 கல்லூரிகளை தேர்ந்தெடுத்து நாடுமுழுவதும் திடீர் ஆய்வுகளை மேற்கொண்டோம். அதில் 189 கல்லூரிகளில் குறைபாடுகள் இருந்தது தெரியவந்தது. பின்னர், 169 கல்லூரிகள் தங்கள் குறைபாடு களை சரிசெய்ததால் அவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எஞ்சிய கல்லூரிகளில் 49 கல்லூரி களில் மாணவர் சேர்க்கையை மேற்கொள்ள கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது.
    தமிழகத்தைப் பொறுத்தவரை 41 கல்லூரிகளில் திடீர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் 2 கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடத்தக்கூடாது என உத்தரவிட்டுள்ளோம். ஆய்வு செய்த கல்லூரிகளில் 4 கல்லூரிகளில் கடந்த ஆண்டே மாணவர் சேர்க்கை நடத்தப்படவில்லை.
    தமிழகத்தில் ஏஐசிடிஇ-ன் கீழ் செயல்படும் 22 கல்லூரிகள் மூட விருப்பம் தெரிவித்து விண்ணப்பித்துள்ளன. ஆக மொத்தம் இந்தாண்டு தமிழகத்தில் 28 கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடைபெறாது.
    எனவே, நடப்பு நிதியாண்டில் ஏஐசிஇடி-ன் கீழ் செயல்படும் பொறியியல் கல்லூரிகளி்ல் 2.5 லட்சம் இடங்கள் இருக்கும். கடந்த ஆண்டு 2.70 லட்சம் இடங்கள் இருந்தன.
    இதுதவிர, தமிழகத்தில் 16 புதிய கல்லூரிகள் நடப்பாண்டு தொடங்கப்பட உள்ளன. இதில் 8 பார்மஸி கல்லூரிகள், 2 பொறியியல் கல்லூரிகள், 2 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள், 4 பிஜிடிஎம் படிப்பு தொடர்பான கல்லூரிகள் ஆகும்.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad