Header Ads

  • BREAKING



    நோட்டு புத்தகங்கள் விலை உயர வாய்ப்பு.



    தமிழக அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியர்களில், ஒன்றாம் வகுப்பு முதல், 10-ம் வகுப்புவரை, 2012 – 13-ம் கல்வி ஆண்டிலிருந்து, இலவசமாக நோட்டுகள் வழங்கப்பட்டு வருகிறது. அரசு கொள்கை விளக்க குறிப்பேடு தகவல்படி, நான்கு ஆண்டுகளில், சராசரியாக 75 லட்சத்து 60 ஆயிரம் மாணவர்களுக்கு, 426 கோடியே 54 லட்ச ரூபாய் மதிப்பில் இலவச நோட்டுகள் வழங்கப்பட்டுள்ளன. நடப்பு கல்வி ஆண்டுக்கென, 75 லட்சத்து 65 ஆயிரம் மாணவர்களுக்கு, இலவச நோட்டுகள் வழங்க, 107 கோடியே 20 லட்ச ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்காக, மாவட்ட வாரியாக டெண்டர் விடப்பட்டு, மாணவர்களுக்கு நோட்டுகள் வழங்கப்படும்.
    தற்போது, கரூரில் உள்ள அரசு காகித ஆலை நிறுவனம் மற்றும் நாமக்கல் பள்ளிபாளையம் பகுதியில் செயல்படும் தனியார் காகித நிறுவனங்கள், காவிரி படுகையில் நீரேற்று நிலையம் அமைத்து தண்ணீர் எடுத்து வருகின்றன. இதனால், பொதுமக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டதை அடுத்து, காவிரியில் தண்ணீர் எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே, அரசு காகித ஆலை நிறுவனத்தில் செயல்பட்டு வந்த 3 யூனிட்டுகளில், ஒன்று மட்டுமே இயக்கப்படுகிறது. மீதமுள்ள இரண்டு யூனிட்டுகளிலும் குறைந்த உற்பத்தியே நடைபெறுகிறது. இதனால், நோட்டுகளுக்கு தேவையான பேப்பர்களை வழங்க முடியாத சூழ்நிலைக்கு காகித ஆலை நிர்வாகம் தள்ளப்பட்டு, நாளொன்றுக்கு சுமார் 300 டன் உற்பத்தி இழப்பு ஏற்பட்டுள்ளது.
    இதேபோல், பள்ளிப்பாளையம் பகுதியில் செயல்படும் தனியார் காகித ஆலைகளும் தங்களது யூனிட்களை நிறுத்தி, உற்பத்தியை குறைத்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், அண்டை மாநிலங்களான கர்நாடகா, ஆந்திரா மற்றும் கேரளாவில் காகித ஆலைகள் இயக்க கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால், அங்கும் ஆலைகள் மூடப்பட்டன. இதனால், பேப்பர்களை வடமாநிலங்களில் இருந்து வரவழைக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனிடையே, நோட்டுகள் தயாரித்து வழங்கிய ஒப்பந்ததாரர்களுக்கு, கடந்த ஆண்டுக்காக கூலித் தொகை வழங்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது. இதனால் குறிப்பிட்ட நேரத்துக்குள் நோட்டுகளை தயாரித்து, வினியோகிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
    கடந்த மூன்று மாதத்தில் 70-gsm பேப்பர் ஒரு டன் 45 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், தற்போது 50 ஆயிரம் ரூபாய்க்கு விலை உயர்ந்துள்ளது. இதனால் 30 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் நோட்டுகள், 40 முதல் 50 ரூபாய்வரை விலை உயரும் என, காகித ஆலை நிறுவனங்கள் தெரிவிக்கின்றன. தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரி நிர்வாகத்தினர், மொத்தமாக ஆர்டர் கொடுத்து நோட்டுகளை பெறுகின்றனர். நடப்பாண்டு, பேப்பர் தட்டுப்பாட்டை காரணம் காட்டி, நோட்டுகளின் விலையை 40 விழுக்காடுவரை தயாரிப்பாளர்கள் விலை உயர்த்தினால், தனியார் பள்ளிகளும் 40 விழுக்காடு விலை உயர்த்தக்கூடும். இதனால், இந்த கல்வி ஆண்டின் தொடக்கம், பெற்றோருக்கு பொருளாதார சுமையை ஏற்படுத்தும்

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad