Header Ads

  • BREAKING



    வட தமிழகம், புதுச்சேரியில் தீவிர அனல் காற்று வீசும்: சென்னை வானிலை மையம் எச்சரிக்கை.


    வட தமிழகம், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் தீவிர அனல் காற்று வீச வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலைமையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
    அக்னி நட்சத்திரம் தொடங்கியதில் இருந்து தமிழகத்தின் வட மற்றும் உள் மாவட்டங்களில் வெப்பநிலை உச்சத்தில் இருந்து வருகிறது. சென்னையில் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவாக 110 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவாகியுள்ளது. திருத்தணியில் அதிகபட்சமாக 114 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் கொளுத்தியது. பகலில் அனல்காற்று வீசுவதால் மக்கள் வெளியில் வரவே அச்சப்படுகின்றனர்.
    இந்நிலையில், அடுத்த 24 மணி நேரத்தில் வட தமிழகம், புதுச்சேரியில் அனல் காற்று மேலும் தீவிரமாக வீசும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி ஒருவர் கூறியதாவது:
    ஆந்திர மாநிலத்தில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக உள்ளது. அங்கிருந்து தமிழகம் நோக்கி வீசும் வெப்பக்காற்று காரணமாக, தமிழகத்தின் வட மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் கடந்த சில நாட்களாக வெப்பம் அதிகமாக பதிவாகி வருகிறது. அடுத்த 24 மணி நேரத்தில், இப்பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் அனல் காற்று வீசும். ஓரிரு இடங்களில் தீவிர அனல் காற்று வீச வாய்ப்புள்ளது. இயல்பைவிட கடலோரப் பகுதியில் 3 டிகிரி செல்சியஸ் வரையும், உள் மாவட்டங்களில் 4 டிகிரி செல்சியஸ் வரையிலும் வெப்பம் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
    சனிக்கிழமை மாலை 5.30 மணிக்கு எடுக்கப்பட்ட வெப்பநிலை அளவின்படி, அதிகபட்சமாக திருத்தணியில் 111.2, சென்னை மீனம்பாக்கத்தில் 106.88, நுங்கம்பாக்கத்தில் 102.56, வேலூரில் 106.34, பாளையங்கோட்டையில் 105.98, பரங்கிப்பேட்டையில் 105.8, கடலூரில் 105.44, நாகப்பட்டினத்தில் 104.72, மதுரையில் 104, புதுச்சேரியில் 103.46, காரைக்காலில் 103.28, திருச்சியில் 102.74, கரூர் பரமத்தியில் 100.76 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவாகியுள்ளது.
    மழையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம், புதுச்சேரியின் ஓரிரு இடங்களில் வெப்ப சலனம் காரணமாக இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது. உள் மாவட்டங்களில் சூறைக் காற்றுடன் கூடிய மழை பெய்யக்கூடும். கடந்த 24 மணி நேரத்தில் அரூரில் 4 செ.மீ., ஆலங்காயம், ஒகேனக்கல், ஆம்பூர், கிருஷ்ணகிரி ஆகிய பகுதிகளில் தலா 3 செ.மீ., போளூர், சாத்தனூர் அணையில் தலா 2 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad