விழுப்புரம் – திருச்சி இரட்டை ரயில் பாதை அமைக்கும் பணிகள் நிறைவு,
தென் மாவட்ட பயணிகளின் நலன் கருதி, சென்னை – திண்டுக்கல் இடையே, இரண்டாவது அகல ரயில் பாதை அமைக்க திட்டமிடப்பட்டது.
முதற்கட்டமாக, செங்கல்பட்டு – விழுப்புரம் இடையே இருவழிப் பாதை அமைக்கப்பட்டு, ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அடுத்தகட்டமாக, விழுப்புரம் – திண்டுக்கல் இடையே, 281 கிலோ மீட்டருக்கு, புதிய இருவழி ரயில் பாதை அமைக்கும் பணி, 2011ல், தொடங்கப்பட்டது.
தற்போது, விழுப்புரம் – திருச்சி இடையிலான, 128 கிலோ மீட்டருக்கு, ஏழு பிரிவுகளாக மேற்கொள்ளப்பட்ட பணிகள் முடிவடைந்துள்ளதால், வரும் 23-ம் தேதி செவ்வாய் கிழமை முதல் ரயில்கள் அவ்வழியே இயக்கப்படவுள்ளது.
ஏற்கனவே முடிந்த சென்னை முதல் விழுப்புரம் வரையிலான இரட்டை ரயில் பாதையில் ரயில்கள் சுமுகமாக இயங்கி வந்தாலும், அதன் பின் திருச்சி வரை ஒற்றை வழிப்பாதையிலேயே இயக்கப்படுகிறது. இதனால் விழுப்புரம் கடந்தபின், எதிரெதில் வழித்தடத்தில் வரும் ரயில்கள், மற்ற ரயிலுக்கு வழிவிட, நீண்ட நேரம் ரயில் நிலையத்தில் காத்திருக்கும் சூழல் நிலவுகிறது.
தற்போது இரட்டை ரயில் பாதையாக மாறிவிட்டதால், எந்த ரயிலும் காத்திருக்கத் தேவையில்லை. இதனால், அவ்வழியே திருநெல்வேலி, குருவாயூர், ராமேஸ்வரம், நாகர்கோவில், மதுரை, காரைக்குடி, திருச்செந்தூர், தூத்துக்குடி, செங்கோட்டை, திருவனந்தபுரம், கன்னியாகுமரி உள்ளிட்ட பல இடங்களுக்கும், இயக்கப்படும் 33 ரயில்களின் பயண தூரம் தலா 2 மணி நேரம் வரை குறைய வாய்ப்பிருக்கிறது.
உதாரணமாக சென்னை முதல் விழுப்புரம் வரை தடையின்றி இயக்கப்படும் ரயில் தற்போது ஒரே வழிப்பாதையில் விழுப்புரம் கடந்து திருச்சியை அடைய வேண்டுமானால், சுமார் 4 மணி நேரம் வரை பயண நேரமாக எடுத்துக் கொள்கிறது. இரட்டை வழிப்பாதையில் இயக்கப்படும் போது, அதில் ஒன்றரை முதல் 2 மணி நேரம் வரை பயண நேரம் குறைகிறது.
அடுத்தகட்டமாக திருச்சியில் இருந்து திண்டுக்கல் வரையான இரட்டை ரயில் பாதை அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகிறது. இதனிடையே, இரட்டை ரயில் பாதை பணிகளுக்காக எனக்கூறி, ஏறத்தாழ 10 ஆண்டுகளுக்கு முன் விழுப்புரத்தில் இருந்து திருச்சிக்கு நிறுத்தப்பட்ட பயணிகள் ரயிலை மீண்டும் இயக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.
நிறுத்தப்பட்ட பயணிகள் ரயில், விருத்தாச்சலத்தில் இருந்து இயக்கப்படுவதால், அங்கு சென்றடைய பயணிகள் சுமார் 2 மணி நேரம்பேருந்து பயணம் மேற்கொள்கின்றனர்.
அதன் பின் பயணிகள் ரயில் மூலம் திருச்சியை அடைய வேண்டி உள்ளது. எனவே, பயணிகள் ரயில், மீண்டும் விழுப்புரத்திற்கே நீட்டிக்கப்பட்டால், 2 மணி நேரப் பேருந்துப் பயணமானது, இருபதே நிமிட ரயில் பயணமாக சுருங்கும். அன்றாடப் பணிகளுக்காக விழுப்புரத்தில் இருந்து திருச்சி செல்பவர்களுக்கு இது வரப்பிரசாதமாக இருக்கும் எனவும் பயணிகள் தெரிவித்துள்ளனர்.
கருத்துகள் இல்லை