Header Ads

  • BREAKING



    விழுப்புரம்:காதலனுடன் சேர்ந்து கணவனை தீர்த்துகட்டிய மனைவி கைது.


    விழுப்புரத்தில் புதிதாக ஆரம்பிக்கப்பட இருந்த தண்ணீர் சுத்திகரிப்பு ஆலையில் வட மாநில தொழில் அதிபர் ஒருவர் கொலை செய்து புதைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்தி மொழி தெரிந்த நபர் என்று வீட்டுக்குள் நுழைந்த இளைஞரால் நிகழ்ந்த விபரீதம் .
    மேற்கு வங்கத்தை பூர்வீகமாக கொண்ட தொழில் அதிபர் விவேக் பிரசாத்..! இவர் தனது மனைவி ஜெயந்தியுடன் அங்கிருந்து புதுச்சேரிக்கு குடிபெயர்ந்துள்ளார். ஒரே நேரத்தில் கொல்கத்தாவில் உள்ள வியாபார நிறுவனங்களையும், விழுப்புரம் அருகே புதிதாக தொடங்கவிருந்த தண்ணீர் சுத்திகரிப்பு ஆலை பணியையும் கவனித்து வந்த விவேக் பிரசாத் கடந்த 1ஆம் தேதி திடீரென மாயமானார். பல இடங்களிலும் தேடியும் அவர் கிடைக்கவில்லை என்று 3ஆம் தேதி அவரது மனைவி ஜெயந்தி ரெட்டியார் பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

    காவல்துறையினர் விவேக் பிரசாத்தின் செல்போன் அழைப்புகளை ஆய்வு செய்தபோது அவர் கடைசியாக அவரது சூப்பர்வைசர் சேக்பாபுவிடம் பேசி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில் விவேக் பிரசாத் தன்னை சந்திக்க வரவில்லை என்று சேக்பாபு கூறியுள்ளார்.
    காவல்துறையினர் குழம்பி வந்த நிலையில் விவேக் பிரசாத்தின் தண்ணீர் சுத்திகரிப்பு ஆலையை கட்டி வந்த மேஸ்திரி கணபதி என்பவர் மூலம் இந்த வழக்கில் துப்பு துலங்கியது. விவேக் பிரசாத் மாயமானதற்கு மறுநாள் இரவு, சூப்பர்வைசர் சேக் பாபு தன்னை அழைத்ததாகவும், விவேக் பிரசாத்தை அடித்து கொலை செய்து விட்டதாகவும் அதனை புதைக்க குழி தோண்டும் படியும் கூறியதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் கழிவு நீர் தேங்குவதற்காக தோண்டிவைத்திருந்த 6 அடி ஆழ குழி தற்போது மண் போட்டு மூடப்பட்டுள்ளது என்றும் காவல்துறையினரிடம் தகவல் தெரிவித்தார் மேஸ்திரி கணபதி.
    காவல்துறையினர் பொக்லைன் உதவியுடன் அந்த கழிவு நீர் தொட்டியை தோண்டியபோது உள்ளே அழுகிய நிலையில் விவேக் பிரசாத்தின் சடலம் இருந்தது. அது தனது கணவரின் சடலம் தான் என்பதை அவரது மனைவி ஜெயந்தியும் உறுதிசெய்தார். சடலத்தைகைப்பற்றி பிணகூறாய்வுக்கு அனுப்பிவைத்த போலீசார் தலைமறைவாக இருந்த சேக்பாபுவை கைது செய்தனர்.
    விசாரணையில் இந்த கொலைக்கு பின்னணியில் விவேக் பிரசாத்தின் மனைவி ஜெயந்தி இருப்பது வெளிச்சத்துக்கு வந்தது. கொல்கத்தாவில் தொழில் செய்யும் போது விவேக் பிரசாத்தின் மனைவிக்கும், வேறொரு நபருக்கும் தவறான தொடர்பு ஏற்பட்டுள்ளது. அதனை தவிர்க்கவே ஜெயந்தியுடன் புதுச்சேரிக்கு குடி பெயர்ந்துள்ளார் விவேக் பிரசாத். இந்த நிலையில் தனக்கு இந்தி தெரியும் என்று வீட்டிற்குள் நுழைந்த சேக்பாபு குடும்ப விவகாரத்தை அறிந்து கொண்டான். அவ்வப்போது கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்படும் போதெல்லாம் ஆறுதல் சொல்வது போல நடித்து ஜெயந்தியை காதல் வலையில் வீழ்த்தி உள்ளான்.
    அதற்கு ஜெயந்தியும் இடம் கொடுக்க இருவருக்கும் இடையே உள்ள தவறான தொடர்பை கண்டு ஆத்திரமடைந்த விவேக்பிரசாத் தனது மனைவியை கண்டித்துள்ளார். இதையடுத்து கோடிக்கணக்கான சொத்துக்களுக்கு அதிபதியான விவேக் பிரசாத்தை தீர்த்துகட்டினால் நிம்மதியாக வாழலாம் என்ற ஜெயந்தி ஆசைகாட்ட அதன்படி புதிதாக கட்டிக்கொண்டிருக்கும் குடி நீர் தொழிற்சாலைக்கு வரவைத்த சேக்பாபு அவரை அடித்து கொலை செய்து சடலத்தை தார்பாயில் சுருட்டி புதைத்து சென்றுள்ளான் என்கிறது காவல்துறை.
    இதையடுத்து விவேக் பிரசாத்தை கொலை செய்ய தூண்டிய அவரது மனைவியையும் காவல்துறையினர் கைது செய்தனர். தவறான உடல்சார்ந்த தேடல் எப்போதும் குடும்பத்தை அழித்துவிடும் என்பதற்கு மற்றொரு சான்றாக மாறி இருக்கிறது இந்த கொடூர சம்பவம்.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad