நீதிபதி கர்ணனை இன்று கொல்கத்தாவிற்கு அழைத்துச் செல்ல நடவடிக்கை.
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், கோவையில் கைது செய்யப்பட்ட முன்னாள் நீதிபதி கர்ணன் இன்று மேற்கு வங்கத்திற்கு அழைத்துச் செல்லப்படுகிறார்.
கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த சி.எஸ்.கர்ணன், நீதிபதிகளுக்கு எதிராக ஊழல் புகார் தெரிவித்து வந்தார். இதுதொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் அவருக்கு 6 மாத சிறைத் தண்டனை விதித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த உத்தரவை நிறைவேற்றும் வகையில், அவரைக் கைது செய்வதற்காக மேற்குவங்க போலீசார் தமிழகத்தில் முகாமிட்டிருந்தனர்.
தலைமறைவாக இருந்து வந்த கர்ணன், கடந்த 12-ம் தேதி பணியிலிருந்து ஓய்வும் பெற்றார். இந்நிலையில், அவர் கோவை மாவட்டம் மலுமிச்சம்பட்டி அருகே, பண்ணை வீடு ஒன்றில் அவர் தங்கி இருப்பதை மேற்கு வங்க போலீஸார் கண்டறிந்தனர். இதையடுத்து, தமிழக போலீஸாருக்கு தகவல் தெரிவிக்காமலேயே அவர்கள் கர்ணனை கைது செய்தனர். பின்னர், கோவையில் இருந்து விமானம் மூலம் நள்ளிரவில் சென்னைக்கு கொண்டுவரப்பட்டார். விமான நிலைய ஓய்வறையில் தங்க வைக்கப்பட்டுள்ள கர்ணன், இன்று கொல்கத்தாவுக்கு அழைத்துச் செல்லப்படுகிறார்.
கருத்துகள் இல்லை