Header Ads

 • BREAKING  கேட்டல் நன்று...


  நீண்ட யோசனைகள், நேர் செய்யவே முடியாத  தொடர் கணக்கீடுகள் என ஏராளமான தாமதங்களுக்கு பிறகு ஒருவழியாய் புதிய வேலையை துவங்கியிருக்கிறேன். மாணவர்களோடு பணியாற்ற வேண்டும் என்பது எனது நீண்ட நாள் விருப்பம். உளவியல் ஆற்றுப்படுத்துனர் மற்றும் பயிற்சியாளர் எனும் துறையை தெரிவு செய்த பிறகு அந்த விருப்பம் இன்னும் தீவிரமானது. ஆனால் பள்ளி ஆற்றுப்படுத்துனர் (கவுன்சிலர்) வேலை என்பது அத்தனை சுலபத்தில் கிடைக்கும் விசயமல்ல. பல பள்ளிகளில் அப்படியான ஒரு பதவியே கிடையாது. அந்த வேலை இருக்கும் பள்ளிகள் பெருநகரங்களில் மட்டுமே உண்டு. சொற்ப சம்பளம் கிடைக்கும் அந்த வேலைக்காக குடும்பத்தோடு இடம்பெயர்வது ஒரு பொருளாதார தற்கொலை முடிவாகிவிடும் ஆகையால் அத்தகைய வாய்ப்புக்களை ஏற்க இயலவில்லை.
  ஒரு வழியாக தயக்கங்களை ஒதுக்கிவைத்து இந்த மாதம் சென்னையில் இருக்கும் பள்ளியொன்றில் ஆற்றுப்படுத்துனராக இணைந்திருக்கிறேன். குறைந்தபட்சம் 5 மாணவர்களோடு ஆளுக்கு 45 நிமிடம் பேசுகிறேன். வகுப்புக்களுக்கு நேரடியாக போய் விவாதிக்கிறேன். கூடுதலாக ஆசிரியர்கள் பெற்றோர்களை சந்திக்கிறேன். இந்த அனுபவம் 100 புத்தகங்களை வாசிப்பதைக் காட்டிலும் மேலானதாக இருக்கிறது. நல்வாய்ப்பாக கட்டுப்பாடுகள் விதிக்காத பள்ளி முதல்வர் வாய்த்திருக்கிறார், குளிர்சாதன வசதி கொண்ட அறை தரப்பட்டிருக்கிறது. எல்லாவற்றுக்கும் மேலாக தரப்படும் வகுப்பு நேரங்களை மாணவர் நலனுக்கான எந்த தலைப்பையும் எடுத்து விவாதிக்கலாம் எனும் சுதந்திரத்தை கொடுத்திருக்கிறார்கள். அனேகமாக எனக்கு தெரிந்த எந்த பள்ளி கவுன்சிலரும் பெற்றிராத வாய்ப்பு இது.
  வாரத்தில் 3 நாட்கள் வேலை என்பதால் வாரா வாரம் சென்னைக்கு பயணிக்க வேண்டும். தங்கியிருக்கும் இடத்துக்கும் பள்ளிக்கும் இடையேயான தூரத்தை கடக்க தோராயமாக 4 மணிநேரம் பிடிக்கிறது (போக வர). 2 பேருந்துகள், ஒரு ரயில் பயணம் மற்றும் நடை என சலிப்பூட்டுவதற்கான எல்லா தகுதியும் கொண்ட பயணமாக இது இருக்கிறது. பயணத்தின் விரோதியான முதுகுவலி, சென்னைக்கு விரோதியான காற்று மாசு ஒவ்வாமை (சமீபத்தில் பரிந்துரைக்கப்பட்டிருப்பது ஸ்டீராய்டு மருந்துகள்) என கூடுதல் தகுதிகள் வேறு.  ஆனால் இந்த சிறிய இடையூறுகளை பெரிய சங்கடம் இல்லாமல் சகித்துக்கொள்வதற்கான அனைத்து தகுதிகளையும் கொண்டிருக்கிறது எனது வேலைக் களம்.
  ஏழாம் வகுப்பு மாணவர்கள் பலருக்கு தமது வீட்டு முகவரி தெரியவில்லை. எட்டாம் வகுப்பு மாணவர் ஒருவர் என் பெற்றோர்கள் பணத்தை மட்டுமே லட்சியமாக கொண்டிருப்பது (உபயோகித்த வார்த்தை “மணி மைண்டட்”) எனக்கு பிடிக்கவில்லை என்கிறார். சந்திக்கும் பாதிபேருக்கு தான் சரியான மதிப்பெண் வாங்க முடிவதில்லை எனும் குற்ற உணர்வு இருக்கிறது. ஆங்கிலத்தில் பேசுவது கட்டாயமாக இருக்கும் வளாகத்தில் “நான் தமிழில் பேசலாமா என கேட்டால் “எஸ்” என வகுப்பறை அதிரும் அளவுக்கு பதில் வருகிறது (பாகுபாடின்றி எல்லா வகுப்புக்களிலும்). நான் உங்ககிட்ட சொல்றதையெல்லாம் பிரின்சிபல்கிட்ட சொல்லுவீங்களா என உறுதிப்படுத்தும் கேள்வியோடு பேச ஆரம்பிக்கிறார் 5 வகுப்பு மாணவர். இப்படி எந்த நிமிடத்திலும் ஆர்வக்குறைவை ஏற்படுத்தாத வேலையை முழுமையாக பயன்படுத்திக்கொள்ள விரும்புகிறேன். பொருளாதார இடைஞ்சல்கள் என் குரல்வளையை கடிக்கும் முன்னால் அதனை செய்தாக வேண்டும்.
  இப்படி சிறியதும் பெரியதுமான பல காரணங்களால் இனி எனது எழுத்து வேலையில் கவனம் செலுத்த இயலாது. ஆகவே  இன்னும் கொஞ்சகாலம் அரசியல் பதிவுகள் இருக்காது. தனிப்பதிவு எழுதி சொல்லுமளவுக்கு எனது எழுத்துக்கள் முக்கியத்துவம் பெற்றவை அல்ல என்றாலும் எதிர்பார்க்கின்ற சில நண்பர்களுக்கு சொல்வது அவசியமாகிறது. ஆனாலும் இந்த இடைவெளிக்கான உரிய நியாயத்தை பின் நாட்களில் செய்ய முடியும் என நம்புகிறேன்.
  BY: வல்லவன் 

  கருத்துகள் இல்லை

  Post Bottom Ad