Header Ads

 • BREAKING  கதிராமங்கலம் மீத்தேன் திட்டத்திற்கு தமிழக அரசு ஒப்புதல் தரக் கூடாது: வைகோ வேண்டுகோள்.


  கதிராமங்கலம் மீத்தேன் திட்டத்திற்கு தமிழக அரசு ஒப்புதல் தரக்கூடாது என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்
  தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் வட்டம், கதிராமங்கலம் கிராமத்தில், 2000 ஆம் ஆண்டில், ஓஎன்ஜிசி நிறுவனம் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு எடுக்க ஆழ்குழாய்கிணறு அமைத்தது. அங்கிருந்து எடுக்கப்படுகின்ற எரிகாற்று, குழாய் வழியாக குத்தாலம் மையத்திற்கு அனுப்பப்படுகின்றது.
  அடுத்து ஓஎன்ஜிசி சார்பில் கதிராமங்கலத்தில் மீத்தேன் மற்றும் ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கான திட்டத்திற்கhன ஆய்வு தொடங்க இருக்கின்ற தகவல் கிடைத்ததும், கடந்த மே19 ஆம் தேதி, ஆயிரக்கணக்கான பொதுமக்கள் திரண்டு வந்து, புதிதாகக் குழாய் அமைக்கும் பணிகளைத் தடுத்து நிறுத்தினர்.
  எண்ணெய் மற்றும் இயற்கை எரிகாற்றுக்கழகம் சார்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில், ‘கதிராமங்கலத்தில் மீத்தேன், பாறைப்படிம எரிகாற்று எனும் ஷேல்கேஸ் எடுக்கும் திட்டம் இல்லை’ என்று தெரிவிக்கப்பட்டது.
  ஆனால், அங்கு தொடர்ந்து துரப்பணப் பணிகள் நடைபெறுவதும், ஆழ்குழாய்கள் பதிக்கப்படுவதும் அப்பகுதி மக்களுக்கு ஐயத்தை ஏற்படுத்தியதால், கதிராமங்கலம் கிராமத்தில் ஜூன் 1 ஆம் தேதியும், 2 ஆம் தேதியும் பொதுமக்கள் ஓஎன்ஜிசியின் பணிகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து அணி திரண்டனர்.
  ஆனால் நூற்றுக்கணக்கான காவல்துறையினரைக் குவித்து வைத்துக்கொண்டு பொதுமக்களைக் கலைந்து செல்லுமாறு மிரட்டல் விடுத்தனர். மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக விவசாய அணிச்செயலாளர் ஆடுதுறை முருகன் மற்றும் மீத்தேன் திட்ட எதிர்ப்புக்குழு ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன் உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
  தஞ்சாவூர் மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் 691 சதுர கிலோ மீட்டர் நிலப்பரப்பில் உள்ள நிலக்கரிப் படுகையில் மீத்தேன் எடுக்க மத்திய அரசு 2010 ஆம் ஆண்டு, கிரேட் ஈஸ்டர்ன் எனர்ஜி கார்ப்பரேசன் எனும் தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து கொண்டது.
  2011 இல் தி.மு.க. அரசு, காவிரிப்படுகை மாவட்டங்களில் மீத்தேன் ஆய்வுப்பணிகளுக்கு அனுமதி வழங்கி, அந்நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்தது.
  மீத்தேன் எடுப்பதால் நிலத்தடி நீர் மாசுபடுவதுடன், சுற்றுச்சூழல் கெட்டு, பயிர் செய்ய முடியாமல் விவசாய நிலங்கள் முற்றாக அழிந்து விடும் என்பதால், பொதுமக்களும் விவசாயிகளும் மீத்தேன் திட்டத்தைக் கைவிடக்கோரி அறப்போராட்டங்களில் ஈடுபட்டனர்.
  நெடுவாசல் உள்ளிட்ட 31 இடங்களில் ஹைட்ரோகார்பன் இருப்பதைக் கண்டறிந்து ஆய்வு செய்தது ஓஎன்ஜிசி நிறுவனம்தான். எனவேதான் கதிராமங்கலத்தில், பொதுமக்கள் ஓஎன்ஜிசி நிறுவனத்தின் புதிய துரப்பணப் பணிகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்துத் தன்னெழுச்சியாகப் போராட்டக் களத்தில் இறங்கி உள்ளனர்.
  பொன் விளையும் மண்ணைப் போற்றி வணங்கி, காலம்காலமாக மேற்கொண்டு வரும் வேளாண்மைத் தொழில் அழிந்து போகாமல் வாழ்வாதாரத்தைக் காக்கப் போராடுகின்ற விவசாயிகளை அலட்சியப்படுத்தும் போக்கில் மத்திய அரசு தமிழகத்தில் மீத்தேன், ஹைட்ரோகார்பன் போன்ற திட்டங்களைச் செயல்படுத்த முனைந்து வருவது கடும் கண்டனத்திற்கு உரியது.
  கதிராமங்கலத்தில் கhவல்துறையின் மூலம் பொதுமக்களின் போராட்டத்தை ஒடுக்க முயற்சிப்பது தவறு. ஓஎன்ஜிசி நிறுவனப் பணிகளைத் தடுத்து நிறுத்தியதாகக் கைது செய்யப்பட்டுள்ளோரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்; கதிராமங்கலத்தில் மீத்தேன் திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கக்கூடாது எனத் தமிழக அரசை வலியுறுத்துவதாக வைகோ தெரிவித்துள்ளார்.

  கருத்துகள் இல்லை

  Post Bottom Ad