யார் இந்த பிரபஞ்சன்?
இன்றைய இளைய தலைமுறையினர் "யார் இந்த பிரபஞ்சன்..?" என்று
கேட்கிறார்கள். மரித்த பின் தானே அறிஞன் அதிகம் அறியப்படுகிறான்..!
புதுச்சேரி
யூனியன் பிரதேசத்தில் 1945ஆம் ஆண்டு பிறந்த பிரபஞ்சனின் இயற்பெயர்
சாரங்கபாணி வைத்தியலிங்கம்.
முறையாக
தமிழ் கல்வி பயில வேண்டும் என்பதற்காக கரந்தை கல்லூரியில் சேர்ந்து தமிழ் புலவர்
பட்டம் பெற்ற பிரபஞ்சன், தஞ்சாவூரில் தமிழ் ஆசிரியராக பணியில் சேர்ந்தார்.
பின்னர், ஒருகட்டத்தில் அந்த பணியை விட்டு விலகி முழு நேர எழுத்தாளரானார்.
1995ஆம் ஆண்டு பிரபஞ்சனின் வரலாற்றுப் புதினமான 'வானம்
வசப்படும்' என்ற புத்தகத்திற்கு சாகித்ய அகாடமி விருது
வழங்கப்பட்டது.
'வானம் வசப்படும்', 'மானுடம் வெல்லும்', 'இன்பக் கேணி', 'நேசம் மறப்பதில்லை' என மொத்தம் நான்கு வரலாற்று நாவல்களை எழுதியுள்ளார் பிரபஞ்சன்.
பிரபஞ்சனின்
படைப்புகள் இந்தி, கன்னடம், தெலுங்கு போன்ற
இந்திய மொழிகளிலும், ஜெர்மன், பிரெஞ்சு,
ஆங்கிலம், சுவீடிஷ் போன்ற பன்னாட்டு
மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
ஆம். நான் திராவிட இயக்க எழுத்தாளன்தான், திராவிட
இயக்கம் உருவாக்கிய எழுத்தாளன். திராவிட
இயக்க எழுத்தாளன் என்று சொல்லிக்கொள்ள வெட்கப்படவேண்டிய அவசியமில்லை. இந்த
தேசத்தின் 5000 வருட வரலாறு தெரிந்த எவனும் திராவிட இயக்க எழுத்தாளனாகத்தான்
இருக்கமுடியும் என்று பிரகடனம் செய்தவர் பிரபஞ்சன்.
எல்லோருக்குள்ளும்
ஓர் வாழ்க்கை இருக்கும் .
அந்த வாழ்க்கையை
எழுதுங்கள்,
எழுதுவதால் நீங்கள்
சமூகத்தின் மனசாட்சியை
தொடலாம்.
சக மனிதனுக்கு நம்மால்
நம் அன்பை எழுத்தின்
வழியே கடத்துவோம்...,
அதை விட வேறு
என்ன செய்து விட
முடியும் நம்மால்..?
-பிரபஞ்சன்.
மனிதத்தை மனிதனுக்கு
உணர்த்துவதைத் தவிர இலக்கியத்திற்கு வேறு ஒரு வேலையும் இல்லை என தனது எழுத்துகளின்
வழியே மானுடத்தை பிரதிபலித்தவர் பிரபஞ்சன். தமிழ் எழுத்துலகில் தனித்துவத்துடன் பெரும்பாய்ச்சலை
நிகழ்த்தி மானுட வாழ்க்கையின் பல்வேறு பரிணாமங்களை கண்டடைய வைத்ததுமின்றி
மனிதத்தின் மீது நம்பிக்கையை விதைத்தது அவரது புனைவெழுத்துக்கள். பிரபஞ்சன் இல்லாத
வானம் ஒருபோதும் வசப்படப்போவதில்லை. பிரபஞ்சத்தோடு பிணைந்துவிட்ட பிரபஞ்சனே
நின் எழுத்துக்கள் நீடூழி வாழும்.!
கருத்துகள் இல்லை