நேரம் என்றால் என்ன? நேரமில்லாத உலகம் எப்படி இருக்கும்?
“இறந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் இம்மூன்றையும்
வேறுபடுத்திக் காட்டுவது வெறும் மாயை மட்டுமே!” – ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்
நேரம்
என்ற ஒன்றை நாம் ஏன் உருவாக்கினோம்?
நேரம்
இல்லாத உலகம் எப்படி இருக்கும்?
டிக்… டிக்… டிக்… இதயத் துடிப்பை ஒத்த ஓசை அது. கடிகார சுழற்சியின்
குழந்தையாக அது இருந்தாலும், இவ்வுலகை, அதிலுள்ள மனிதர்களை
உயிர்ப்புடன் வைத்திருக்கும் செயல் அதுதான். இன்றைய காலகட்டத்தில் மனிதன் தன்னை ஆள
ஒன்றுக்கு அனுமதி கொடுத்திருக்கிறான் என்றால் அது இந்த நேரத்துக்கு மட்டும்தான்.
ஆனால், நம்மைப் பொறுத்தவரை, நேரம் என்றால் என்ன என்ற
கேள்விக்கு ”கடிகாரம்
என்ன காட்டுகிறதோ, அதுதான்” என்ற பதிலைத்தான் சொல்லத்
தோன்றும். உண்மையில், நேரம்
என்றால் என்ன? நாம் அதை
ஏன் பின்பற்றுகிறோம்? நேரமில்லாத
உலகம் எப்படி இருக்கும்?
மாமேதைகளான நியூட்டன்
மற்றும் கலீலியோ போன்றவர்கள்கூட,
நேரம் என்பது பூமியில் இருக்கும் அனைவருக்கும் ஒன்றுதான், ஒரே மாதிரிதான் தோன்றும்
என்ற எண்ணத்தில்தான் பல காலம் இருந்தனர். இவ்வளவு ஏன், 20-ம் நூற்றாண்டு வரை, பலரும் இப்படி ஓர்
அறியாமையில்தான் இருந்தார்கள் என்று கூறுகிறது ஓர் ஆய்வு. தற்போதைய நேரம் என்னும்
நவீனக் காலக் கோட்பாடு ஐன்ஸ்டீன் அவர்களின் ரிலேடிவிட்டி கோட்பாட்டின்படி
கட்டமைக்கப்பட்டது. தற்போதைய நவீன அறிவியல் கோட்பாடுகளின்படி, மனிதன் நாகரிகம் அடைந்த
பின்பு, அறிவியல்
சார்ந்த அறிவை வளர்த்த பின்பு, ஓடிக்கொண்டிருக்கும்
இந்த நேரத்தின் தொடக்கப்புள்ளியாக விஞ்ஞானிகள் ஒன்றை நிறுவினர். அது 13.8 பில்லியன் ஆண்டுகளுக்கு
முன்பு அதிர்வெடிப்பு (Big Bang)
நிகழ்ந்து இப்பிரபஞ்சம் ஓர் புள்ளியில் இருந்து பிரசவிக்கப்பட்ட
பின்பு விரிந்த அந்த முதல் நொடி.
எல்லாக் கோள்களும் அதனதன்
இடத்தில் சென்று அமர்ந்த பிறகு,
சுழற்சி என்ற ஒன்று தொடங்கிய பிறகு இந்த நேரமும் உயிர்பெற்றது என்று
நாம் எடுத்துக்கொள்ளலாம். அன்றிலிருந்து இன்றுவரை நடந்த செயல்களை ஓர் அமைப்பாகக்
கோக்கவும், நாளை
நடக்கவிருக்கும் செயல்களை அதே வரிசையில் அடுக்கவும் நமக்கு நேரம் தேவைப்படுகிறது.
பொதுவாக நேரம் என்பது மாற்றம் என்ற ஒன்றோடு தொடர்புடையது. ஒரு செயல்
நடைபெற்றால்தான், அதை
அடிப்படையாகக் கொண்டு நேரம் என்ற ஒன்றை உருவாக்க முடியும். அதன் பிறகு நடக்கும்
எல்லாச் செயல்களையும், அந்த
நேரம் என்ற அளவுகோல் ஒன்றைக் கொண்டு அளக்க முடியும்.
இங்கே நம் பார்வையில், நேரத்தின் அடிப்படையாக
இருப்பது கோள்களின் சுழற்சிதான். பூமி சூரியனைச் சுற்ற எடுத்துக்கொள்ளும் கால அளவை
ஒரு வருடமாகக் கொண்டு அதைக் கூறுகளாக பிரித்து, பூமி தன்னைத்தானே சுற்றிக்கொள்ள எடுத்துக்கொள்ளும் கால அளவை ஒரு நாள்
என்றும், பகல்
மற்றும் இரவுகளைப் பிரித்து மணி நேரங்கள் என்றும், அதையும் பின்னர் கூறுகளாகப் பிரித்து நிமிடங்கள், நொடிகள் என்றும்
அழைக்கிறோம். ஆக, பூமியின்
சுழற்சி என்னும் செயல்தான் நமக்கு நேரம் என்ற ஒன்றையே தருகிறது.
நேரம் என்பது நிற்காமல்
ஓடிக்கொண்டிருக்கிறது. நாம்தான் கடிகாரங்களையும், காலண்டர்களையும் வைத்து அதைக் கணக்கிட்டு
துரத்திப்பிடித்துக் கொண்டிருக்கிறோம். நேரத்தின் சிறப்பே அதை வைத்து நாம் எந்தப்
பரிசோதனையும் செய்ய முடியாது. அதாவது, அதை நிறுத்திப் பார்க்க முடியாது, திரும்பி ஓடவைக்க முடியாது. அது ஒரே திசையில்
பயணித்துக்கொண்டிருக்கும். இந்த நேரத்தை நாம் கோள்களின் சுழற்சியை அடிப்படையாகக்
கொண்டு உருவாக்கி இருந்தாலும், இன்று
அந்தச் செயல் இல்லாமலே தனித்து நிற்கும் திறன் நேரம் என்ற இந்தக் கோட்பாட்டுக்கு
உண்டு. உதாரணத்துக்கு, நம் பூமி
தன் சுழற்சியை நிறுத்திவிட்டது என்றாலும், எவ்வளவு நேரமாகச் சுற்றாமல் இருக்கிறது என்பதை நாம் கண்டறிய
முடியும்.
நேரம்
என்ற ஒன்றை நாம் ஏன் உருவாக்கினோம்?
பொதுவாக, இயற்கை என்னும் தத்துவக்
கோட்பாடு, ஒரு
செயலை மீண்டும் மீண்டும் செய்துகொண்டேதான் இருக்கிறது. உயிர்கள் பிறப்பதும், இறப்பதும், பின்பு மீண்டும் பிறப்பதும்
என நம் கோள்களின் சுழற்சி போல, கடிகாரத்தின்
சுழற்சி போல நிகழ்ந்து கொண்டேயிருக்கும் ஒரு செயல் அது. இயற்கை என்ற வார்த்தையின்
கீழ் வரும் அனைத்துமே சுழற்சியை அடிப்படையாகக் கொண்டவை. என்ன அந்தந்தப் பொருளுக்கு
ஏற்றவாறு அதனதன் சுழற்சிக்குத் தேவையான கால அளவு மட்டும் மாறுபடுகிறது. இந்த
இயற்கை உருவாக்கிய பொருள்களும் இந்தச் சுழற்சி என்ற ஒன்றை அடிப்படையாகக்
கொண்டுதான் இயங்குகின்றன. இரவானால் உறங்க வேண்டும், பகலில் எழ வேண்டும், உணவு உண்ண வேண்டும், பின்பு மீண்டும் உறங்க வேண்டும் என்பவை நம்
ஜீன்களில் பதிந்துபோன ஒரு விஷயம்.
ஆதி மனிதர்கள் ஒரு
குறிப்பிட்ட நேரத்தில் உண்டு, குறிப்பிட்ட
நேரத்தில் தம் கழிவுகளைக் கழித்து…
என்று வாழத் தொடங்கும்போது, அவர்களின் உடலும் அதற்குப் பழகிப் போகின்றன. உதாரணமாக, இன்று சூரியன் உச்சியில்
இருக்கும்போது உணவு உண்கிறார்கள் என்னும் போது, அதை மீண்டும் மீண்டும் செய்யத் தொடங்க, நாளைச் சூரியன் உச்சிக்கு வரும் முன்பே
வேட்டைக்குச் சென்றுவிட வேண்டும் என்று அவர்களுக்குத் தோன்றும். இந்தச் சூரியன்
உச்சியில் இருக்கும்போது நாம் உணவு உண்டுவிட வேண்டும் என்று அவன் முதன் முதலில்
நினைத்தபோதே அவன் நேரம் என்ற கோட்பாட்டை அவனுக்குத் தெரியாமலே உருவாக்கிவிட்டான்.
பகலானால் வேட்டை, இரவானால்
உறக்கம் என்பதும் அதற்கான உதாரணம்தான். பின்பு நாகரிகம் வளர வளர, அவன் அன்றாடம் செய்யும்
செயல்கள் அதிகமாக அதிகமாக அவற்றையெல்லாம் எப்போது செய்ய வேண்டும் என்று
குறித்துக்கொள்ள அவனுக்கு அளவுகோல் ஒன்று தேவைப்பட்டது. நேரம் என்ற கோட்பாடும்
அதனால் பரிணாம வளர்ச்சி அடைகிறது. தற்போது நேரம் என்பது மனிதன் செய்யும் ஒவ்வொரு
செயலுக்கும் ஆயங்களாக (Coordinates)
விளங்குகிறது.
நேரம்
இல்லாத உலகம் எப்படி இருக்கும்?
நேரம் இல்லாத உலகம்
குழப்பங்களின் குவியலாக இருக்கும் என்று நீங்கள் நினைத்தால் அதுதான் இல்லை. நேரம்
இல்லாத உலகம் என்பது சாத்தியமே இல்லாத ஒன்று. நேரம் என்ற ஒன்று இல்லாத உலகம் வேண்டும்
என்றால், அங்கே
இருக்கும் உயிர்களின் ஜீன்களுக்குள் ‘சுழற்சி’ என்ற
விஷயமே பதிந்திருக்கக் கூடாது. எப்போது நம் வாழ்வில் சுழற்சி என்ற ஒன்று
நுழைந்துவிட்டதோ, அப்போதே
நேரம் என்ற ஒரு கோட்பாடு உள்ளே நுழைந்துவிட்டதாகதான் அர்த்தம். அதைக் கூறுகளாக
பிரித்து கடிகாரம் கொண்டு அளக்கவில்லை, அவ்வளவுதான். உதாரணமாக ஐந்தறிவு மிருகங்களால் நேரம் என்றால்
என்னவென்று புரிந்துகொள்ள முடியாது. ஆனால், எப்போது உணவு தேடச் செல்ல வேண்டும், உணவு உண்ண வேண்டும், எப்போது இனப்பெருக்கம் செய்ய வேண்டும் போன்ற
விஷயங்கள் அதற்குத் தெரியும். அது மிருகத்துக்கு மிருகம் மாறுபடுமே தவிர, அது சுழற்சியாக நடந்து
கொண்டேதான் இருக்கும்.
துரதிர்ஷ்டவசமாக, நம் பிரபஞ்சத்தின்
இயற்பியல் விதிகளின்படி, சுழற்சி
என்ற ஒன்று இயற்கையின் தன்மையாக (Nature’s
Order) இருக்கிறது. இங்கே நாம் நேரம் என்ற ஒன்றை கழட்டி விடவே முடியாது.
நாம் நாள் முழுவதும் கடிகாரத்தைப் பார்க்காமல் தவிர்க்கலாம். ஆனால், பசித்தால் உணவு உண்ண
வேண்டும். உறக்கம் வந்தால் உறங்க வேண்டும் என உங்கள் உடலின் தேவைகள் சுழற்சி
நிலையில்தான் இருக்கும். அதை நாம் நினைத்தாலும் மாற்ற முடியாது. நம் கண்களை
மூடிக்கொண்டால் உலகம் இருட்டி விடுமா என்ன?
கருத்துகள் இல்லை