தமிழர்களின் குறும்பு: `செளகிதார்' மோடி கொண்டாட்டத்தைப் பின்னுக்குத் தள்ளிய `கான்ட்ராக்டர்' நேசமணி! #Trending
ஃபேஸ்புக்கில் உள்ள Civil Engineers Learners என்ற பக்கத்தில், மே 27ஆம் தேதியன்று சுத்தியல் ஒன்றின் படத்தை வெளியிட்டு, இதை உங்கள் நாட்டில் எப்படி அழைப்பீர்கள் எனக் கேட்கப்பட்டிருந்தது.
அந்தப் படத்தின் கீழ், துபாயில் வசிக்கும் தமிழரான விக்னேஷ் பிரபாகர் என்பவர், "இதை நாங்கள் சுத்தியல் என்று அழைப்போம். இதை எதன் மீதாவது அடித்தால் டங், டங் என சத்தம் வரும். ஜமீன் பங்களாவில் வேலை பார்க்கும்போது பெயிண்ட்டிங் கான்ட்ராக்டர் நேசமணியின் தலையை அவரது அண்ணன் மகன் இதை வைத்து உடைத்துவிட்டார். பாவம்." எனக் குறிப்பிட்டிருந்தார். அடுத்தடுத்த கமென்ட்களில், நேசமணிக்காக பிரார்த்தனை செய்யவும் என்ற பொருளில், #Pray_for_Nesamani என்ற ஹாஷ்டாகையும் பயன்படுத்தியிருந்தார்.
leaked image of Paint contractor Nesamani at Apollo hospital #Pray_For_Nesamani #Nesamani#நேசமணி#Pray_For_Nesamani pic.twitter.com/mQ4N9YtqXA— Style Pandi Memes (@StylePandimeme) May 30, 2019
சித்திக் இயக்கத்தில் விஜய், சூர்யா, வடிவேலு, ரமேஷ் கண்ணா ஆகியோர் நடித்த ஃப்ரண்ட்ஸ் திரைப்படத்தில் கட்டட வேலைகளைச் செய்யும் கான்ட்ராக்டராக வரும் வடிவேலுவின் தலையில் ரமேஷ் கண்ணா சுத்தியலைப்போடும் காட்சியையே விக்னேஷ் பிரபாகர் வேடிக்கையாகக் குறிப்பிட்டிருந்தார். அந்தப் படத்தில் வடிவேலுவின் பெயர் நேசமணி. ரமேஷ் கண்ணாவின் பெயர் கிருஷ்ணமூர்த்தி.
சிறிது சிறிதாக பிரபலமான இந்த ஹாஷ்டாக் நேற்று முதலில் சென்னையிலும் பிறகு உலக அளவிலும் ட்விட்டரில் ட்ரெண்ட் ஆக ஆரம்பித்துள்ளது. மாலை முதலே சென்னையில் இந்த ஹாஷ்டாக் முதலிடத்தில் இருந்து வருகிறது.
முதல்வர் ஜெயலலிதா உடல்நலம் குன்றி மருத்துவமனையில் இருந்தபோது ஊடகங்களில் வெளியான செய்திகளைப் போன்ற செய்திகளை வடிவேலுவை வைத்து உருவாக்கி, மீம்களும் வீடியோ காட்சிகளும் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகின்றன.
Clear CCTV footage of Krishnanmoorthy attacking #Nesamani !!
— Contractor Abdul Hai (@abd_memes) May 30, 2019
காட்சியை மையமாக வைத்து நேற்றிலிருந்தே #pray_for_nesamani ஹேஷ்டேக் ட்விட்டர், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது. இன்று இரண்டாவது முறையாக இந்தியாவின் பிரதமராகப் பதவியேற்கும் மோடிக்கு வாழ்த்துத் தெரிவிக்கும்விதமாகத் தொடங்கப்பட்ட #ModiSarkar2 மற்றும் #ModiSwearingIn ஆகிய ஹேஷ்டேக்குகளைப் பின்னுக்குத்தள்ளி நேசமணி குறித்த செய்திகளே சமூகவலைதளங்களில் முதலிடத்தில் தொடர்கின்றன.
நடந்துமுடிந்த பாராளுமன்றத் தேர்தல் முடிவுகளில் இந்தியா முழுவதும் மோடி அலை வீசினாலும், பா.ஜ.கவுக்கு எதிரான அலை தமிழகத்தில் மட்டும் வீசியது. குறிப்பாக வட இந்திய மக்களை தமிழகத்தின் தேர்தல் முடிவுகள் ஆச்சர்யப்படவைத்தன. அதேபோல இன்றும் `யார் அந்த நேசமணி?' என்று தமிழகம் தவிர்த்த இந்தியா முழுவதும் வியப்புடன் பார்க்கும்படியாக நேசமணி வடிவேலு ஹேஷ்டேக் மீம்ஸ்களும், நகைச்சுவைப்பதிவுகளும் சமூக வலைதளங்களை ஆக்கிரமித்துவருகின்றன.
இதுவரை பல்வேறு சமூக, அரசியல் பிரச்னைகளுக்காக ஹேஷ்டேக் உருவாக்கப்பட்டு டிரெண்டிங் ஆக்கப்பட்டுவந்த சூழலில் இதுபோன்ற ஒரு திரைப்படக்காட்சியை மையமாக வைத்து உலக அளவில் டிரெண்டிங் உருவாக்கப்பட்டிருப்பது பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. இது, தமிழக மக்களின், குறிப்பாக இளைஞர்களின் நகைச்சுவை உணர்வை வெளிப்படுத்துவதாக உள்ளது.
இன்னும் சிலர் பா.ஜ.க வினர் செளகிதார் என்னும் பெயரைப் பயன்படுத்தியதைப் போன்று கான்ட்ராக்டர் என்னும் பெயரை தங்களின் சமூகவலைதளப் பெயருக்குப் பின்னால் சேர்த்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
வடிவேலு சினிமாவில் நடிப்பதைக் குறைத்துக்கொண்டாலும், அவரது நகைச்சுவை இன்னமும் மக்கள் மத்தியில் பிரபலமாக இருப்பதையே இது காட்டுகிறது. இதேபோல மற்ற சமூகப்பிரச்னைகள் குறித்தும் ஹேஷ்டேக்குகள் டிரெண்டிங். ஆனால் நன்றாக இருக்குமே எனச் சிலர் ஆதங்கப்படுவதையும் பார்க்க முடிகிறது.
கருத்துகள் இல்லை