Header Ads

 • BREAKING  பாஜக ஆட்சியில் பாசிசத்தின் 7 அறிகுறிகள், மோடியை சாடிய திரிணாமுல் MP மஹுவா.


  மக்களவைத் தேர்தலுக்குப் பிறகான முதல் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. முதல் கூட்டம் என்பதால் குடியரசுத் தலைவர் உரையுடன் தொடங்கியது. இதில் கடந்த இரண்டு நாள்களாகக் குடியரசுத் தலைவரின் உரைக்கும் நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெற்று வருகிறது.

  இந்தக் கூட்டத்தில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மஹுவா மொய்த்ரா தன் முதல் உரையிலேயே பா.ஜ.க-வை துவம்சம் செய்துள்ளார். தன் சிறப்பான உரையின் மூலம் இந்திய அளவில் கவனம் பெற்றுள்ளார் மஹுவா.

  `அமெரிக்காவில் ஹோலோகாஸ்ட் நினைவு அருங்காட்சியகத்தில் பாசிசத்தின் குறியீடு உள்ளது. அதில் சொல்லப்பட்டுள்ள 7 அறிகுறிகளும் இந்தியாவில் காணப்படுகிறது' எனக் குற்றம்சாட்டியுள்ளார் மஹுவா.

  தொடர்ந்து பேசிய அவர், ``பா.ஜ.க கூட்டணியின் வெற்றிக்கு வித்திட்ட மக்கள் தீர்ப்பை ஏற்றுக்கொண்டாலும், அதன் மறுபக்க அதிருப்தியின் குரல்களைக் கேட்க வேண்டியது அவசியம். இங்கு 'அச்சா தின்' எனக் கூறுவீர்கள். அரசு கட்டியெழுப்ப விரும்பும் இந்தியப் பேரரசின் மீது சூரியன் ஒருபோதும் அஸ்தமிக்காது. ஆனால், இந்த நாடு சிதைந்துபோகும் சில அறிகுறிகளை நீங்கள் காணவில்லை. கண்களை நன்றாகத் திறந்து பார்த்தால் மட்டுமே அந்த அறிகுறிகளை உங்களால் பார்க்க முடியும்.

  தேசியவாதம்

  தற்போது நாட்டில் உள்ள தேசியவாதம் என்பது மனித உரிமைகளை அவமதித்தல், கருத்து வேறுபாடுகளை ஒடுக்குதல், ஊடகங்களின் கட்டுப்பாடு, தேசியப் பாதுகாப்பு மீதான பதற்றம் மற்றும் மதவாதம் போன்றவற்றைக் கொண்டுள்ளது. 50 வருடங்களாக ஒரு மாநிலத்தில் வாழ்பவர்கள், தாங்கள் அந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்தாம் என்பதை நிரூபிக்க ஒரு சிறிய காகிதம் போதுமானதாக உள்ளது. ஆனால், இதே நாட்டில் அமைச்சர்கள் கல்லூரியில் பெற்ற பட்டத்தைக் காட்ட முடியவில்லை.

  மனித உரிமைகள் மீதான அவமதிப்பு

  சமீபத்தில் ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஓர் இஸ்லாமிய இளைஞர் அடித்தே கொலை செய்யப்பட்டார். 2014 முதல் 2019-ம் ஆண்டு வரை இந்தியாவில் வெறுப்பு அரசியலின் குற்றங்கள் 10 மடங்கு அதிகரித்துள்ளன.

  ஊடகங்களை அடிபணியச் செய்தல்

  இந்தியாவின் மிகப் பெரும் செய்தி ஊடகங்களின் அமைப்பு ஒரு தனி மனிதருக்காகக் கட்டுப்படுத்தப்படுகின்றன அல்லது மறைமுகமான முறையில் கடன்பட்டதாக உள்ளன. பெரும்பாலான தொலைக்காட்சிகள் ஆளும்கட்சிக்கு ஆதரவாக ஒளிபரப்பு செய்கின்றன. ஆளும் அரசு, ஒவ்வொரு தனி ஊடகத்துக்கும் அளித்த விளம்பரப் பணத்தின் மதிப்பை வெளியிட  முடியுமா?" என்றும் மஹுவா கேள்வி எழுப்பினார்.

  தொடர்ந்து, "மத்திய தகவல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் மற்றும் உள்ளடக்கங்களைக் கண்காணிக்க மட்டுமே 120 பேரை பணியில் அமர்த்தியுள்ளது.

  தேசிய பாதுகாப்பு மீதான பதற்றம்

  தேசிய பாதுகாப்புக்கான அரசின் பதற்றமிகு போக்குகள் மற்றும் எதிரிகளை அடையாளம் காண்பது என்பது ஜனநாயகத்துக்கு நான்காவது பாசிசமாக அச்சுறுத்தலாக உள்ளது. இந்தியாவின் எல்லையில் வீரர்களின் உயிரிழப்பு 106 சதவிகிதம் அதிகரித்துள்ளது. அதேபோல் பயங்கரவாதிகளின் தாக்குதல்களும் பன்மடங்கு அதிகரித்துள்ள நிலையில்கூட, அரசோ தேசப் பாதுகாப்பை முன்வைத்துப் பெருமை பீற்றிக்கொண்டிருக்கிறது.
   
  மதத்துடன் பிணைந்த அரசு

  இதுபற்றிப் பேச நிறைய நிறைய விஷயங்கள் உள்ளன. நம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அயோத்தியாவில் உள்ள 2.77 எக்கரில் ராமர் கோயில் நிலத்தில் மட்டுமே அதிக அக்கறை காட்டுகின்றனர். மீதமுள்ள 12.100 மில்லியன் ஏக்கர் நிலம் அவர்களுக்குத் தெரிவதில்லை.

  கலை மீதான வெறுப்பு

  கலை மீதான முழுமையான வெறுப்பு ஓர் ஆபத்தான அறிகுறி. அரசியலமைப்பின் 51-வது பிரிவு விஞ்ஞான மனநிலையை உணர்த்துகிறது என்றாலும், இந்தியாவில் தாராளமயமான கல்வி நிதி குறைக்கப்பட்டு வருகிறது. பாடப்புத்தகங்கள் ஆளும்கட்சிக்கு ஆதரவாகவே உருவாக்கப்படுகின்றன.

  சுதந்திரமான தேர்தல் எங்கே?

  சமீபகாலமாகத் தேர்தல் ஆணையம் குறிப்பிட்ட சில அதிகாரிகளை மாற்றும் அமைப்பாகவே செயல்பட்டு வருகிறது. நாடாளுமன்ற பிரசாரத்தின்போது கோடிகளில் செலவழித்தவர்களுக்கு எதிராக ஏன் இந்த தேர்தல் ஆணையம் செயல்படவில்லை" என்றும் மஹுவா கேள்வி எழுப்பியுள்ளார்.

  "இந்தத் தேர்தலில் மொத்தமாக 60,000 கோடி ரூபாய் செலவழிக்கப்பட்டுள்ளது. அதில் 27,000 கோடி அதாவது 50 சதவிகித பணத்தை ஒரே ஒரு கட்சி மட்டும் செலவழித்துள்ளது" என்றார் மஹுவா.

  கருத்துகள் இல்லை

  Post Bottom Ad